மான் கராத்தே – விமர்சனம்

சாஃப்ட்வேர் நிறுவனத்தில் வேலைசெய்யும் ஐந்துபேர் ஜாலியாக மலைப்பகுதியில் சுற்றுப்பயணம் செய்கிறார்கள். அப்போது அங்கே சந்திக்கும் ஒரு சித்தரின் மாயாஜாலம் மூலமாக இன்னும் நான்கு மாதங்கள் கழித்து வரப்போகும் தினத்தந்தி நாளிதழ் ஒன்று முன்கூட்டியே அவர்களுக்கு கிடைக்கிறது.

பேப்பரில் போட்டிருந்த செய்திப்படியே அவர்கள் வேலைபார்க்கும் நிறுவனம் மூடப்படுகிறது. அதேபோல அதில் குறிப்பிட்டபடி ஆலங்கட்டி மழை பெய்கிறது. இதனால் ஆச்சர்யப்பட்ட அவர்களுக்கு மேலும் இன்ப அதிர்ச்சி கொடுக்கும் விதமாக பீட்டர் என்கிற குத்துச்சண்டை வீரரால் 2கோடி ரூபாய் பரிசுத்தொகை ஐந்து பேருக்கும் கிடைக்கப்போவதாகவும் குறிப்பிடப்பட்டிருக்கிறது.

இதை முன்கூட்டியே அறிந்ததால் யார் அந்த பீட்டர் என தேடி, அவர் சிவகார்த்திகேயன் தான் என்பதை உறுதி செய்துகொண்டு அவர்மூலம் அந்த 2கோடியை ‘லபக்’ செய்ய நினைக்கிறார்கள். பாக்ஸிங் பற்றி எதுவும் தெரியாத அவரை பாக்ஸராக்க நிறைய செலவு செய்கிறார்கள். முதலில் பிகு பண்ணும் சிவகார்த்திகேயன் தான் காதலிக்கும் ஹன்சிகா தன்னை ஒரு பாக்ஸர் என நம்புவதால் அதற்காக பயிற்சியில் ஈடுபடுகிறார்.

ஆனால் இடையில் தான் தெரியவருகிறது, இவரோடு மோத இருக்கும் எதிரிதான் உண்மையான பாக்ஸரான பீட்டர் என்பது. இப்போது அந்த ஐந்துபேரும் என்ன முடிவெடுக்கிறார்கள், சிவகார்த்திகேயன் போட்டியில் கலந்துகொண்டாரா, பரிசு யாருக்கு கிடைத்தது என்பதெல்லாம் கடைசி அரைமணி நேர க்ளைமாக்ஸ்..

‘பின்னர் நடக்கப்போவது முன்கூட்டியே தெரிந்தால்..’ என்கிற மாயாஜால ஒன்லைனை வைத்து காமெடி தோரணம் கட்டியிருக்கிறார்கள். சொல்லித்தெரிவதில்லை காமெடி கலை என்பது மாதிரி சிவகார்த்திகேயனுக்கு ஏற்ற ‘பீலா’ விடும் ராயபுரம் பீட்டர் வேடம். ஹன்சிகாவுடன் காதல், அவரது அப்பா சாயாஜி ஷிண்டேவுடன் திருக்குறள் கலாட்டா, பாக்ஸிங் பயிற்சி என்ற பெயரில் நண்பர்களை கிறங்கடிப்பது என ஆல் ஏரியாவிலும் ஸ்கோர் செய்கிறார் சிவகார்த்திகேயன். க்ளைமாக்ஸில் ஆக்‌ஷன் அவதாரமும் எடுக்கிறார்.

ஹன்சிகாவிற்கு இதில் பாதிப்படம் வரை ‘ஓகே ஓகே’, ‘தீ.வே.செ.குமாரு’ படங்களில் செய்த காதலிக்க பிகு பண்ணும் அதேவேலைதான். ஆனால் இடைவேளைக்குப்பின் குறிப்பாக க்ளைமாக்ஸ் காட்சிகளில் நன்றாகவே ஸ்கோர் செய்கிறார். சதீஸ் அன்கோ சிவகார்த்திகேயனிடம் சிக்கிக்கொண்டு படும் அவஸ்தைகள் சரியான கலாட்டா.

இடைவேளைக்கு பிறகு பாக்ஸிங் ரெஃப்ரீயாக சர்ப்ரைஸ் எண்ட்ரி கொடுக்கும் சூரி, ஐந்து நிமிடமே வந்தாலும் அதகளம் பண்ணுகிறார். உண்மையான பாக்ஸராக கொடூரம் காட்டியிருக்கிறார் வம்சி கிருஷ்ணா.

படத்திற்கு அனிருத்தின் இசை ரொம்பவே பலம். ‘டார்லிங் டம்பக்கு’, ‘ஓப்பன் த டாஸ்மாக்’ ஆகிய இரண்டு பாடல்களும் துள்ளல் ரகம். சுகுமாரின் கேமரா மலைப்பகுதி காட்சிகளில் அழகும், பாக்ஸிங் காட்சிகளில் ஆக்ரோஷமும் காட்டியிருக்கிறது.

ஏ.ஆர். முருகதாஸின் கதைக்கு திரைக்கதை அமைத்து இயக்கியுள்ளார் திருக்குமரன். சிவகார்த்திகேயனிடம் ரசிகர்கள் என்னவெல்லாம் எதிர்பார்க்கிறார்களோ அதை சரியாக தந்திருக்கிறார். இருந்தபோதும் பாக்ஸிங்கை மையமாக வைத்து பின்னப்பட்ட கதையில் சிவகார்த்திகேயனிடம் அதற்கான சீரியஸ்னெஸ் இல்லை என்பது கொஞ்சம் இடிக்கிறது.

அதனாலேயே க்ளைமாக்ஸில் அவர் வில்லனை வீழ்த்துவதை, கதைக்கு ஓகே என்றாலும்கூட முழு மனதுடன் ஒப்புக்கொள்ள முடியவில்லை. ஆனாலும் கடைசி அரைமணி நேரம் இயக்குனர் விறுவிறுப்பு காட்டியிருந்தார் என்பது உண்மை. சிவகார்த்திகேயனின் காமெடியும் அனிருத்தின் பாடல்களும் சுட்டீஸ்களை ரொம்பவே கவரும் என்பதில் ஐயமில்லை.