லென்ஸ் – விமர்சனம்

lens review

வீட்டின் அறைக்கதவை பூட்டிக்கொண்டு இணையதளத்தின் மூலம் முகமறியா பெண்களிடம் சல்மான் கான்களாகவும் ஷாருக்கான்களாகவும் நடமாடும் சில வக்கிர மனித மிருகங்களை பற்றிய கதை தான் இந்த ‘லென்ஸ்’ படம்.

திருமணமான இளம் மனைவி மிஷா கோஷல் வீட்டில் இருந்தாலும், அறையை பூட்டிக்கொண்டு இணையதளத்தில் புதிது புதிதாக பெண் நட்பு தேடுபவர் ஜெயபிரகாஷ் அப்படி ஒரு பெண்ணுடன் ஆபாசமான வீடியோ சாட்டிங்கில் முகமூடி அணிந்து ஈடுபடுகிறார்.. ஆனால் அவரது அதீத ஆர்வமே அவரை சிக்கலில் மாட்டிவிடுகிறது..

ஆம்.. ஆனந்த் சாமி என்பவரிடம் ஜெயபிரகாஷின் இணையதள பாலியல் சீண்டல்கள் அத்தனையும் வீடியோ ஆதாரமாக சிக்க, அவற்றை வைத்து அவரை பிளாக்மெயில் செய்கிறார் ஆனந்த் சாமி.. பணம் கேட்டோ, அல்லது வேறு எதுவும் கேட்டோ அல்ல.. தான் தற்கொலை செய்துகொள்வதை ஜெயபிரகாஷ் லைவாக பார்க்கவேண்டும் என்று..

இப்படிக்கூட யாராவது பிளாக்மெயில் பண்ணுவார்களா..? அவர் ஏன் ஜெயபிரகாஷ் பார்க்கும்படியாக தற்கொலை பண்ணவேண்டும் என்கிற கேள்வி இயல்பாகவே நமக்கு எழுகிறது.. போகப்போக இணையதளத்தில் ஆபாச பக்கங்கள் மூலமாக ஆனந்தசாமி வாழ்க்கையில் ஜெயபிரகாஷ் ஏற்படுத்திய மோசமான பாதிப்பும் தெரியவருகிறது..

அப்படி என்ன செய்தார் ஜெயபிரகாஷ்..? அதற்காக தான் ஏன் தற்கொலை செய்துகொள்ள திட்டமிட்டார் ஆனந்த் சாமி..? அதுவும் ஜெயபிரகாஷ் முன்பாக..? இதற்கு தெளிவாக விடை சொல்கிறது மீதிப்படம்..

இன்று இணையதளத்தில் செயற்கையாக அல்லாமல் இயற்கையாக திருட்டுத்தனமாக படம்பிடிக்கப்பட்ட அப்பட்டமான பாலியல் காட்சிகள் இடம்பெறுகின்றன.. அதை ரசித்து பார்ப்பவர்களுக்கு அது ஒரு அரைமணி நேர பொழுதுபோக்கு மட்டுமே.. ஆனால் அந்த வீடியோவில் சம்பந்தப்பட்டவர்களுக்கோ..? அவர்கள் வாழ்க்கையே கேள்விக்குறியாகி விடுகிறது..

இந்த அதிரவைக்கும் மையக்கருத்தை எடுத்துக்கொண்டு ஜெயபிரகாஷ், ஆனந்த் சாமி என இரண்டு கேரக்டர்கள் மீது மொத்தப்படமும் ட்ராவல் பண்ணுகிறது.. நடித்திருக்கும் ஜெயபிரகாஷ் தான் இயக்குனரும் கூட.. ஆனால் தனக்கு நெகடிவ் ரோலை எடுத்துக்கொண்டு வில்லன் போன்ற ஹீரோயிச கேரக்டரை ஆனந்த் சாமிக்கு விட்டு தந்ததற்கு அவரை பாராட்டியே ஆகவேண்டும்.. சல்மான் கான் முகமூடியை மாட்டிக்கொண்டு பெண்களை சாட்டிங்கில் வசியப்படுத்தும் வக்கிர உணர்வை அப்படியே பிரதிபலித்துள்ளார்

மிகவும் பக்குவப்பட்ட நடிப்பாலும் வசன உச்சரிப்பாலும் உடல் மொழியாலும் ஒரு புதுமுக நடிகர் என தோன்றாமல் வெகு யதார்த்தமாக நடித்துள்ளார் ஆனந்த் சாமி. படம் பார்க்கும் பலருக்கும் இவரை பார்க்கும்போது நடிகர் ரகுவரன் மனதில் வந்து போவது உறுதி.. பிளாஸ்பேக்கில் வரும் அஸ்வதி லால் வாய் பேசாமல் கண்களாலும் பேப்பராலுமே பேசி நம் மனதை கரைய வைக்கிறார். அவரது முடிவு நம் மனதை கனக்க வைக்கிறது.

படம் பார்க்கும் ஒவ்வொருவருக்கும் ஒரு படிப்பினையாக இருக்கும் என்பதால்தான், இந்தப்படத்தை தயாரித்தது, இயக்கியது யாரோ எவரோ என்றாலும் கூட தனது சொந்த நிறுவனம் மூலம் வெளியிட்டுள்ளார் இயக்குனர் வெற்றிமாறன்.

இரண்டு மணி நேர விறுவிறுப்பான த்ரில்லர் படம் என்பது மட்டும் நிச்சயம்