தண்ணியடிக்காத கேரக்டர் தந்துட்ட்ட்ட்டாங்க” – சந்தோஷத்தில் ‘கொம்பன்’ கார்த்தி..!

 

பக்காவான ப்ரீ ப்ளானோடு கார்த்தி நடித்துள்ள ‘கொம்பன்’ படம் வரும் மார்ச்-27ஆம் தேதி ரிலீஸுக்கு தயாராக உள்ளது. அதற்கான முன்னோட்டமாக நேற்று நடைபெற்ற கொம்பன் படத்தின் இசை வெளியீட்டு விழா அமைந்தது.. ஸ்டுடியோ கிரீன் தயாரித்துள்ள இந்தப்படத்தை ‘குட்டிப்புலி’ முத்தையா இயக்கியுள்ளார். இசை ஜி.வி.பிரகாஷ்.

பாலாவின் ‘தாரை தப்பட்டை’ மூலம் பாடலாசிரியராக அறிமுகம் ஆகியிருப்பவர் கவிஞர் தனிக்கோடி. இன்னும் அந்தப்பாடல் வெளிவராத நிலையில், இவருக்கு கொம்பன்’ படத்தில் ஒரு பாடல் எழுத அடுத்த வாய்ப்பு தந்துள்ளார் இயக்குனர் முத்தையா.. பாடல் நன்றாக இருக்கவே, ஒன்று இரண்டாகி, இரண்டு மூன்றாகிவிட்டது.. ஆம்.. மொத்தம் மூன்று பாடல்கள் எழுதியிருக்கிறார் தனிக்கோடி. கார்த்தியின் ஒப்பனிங் பாடலை அவரிடம் பாடிக்காட்டிவிட்டு, இதற்கு இன்னொரு ஆப்சனும் இருக்கு சார் என சொல்ல, “இந்தப்பாடலே சூப்பரா இருக்கு.. அப்புறம் எதுக்கு ஆப்சன்’ என முதல் பாடலையே கார்த்தி ஓகே சொல்லிவிட்டாராம்.

ராமநாதபுரம் பகுதியை சேர்ந்த மகாலிங்கம் என்கிற நாட்டுப்புற கலைஞரையும் ஒரு பாடல் எழுத வைத்திருக்கிறார்கள். இவர் தான் பாடல் எழுது உள்ளே வந்த கதையை கூறியதை கேட்டால் தெரியும் அவர் எவ்வளவு வெள்ளந்தியான மனிதர் என்பது. வாய்ப்பு கிடைக்குமோ கிடைக்காதோ என்கிற ஒருவித அவநம்பிக்கையுடன் தான் பாடலை எழுதினாராம் மகாலிங்கம். இவரது பாடல் இடம்பெற்றதோடு, கடைசியில் இவரை மேடையேற்றி அழகு பார்த்த கார்த்தி, “அண்ணே ஒங்க பாட்ட வச்சிட்டோம்.. படத்துலயும் வந்துடுச்சு” என்று சொல்லி உற்சாகப்படுத்தினார்.

கார்த்திக்கு மாமாவாக நடிக்கும் தம்பி ராமையாவுக்கு, ஒரு நல்லவனை கூடவே இருந்து எப்படி நாசம் பண்ணலாம் என்கிற மாதிரியான கேரக்டர். கருணாஸுக்கோ இதில் குணச்சித்திர கதாபாத்திரம். அது மட்டுமல்ல, சூர்யாவுடன் ‘நந்தா’ படத்தில் தனது முதல் அடியை எடுத்துவைத்த கருணாஸுக்கு, அவரது தம்பி கார்த்தியுடன் நடித்துள்ள இந்த ‘கொம்பன்’ தான் நூறாவது படமாம். இரண்டிலும் ராஜ்கிரண் இருக்கிறார் என்பது ஏதேச்சையாக அமைந்த கூடுதல் சிறப்பு.

படத்தில் வில்லத்தனம் காட்ட புறப்பட்டுள்ளார் ஸ்டண்ட் மாஸ்டர் சூப்பர் சுப்பராயன். இந்தப்படத்தின் ஆர்ட் டைரக்டராகவும் பணியாற்றிக்கொண்டு, ஒரு முக்கிய வேடத்திலும் நடித்துள்ள வீரசமருக்கு தான் என்ன கேரக்டரில் நடித்துள்ளோம் என்றே இன்னும் தெரியாதாம். அதனால் பட ரிலீஸுக்காக ஆவலுடன் காத்திருக்கிறேன் என்கிறார் ஏக்கத்துடன். ‘படிக்காசு’ என்கிற வேடத்தில் இயக்குனர் ஜி.மாரிமுத்து நடித்திருக்கிறார். ‘மதயானை கூட்டம்’ படத்தில் நடிப்பால் மிரட்டிய வேலா ராமமூர்த்தியும் இதில் இருக்கிறார்.

படத்திற்கு கிடைத்த ‘வி.ஐ.பி’ கேமராமேன் வேல்ராஜ். இவரிடம் படப்பிடிப்புக்கு கிளம்பும் முன்னர், இரண்டு கண்டிசன்கள் போடப்பட்டன.. ஒன்று கிராமத்தை கிராமமாகவே காட்டவேண்டும்.. இன்னொன்று கார்த்தியை அழகாக காட்டக்கூடாது என்பதுதான். இதில் முதல் நிபந்தனையை வெற்றிகரமாக நிறைவேற்றிய இவர், இரண்டாவது நிபந்தனையில் தோற்றுவிட்டதாக அவரே வாக்குமூலம் கொடுத்தார்.

“எனக்கு சிட்டி சப்ஜெக்ட் எடுக்க வராது” என ஓபன் டாக்குடன் ஆரம்பித்த படத்தின் இயக்குனர் முத்தையா, மாமனார், மருமகனுக்கு இடையே உள்ள வெளியே தெரியும் ஈகோ, வெளியே தெரியாத பாசம் இவற்றை மையப்படுத்தி இந்தப்படத்தை எடுக்க காரணம், சிறுவயது முதல் அவரது அப்பாவுக்கும் தாத்தாவுக்கும் இடையே இருந்த ஈகோ தானாம்.

“பொண்ணை பெற்ற தகப்பன்களுக்கு காலம் முழுவதும் ஒருவித பயம் இருந்துகொண்டே இருக்கும்.. அதை அற்புதமாக கதையில் கொண்டு வந்திருக்கிறார் இயக்குனர் முத்தையா” என புகழாரம் சூட்டினார் கார்த்திக்கு மாமனாராக நடித்திருக்கும்  ராஜ்கிரண்.

“இந்தப்படத்துல எனக்கு தண்ணியடிக்காத கேரக்டர் என்பது முதல் சந்தோசம்.. அதுமட்டுமல்ல ஹைடெக் போன் வச்சிருக்கிற ஆட்டு வியாபாரியா இதுல நடிச்சிருக்கேன்.. பருத்திவீரனுக்கும் இந்தப்படத்துக்கும் எந்தவித சாயலும் இருக்காது” என உத்திரவாதம் கொடுத்தார் கார்த்தி.

பின்குறிப்பு : படத்தின் கதாநாயகி லட்சுமி மேனன் ப்ளஸ்டூ தேர்வு எழுதுவதால் (இன்னுமா.!?) இசைவெளியீட்டு விழாவில் கலந்துகொள்ளவில்லையாம்.