“உத்தம வில்லன் சொன்ன தேதியில் ரிலீஸாகும்” – லிங்குசாமி திட்டவட்ட அறிவிப்பு..!

நட்சத்திர அந்தஸ்து உள்ள படங்கள் வெளியாகவிருக்கும் சமயத்தில் எல்லாம் ஒரு சிலர் தங்களது சுய விளம்பரத்திற்காக வேண்டுமென்றே பிரச்சனைகளை ஏற்படுத்துவது வாடிக்கையாகவே ஆகிவிட்டது.. கடந்த மார்ச் மாதம் முழுவதும் ‘கொம்பன்’ பஞ்சாயத்து ஓடியது என்றால், இந்த மாத டார்கெட் ‘உத்தமவில்லன்’.

ஆனால் திரையுலகம் இதுநாள் வரை சந்திக்காத கோணத்தில் இருந்து இப்போது உருவாகியுள்ளது இந்த பிரச்சனை. சினிமா சார்ந்து தொழில் செய்யும் தியேட்டர் அதிபர் ஒருவரே பணம் கொடுக்காவிட்டால் உத்தம வில்லன் வெளியாக ஒத்துழைக்க மாட்டோம் என கட்டப்பஞ்சாயத்தில் இறங்கியுள்ளது அதிர்ச்சி தருவதாக இருக்கிறது.

ஆனால் கமலின் பக்கம், திருப்பதி பிரதர்ஸின் பக்கம் நியாயம் இருப்பதை உணர்ந்து நேற்று மீண்டும் திரையுலக முக்கிய பிரமுகர்கள் ஒன்று கூடினார்கள். கூட்டத்தில் லிங்குசாமி பேசும்போது, குறிப்பிட்ட சிலர் பணத்தை கேட்டு மிரட்டுவதாக சூசகமாக குறிப்பிட்டார். மேலும் விஸ்வரூபம் பட வழக்கையும் உத்தம வில்லன் படத்தையும் தொடர்பு படுத்தவேண்டாம் என்றும் கேட்டுக்கொண்டார்.

விஸ்வரூபம் பட பிரச்சனையில் கமல், தான் தொடர்ந்த வழக்கில் சமரசத்துக்கு தயாராக இருப்பதாகவும், ஆனால் தீர்ப்பு கோர்ட்டின் கைகளில் தான் இருக்கிறது என்றும் திருப்பூர் விநியோகஸ்தரான சுப்ரமணியம் குறிப்பிட்டார்.

அதே நேரம் சென்னையில் 22 தியேட்டர்களில் உத்தமவில்லனை வெளியிடும் உரிமையை வாங்கியுள்ள அபிராமி ராமநாதன், தனது முழு ஆதரவும் உத்தமவில்லன் ரிலீஸுக்கு உண்டு என்றும், லிங்குசாமி மே-1ஆம் தேதி எக்காரணத்தை கொண்டும் படத்தை ரிலீஸ் செய்வதை நிறுத்தக்கூடாது என்றும் பகிரங்கமாக அறிவித்துவிட்டார்.

கொம்பன் பிரச்சனையில் ஒன்று சேர்ந்து தங்களது ஒற்றுமையை பதிவு செய்த திரையுலகத்தினர், இப்போது உத்தம வில்லனுக்காக மீண்டும் ஒன்றுகூடியுள்ளது நல்ல விஷயம் தான்.. ஆனால் இது மட்டுமே போதாது, இனிவரும் காலங்களில் எதிர்ப்பவர்களுக்கு சட்ட ரீதியான பிரச்சனைகளை திருப்பி உருவாக்கினால் தான், இதுபோன்ற பூனைகளுக்கு மணி கட்ட முடியும்.