லக்ஷ்மி – விமர்சனம்

lakshmi movie review

முழுக்க முழுக்க நடனத்தை, நடன போட்டியை முன்னிறுத்தி வெளியாகியுள்ள படம் ‘லக்ஷ்மி’.

கணவனை இழந்து, மகள் லக்ஷ்மியுடன் (பேபி தித்யா) தனியாக வசிக்கிறார் ஐஸ்வர்யா. தித்யாவுக்கு நடனம் என்றால் உயிர். ஆனால் ஐஸ்வர்யாவோ நடனத்தை வெறுக்கிறார். இந்த நிலையில் தனியாக பள்ளி சென்று வரும் தித்யா, அம்மாவுக்கு தெரியாமல் வழியில் ரெஸ்டாரண்ட் நடத்தும் பிரபுதேவாவுடன் ப்ரண்ட்ஷிப் பிடித்து அவர்மூலமாக, இந்திய அளவில் நடைபெறும் நடன போட்டியில் கலந்து கொள்ள உள்ளே நுழைகிறார்.

நித்யாவின் கோச் சோபியா தனது மகனை முன்னிறுத்த விரும்பி தித்யாவை ஒதுக்குகிறார். அதற்கேற்ப முதல் ரவுண்டு தேர்வில் மேடை பயத்தால் நித்யா சொதப்ப, அவர்களது டீமே வெளியேறும் சூழல் உருவாகிறது. இந்த சமயத்தில் பிரபுதேவா இந்த பிரச்சனையில் குறுக்கிட, தேர்வுக்குழு, சோபியா ஆகியோருக்கு அவர் யாரென தெரியவருகிறது.

அதன் பின் சென்னை டீம் மும்பையில் நடைபெறும் போட்டியில் கலந்து கொள்ள வேண்டுமென்றால் நீங்கள் இதை செய்யவேண்டும் என பிரபுதேவாவுக்கு நிபந்தனை விதிக்கிறார் போட்டியை நடத்தும் மும்பை அணியின் கோச் யூசுப் கான். அது என்ன நிபந்தனை.? நிபந்தனையை பிரபுதேவா ஏற்றாரா..? உண்மையில் பிரபுதேவா யார்..? தித்யாவை மும்பை போட்டியில் கலந்து கொள்ள ஐஸ்வர்யா ராஜேஷ் அனுமதித்தாரா..? நடனத்தை அவர் ஏன் வெறுக்கிறார் என்பது உட்பட பல கேள்விகளுக்கு மீதிப்படம் விடை சொல்கிறது.

குழந்தைகளுக்கான நடனம், அவர்கள் உலகம் இதில் பிரபுதேவாவுக்கு என்ன வேலை, அவர்களுடன் எப்படி இணைகிறார் என்கிற குழப்பமே வராமல் அழகாக திரைக்கதை அமைத்துள்ளார் இயக்குனர் விஜய். குழந்தைகளை ஊக்கப்படுத்தி போட்டிகளில் கலந்து கொள்ள செய்யும் பிரபுதேவாவுக்கு ரொம்பவே பொருத்தமான கேரக்டர்.. பாட்ஷா எபக்டில் அவருக்கு வைக்கப்பட்டுள்ள பிளாஷ்பேக் காட்சியை இண்டர்வெல்லாக மாத்தியிருந்தால் இன்னும் பரபரப்பு கூடியிருக்கும்.

லக்ஷ்மியாக வரும் பேபி தித்யா முதல் காட்சியிலிருந்தே நம் மனதை ஆக்கிரமிக்கிறார். உடம்பா, ரப்பரா என கேட்கும் அளவுக்கு டான்ஸிலும் பட்டையை கிளப்புகிறார்.. வகுப்பறையில், ரெஸ்ட்டாரெண்டில் , பஸ்ஸில் என அவர் செய்யும் சேட்டைகள் எல்லாம், லாஜிக்கை மீறியவை என்றாலும் ரசிக்க முடிகிறது. அம்மா கேரக்டரில் ஐஸ்வர்யா ராஜேஷ் கச்சிதம் என்றாலும் அவருக்கான வேலை குறைவு தான்… அவரது கேரக்டர் வடிவமைப்பில் உள்ள குறைகளை இன்னும் சரி செய்து இருக்கலாம்.

பொறாமை பிடித்த கோச்சாக வரும் சோபியா தமிழுக்கு நல்லதொரு அறிமுகம்.. கருணாகரனுக்கும் ஜார்ஜூக்கும் காமெடி செய்வதற்கு குறைவான வாய்ப்பு தான்.. பயன்படுத்த முயற்ச்சித்திருக்கிறார்கள். அர்ஜூனாக வரும் சிறுவனை விட, அர்னால்டு என்கிற பெயரில் அட்டகாசம் செய்யும் அந்த குண்டுப்பையன் கலக்குகிறான். சல்மான் யூசுப் கானின் கேரக்டரில் வில்லத்தனத்தை வலிந்து திணித்திருப்பது நன்றாகவே தெரிகிறது.. லாஜிக்கே இல்லை என்பதால் பள்ளி முதல்வராக வரும் கோவை சரளாவின் காமெடியை அவ்வளவாக ரசிக்க முடியவில்லை. கோவை சரளா தனது சேஷ்டைகளை குறைத்து, இன்னொரு மனோரமாவாக மாற வேண்டிய நேரம் வந்துவிட்டது.

படத்தின் முக்கிய பலம் டான்ஸ் போட்டி சம்பந்தப்பட்ட காட்சிகளும் அதை ஒளிப்பதிவாளர் நீரவ்ஷா படமாக்கிய விதமும் தான். சாம் சி.எஸ்ஸின் பாடல்களும் நடனப்போட்டிகளின் நம்பகத்தன்மைக்கு துணை நின்றிருக்கிறது. குழந்தை கண்காணிப்பு விஷயத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் நடந்துகொள்ளும் விதமும், அம்மாவுக்கு குழந்தை டிமிக்கி கொடுக்கும் விதமும் நடைமுறையில் சாத்தியமில்லாத ஒன்று என்பதால் மனதில் ஒரு குறையாகவே நின்றுவிடுகிறது.

அதே சமயம் நடனத்தை விட்டு விலகாமல் நேர்கோடாக படத்தை இயக்கியுள்ளதற்காக இயக்குனர் விஜய்யை பாராட்டலாம்.. குறிப்பாக இத்தனை குழந்தைகளை கட்டி மேய்த்து இந்தப்படத்தை சுவாரஸ்யம் குறையாமல் எடுத்திருப்பதே மிகப்பெரிய சாதனை தான்.

குழந்தைகளையும் அழைத்துக் கொண்டு பெற்றோர்கள் சென்று பார்க்க வேண்டிய படம் தான் இந்த லக்ஷ்மி .