நடனத்தை மையப்படுத்தும் படங்களில் ‘லக்ஷ்மி’ தனி இடம் – விஜய் நம்பிக்கை..!

‘தியா’ படத்தை தொடர்ந்து இயக்குனர் விஜய் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘லக்‌ஷ்மி’. ப்ரமோத் ஃபிலிம்ஸ் மற்றும் ட்ரைடெண்ட் ஆர்ட்ஸ் நிறுவனம் இணைந்து தயாரித்திருக்கின்றனர். பிரபுதேவா, ஐஸ்வர்யா ராஜேஷ், பேபி தித்யா உள்ளிட்ட பலர் நடித்திருக்கும் இந்தப்படம் முழுக்க முழுக்க நடனத்தை மையப்படுத்தி உருவாகியுள்ளது. வரும் ஆகஸ்ட் 24-ம் தேதி இந்தப்படம் வெளியாகவுள்ள நிலையில் சந்திப்பில் குறித்த தகவல்கலைகளையும் அனுபவங்களையும் படக்குழுவினர் பகிர்ந்துகொண்டனர்.

இதில் பிரபுதேவா பேசியபோது, “முதலில் விஜய் ஒரு டான்ஸ் படம் எடுக்க ஐடியா இருக்கிறது என்று சொன்னார். நாம் எடுத்தால் ‘தேவி’ போல ஒரு படம் எடுக்க வேண்டும் இல்லைன்னா எடுக்க கூடாது என்று சொன்னேன். ‘இல்லை. டான்ஸ் படம் எடுக்கலாம்’ என்று பேசி ஒப்புக் கொள்ள வைத்தார். அதனைத் தொடர்ந்து இந்தியா முழுவதும் உள்ள நடனக் கலைஞர்களை தேர்வு செய்தார்.

இப்படத்தில் நடித்திருக்கும் குழந்தைகள் மிகச்சிறப்பாக நடித்திருக்கிறார்கள். நான் 4,5 டேக் வாங்கினாலும் குழந்தைகள் குறிப்பாக தித்யா முழு டான்ஸையும் ஆடி முடித்து தான் நிறுத்துவார். ‘சலங்கை ஒலி’ என்ற டான்ஸ் படம் இதற்கு முன்பு வெளிவந்திருக்கிறது. அது வேற லெவல். அதனோடு இதை ஒப்பிட வேண்டாம்

விஜய் மிகவும் நல்லவர் அதனால் தான் எனக்கும் அவருக்கும் செட் ஆகிறது. இந்த படத்துக்கு பிறகு ‘தேவி 2’ படத்திலும் இணைய உள்ளோம். ஐஸ்வர்யா அமைதியான பொண்ணு. ‘நீங்கள் நல்ல டான்சர். நடிப்புக்கும் கொடுக்கும் முக்கியவத்தை நடனத்துக்கும் கொடுக்க வேண்டும் என்று அவரிடம் அடிக்கடி சொல்வேன். கடைசியில் நம்ம படத்திலேயே டான்ஸ் இல்லாமல் போய்விட்டது” என தனது பேச்சால் கலகலப்பூட்டினார்.

ஐஸ்வர்யா ராஜேஷ், “திருமணத்திற்கு முன்பே காக்கா முட்டை, ஆறாது சினம் ஆகிய படங்களில் அம்மா கதாபாத்திரம் பண்ணிட்டோம். கொஞ்சநாள் அதெல்லாம் விட்டுட்டு கமர்ஷியல் ஹீரோயின் ரோல் பண்ணலாம்னு தான் இருந்தேன். தயக்கத்தோடு தான் இயக்குநர் விஜய் கிட்ட கதை கேட்டேன். ஆனா, கதை கேட்டதும் பிடிச்சது, ஒத்துக்கிட்டேன். பிரபுதேவா ஒரு லெஜெண்ட். அவரோடு நடிக்கிறது ரொம்பப் பெருமையா இருந்தது. நடிகர், நடன இயக்குநர் எல்லாத்தையும் தாண்டி அவரிடம் நல்ல நகைச்சுவை உணர்வு இருந்தது. லக்ஷ்மி படத்தில் பணியாற்றிய எல்லாக் குழந்தைகளும் மிகவும் திறமைசாலிகள். படம் கண்டிப்பா குழந்தைகளைக் கவரும் விதமாக இருக்கும்” என்று கூறினார்

இயக்குனர் விஜய் பேசும்போது, “தமிழ் சினிமாவில் சலங்கை ஒலிக்குப் பிறகு ஒரு பெரிய நடன திரைப்படமாக லக்ஷ்மி அமையும்” என நம்பிக்கை தெரிவித்தார்.