லிங்கா – விமர்சனம்

 

தாத்தா கட்டிய அணைக்கட்டிற்கு வரும் ஆபத்தை பேரன் தடுத்து நிறுத்துவதுதான் ‘லிங்கா’வின் ஒருவரி கதை..

எழுபது வருடங்களுக்கு முன், ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில், ராஜாவாகவும் கலெக்டராகவும் இருந்த ராஜா லிங்கேஸ்வரன், கிராமத்து மக்களை வெள்ளத்தில் இருந்து காக்கவும் அவர்களது விவசாயம் மற்றும் குடிநீர்த்தேவையை பூர்த்தி செய்யவும், தனது அரண்மனை மற்றும் சொத்துக்களை விற்று சொந்த செலவில் அணை ஒன்றை கட்டுகிறார்.

ஆனால் இன்று அந்த அணையை சுயநல எம்.பி ஒருவன், பணத்திற்காக வெடிவைத்து தகர்க்க முயல்கிறான். ஆனால் காலம் லிங்கேஸ்வரனின் பேரனான லிங்காவை அந்த ஊருக்கு வரவழைத்து, வில்லனின் முயற்சியை முறியடித்து அணையை காப்பாற்றுகிறது.

லிங்கேஸ்வரன், லிங்கா என இரண்டு வேடங்களில் ரஜினி.. இதில் லிங்கா ரஜினி படு ஸ்டைலாக வலம் வருகிறார். சந்தானம், கருணாகரன் கூட்டணியுடன் காமெடி, அனுஷ்காவுடன் ரொமான்ஸ் கலாட்டா என ரஜினி படத்திற்கான விஷயங்கள் எதுவும் குறையவில்லை..

ஆனாலும் பிளாஸ்பேக்கில் வரும் லிங்கேஸ்வரன் ரஜினி தான் ரேசில் முந்துகிறார். மிடுக்கு, கம்பீரம் என நிறைவான நடிப்பு. இரண்டே முக்கால் மணி நேரப்படத்தில் அவரே இரண்டு மணி நேரத்தை எடுத்துக்கொள்வது கூட ரஜினி பட பிளாஸ்பேக்குகளில் புதுசு. ஆனால் ரஜினி தனது சொத்துக்களை மக்களுக்கு எழுதி வைக்கும் காட்சிகள் ஏற்கனவே ‘முத்து’வில் பார்த்த சாயலில் இருப்பதை தவிர்த்திருக்கலாம்..

எழுபது வருடத்திற்கு முந்தைய கிராமத்து பெண்ணாக காட்சியளிக்க முயற்சி செய்திருக்கும் சோனாக்ஷியை விட, அனுஷ்கா தான் ரஜினிக்கு படு மேட்சிங்காக இருக்கிறார் என்பது உண்மை. ரஜினிக்கு இணையாக சந்தானம் அவ்வப்போது சரவெடிகளை கொளுத்திப்போட எல்லாமே நன்றாகவே வெடிக்கின்றன. அதிலும் கே.எஸ்.ரவிக்குமாருக்கு அவர் கொடுக்கும் ‘பினிஷிங்’ டச் சூப்பரோ சூப்பர்..

ரஜினி, சந்தானம் இருவரோடு கருணாகரனும், பாலாஜியும் கரைசேர்ந்திருக்கிறார்கள். ஆச்சர்யமான இன்னொரு விஷயம் ரஜினியின் நண்பர்களான விஜயகுமார், ராதாரவி, நடராஜ், மனோபாலா, அனுமோகன், இளவரசு, ஆர்.சுந்தர்ராஜன், நிழல்கள் ரவி என அனைவருக்கும் சரிசமமான வாய்ப்பு கொடுத்திருப்பதுடன் சரியான கதாபாத்திரங்களையும் கொடுத்திருக்கிறார்கள்.

வில்லனாக ஜெகபதி பாபு, வில்லனாக வந்து நல்லவராக மாறும் தேவ்கில், இன்ஸ்பெக்டராக வரும் பிரம்மானந்தம் இவர்களும் படத்தின் கதை நிகழும் லொக்கேஷன்களும் ஆந்திராவுக்குள் இருப்பது போன்ற உணர்வையே ஏற்படுத்துகின்றன.

ரத்தினவேலுவின் ஒளிப்பதிவில் அணைக்கட்டு காட்சிகள் அனைத்துமே பிரமாண்டம் பிளஸ் அழகோ அழகு. ஏ.ஆர்.ரகுமான் இசையில் பாடல்கள் ஒருமுறை கேட்பதற்கு நன்றாக இருந்தாலும் இன்றைய இளசுகளுக்கு ஏற்ற மாதிரி இருந்தாலும், ஒரு சராசரி ரஜினி ரசிகனை திருப்திப்படுத்தும் அளவுக்கு இல்லை என்பதை ஒத்துக்கொண்டுதான் ஆகவேண்டும்.

தமிழர்களுக்காக அணைகட்டிய பென்னிகுக் கதாபாத்திரத்தை மையப்படுத்தி, ரஜினியின் கதாபாத்திரத்தை வடிவமைத்து கதையை நகர்த்தியிருப்பது ஒவ்வொரு காட்சியிலும் நன்றாகவே வெளிப்படுகிறது. ஆனால் பிளாஸ்பேக் காட்சியின் நீளத்தை சுருக்கி, நிகழ்கால பிரச்சனைகளை அதிகப்படுத்தி அதற்கு தீர்வு கண்டிருந்தால் இது வழக்கமான அக்மார்க் ரஜினி படமாக இருந்திருக்கும்..

ரஜினியின் படங்கள் என்றாலே படம் நகரும் விதத்தில் ஒரு ஸ்பீட் இருக்கும்.. ஆனால் இந்தப்படத்தில் அந்த வேகம் சற்றே குறைந்திருப்பது உண்மை. சிவாஜி, இந்திரன் என ஹைடெக் ரஜினியை எதிர்பார்த்து வருபவர்களுக்கு கொஞ்சம் ஏமாற்றமே.. அந்தவகையில் லிங்கா மூலம் ரஜினியின் கிரீடத்தில் மேலும் ஒரு வைரத்தை பதிக்க முயற்சி செய்து மயிலிறகை மட்டும் பதித்திருக்கிறார் இயக்குனர் கே.எஸ்.ரவிகுமார்.