மாயவன் – விமர்சனம்

விஞ்ஞானத்தில் மனிதன் புதிது புதிதாக எதையாவது கண்டுபிடித்துக்கொண்டு இருந்தாலும், அவற்றில் பெரும்பாலும் மனிதர்களுக்கு தீமைகளை ஏற்படுத்தும் அம்சங்களே அதிகம் இருக்கின்றன என்பதை கிளியர் கட்டாக விவரிக்கும் படம் தான் இந்த மாயவன்.

இளம் போலீஸ் உயரதிகாரி சந்தீப். சென்னையில் அடுத்தடுத்து அடுத்தடுத்து நடைபெறும் சில கொலைகளில் ஒரே மாதிரியான தடயங்கள் கிடைப்பதை வைத்து குற்றவாளியை தேடுகிறார். ஒரு கட்டத்தில் கொலைசெய்வது ஒரே ஆள் தான், ஆனால் அவன், வெவ்வேறு நபர்களின் மூலம் கொலைகளை செய்து வருகிறான் என்கிற அதிர்ச்சிகரமான தகவல் தெரிய வருகிறது.

அப்படியானால் அவன் கூடுவிட்டு கூடு பாயும் வித்தை கற்றவனா..? இல்லை.. விஞ்ஞானத்தின் மூலமாக ஆயிரக்கணக்கான வருடங்கள் அழியாமல் வாழும் சாகாவரம் பெற்ற ஒருவன் தான் இந்த வேலையை செய்வதை கண்டும் பிடித்துவிடுகின்றனர்.. அது என்ன சாகாவரம்..? அது உண்மையா..? அப்படியானால் சாகாவரத்தை தீமைகளுக்ககாவே பயன்படுத்தும் அவனை ஹீரோவால் என்ன செய்ய முடிந்தது என்பது மீதிக்கதை.

ஒரு தயாரிப்பாளராக வித்தியாசமான படங்களாக தயாரித்து வந்த சி.வி.குமார் முதன்முறையாக தானே இயக்கியுள்ள படம் என்பதால் இந்தப்படமும் அவரது பெயர் சொல்லும்படி, படம் நெடுக அதிர்ச்சிகளுக்கும் ஆச்சர்யங்களுக்கும் பஞ்சம் இல்லாமலேயே இருக்கிறது.

இதில் நடித்தவர்கள் தான் நம்ம ஊர் ஆட்களே தவிர, படம் ஹாலிவுட் பாணியில் இருப்பதும், திரைக்கதையை விறுவிறுப்பாக்கி இருப்பதும் படத்துடன் நம்மை கட்டிப்போட்டு விடுகின்றன.

போலீஸ் அதிகாரியாக நடித்துள்ள சந்தீப்புக்கு, கமர்ஷியல் ஹீரோ ரூட்டில் பயணிக்க புதிய பாதை போட்டு கொடுத்துள்ளது இந்தப்படம். பொலேஎஸ் என்றாலும் வேற தீர சாகசங்கள் என இல்லாமல், யதார்த்த லெவலில் தனது கேரக்டரை பிரதிபலித்துள்ளார் சந்தீப்.. மனநல மருத்துவராக லாவண்யா திரிபாதியும் வழக்கமான டூயட் பாடும் ஹீரோயினாக இல்லாமல், கதையை விட்டு விலகாமல் தனது நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார்.

க்ளைமாக்ஸ் நெருங்கும் வேளையில் ராணுவ அதிகாரியாக் என்ட்ரி கொடுக்கும் ஜாக்கி ஷெராப் கடைசி இருபது நிமிடங்களை தன கையில் எடுத்துக்கொண்டு அதிரவைக்கிறார். படம் முழுதும் லைட்டான காமெடி மற்றும் சென்டிமென்ட் கலந்த ரோலில் பளிச்சிடுகிறார் பகவதி பெருமாள். படத்தில் செயற்கை வில்லன்களாக உருமாறும் ஜிம் ட்ரெய்னர் சாய்தீனா, மேக்கப் மேன் மைம் கோபி, தன்னம்பிக்கை வகுப்பெடுக்கும் டேனியல் பாலாஜி என மூவரின் நடிப்புமே மிரட்டல் ரகம்..

ஒரு விஞ்ஞான ஆராய்ச்சியாளன் எந்த அளவுக்கு தன்னம்பிக்கையும் திமிராகவும் இருப்பான் என்பதை தனது கெத்தான நடிப்பால் வெளிபடுத்தியுள்ளார் அமரேந்திரன். கூடவே புரிந்துகொள்ள மிக கஷ்டமான அந்த ஆராய்ச்சியை மிக எளிதாக விளக்கும் கேரக்டரில் ஜெயபிரகாஷும் ஒரு அருமையான ஆசானாகவே தெரிகிறார். இவர்கள் தவிர படம் முழுதும் பயணிக்கும் அந்த போலீஸ் உயரதிகாரியின் யதாரத்தமான நடிப்பையும் நாம் பாராட்டியே ஆகவேண்டும்.

கோபி அமர்நாத்தின் ஒளிப்பதிவில் ஹாலிவுட் தரம். ஜிப்ரானின் பின்னணி இசை அந்த தரத்தை அப்படியே படம் முழுதும் தக்கவைக்கிறது. கலை இயக்குனர் கோபி ஆனந்தின் உருவாக்கத்தில் அந்த ஆராய்ச்சிக்கூட வடிவமைப்பு அசத்தல்

இப்படி நடந்தால் எப்படி இருக்கும் என்கிற விதமாக கற்பனைத்திறனுடன் உருவாகும் படங்களுக்கு எப்போதுமே வரவேற்பு உண்டு.. அந்த வகையில் மாயவன் மூலம் அந்த எதிர்பார்ப்பையும் நம்பிக்கையும் உண்மையென ஒரு இயக்குனராகவும் மாறி நிரூபித்துள்ளார் சி.வி.குமார்