லால் பகதூர் சாஸ்திரி – விமர்சனம் (மலையாளம்)

நடிகர்கள் : ஜெயசூர்யா, நெடுமுடி வேணு, அஜு வர்கீஸ், சான்ட்ரா சைமன் மற்றும் பலர்..

படத்தொகுப்பு : சந்தீப் நந்தகுமார்

இசை : பிஜிபால்

ஒளிப்பதிவு : எல்டோ இஷாக்

இயக்கம் : ரெஜிஸ் மிதிலா

லால் பகதூர் சாஸ்திரி என பெயரை பார்த்ததும் நமது முன்னாள் பிரதமர் பற்றிய படமோ என நினைத்து விடவேண்டாம்.. ஜனரஞ்சகமான காமெடி படமே தான்..

அரசு வேலையில் சேர சிபாரிசு கேட்டு எர்ணாகுளத்தில் உள்ள அதிகாரி ஒருவரை சந்திக்க செல்கிறார் ஜெயசூர்யா (லால்). அவருடன் பஸ்ஸில் சக பயணியாக அறிமுகமாகிறார் நெடுமுடிவேணு (பகதூர்).. இவர்களுடன் உடன் பயணிக்கிறார் அர்ஜூன் என்கிற சினிமா சண்டை கலைஞர்..

இவர்கள் கூடவே ஜெயசூர்யாவால் பெண்பார்க்க வருவதாக சொல்லிவிட்டு சூழ்நிலை காரணமாக பார்க்க முடியாமல் போன பெண்ணான சான்ட்ரா சைமனும் பயணிக்கிறார். பஸ்ஸில் அமர்ந்திருக்கும் நெடுமுடிவேணு லாட்டரி விற்கும் பையனிடம் ஒரு லாட்டரி வாங்க, அவன் பாக்கி சில்லறை இல்லாததால் இன்னொரு லாட்டரியை ஜெயசூர்யாவின் மடியில் போட்டுவிட்டு அவருக்கு மீதியை கொடுத்துவிடுங்கள் என சொல்லிவிட்டு ஓடிவிடுகிறான்..

எர்ணாகுளம் சென்றதும் அனைவரும் அவரவர் வேலைகளுக்காக பிரிகின்றனர். ஜெயசூர்யாவிடம் வேலைக்காக ஒரு லட்சம் லஞ்சம் கேட்கிறார் அதிகாரி. சினிமா ஷூட்டிங்கில் சண்டைக்காட்சியில் அர்ஜுன் விபத்தில் சிக்குகிறார். ஏதேச்சையாக அந்தப்பக்கம் வந்த ஜெயசூர்யா அவரை மருத்துவமனையில் சேர்த்துவிட்டு அர்ஜூனின் நண்பரான அஜு வர்கீஸிடம் (சாஸ்திரி) போனில் தெரிவிக்கிறார்.

மருத்துவமனையில் லால் – பகதூர் – சாஸ்திரி மூவரும் ஒன்றாக சந்திக்கின்றனர்.. அப்போது ஜெயசூர்யாவுக்கு லாட்டரியில் ஒரு கோடி ரூபாய் விழுந்த விபரத்தை சொல்கிறார் நெடுமுடிவேணு. ஆனால் லாட்டரியோ காலையில் அதிகாரியை சந்திக்க சென்ற இடத்தில் மிஸ்ஸாகி விட்டது.

இந்த லாட்டரியை தேடி மூவரும் அலையும் அலைச்சல் தான் இடைவேளைக்குப்பினான படம்.. இப்போது அந்த லாட்டரி அதை விற்ற சிறுவனிடமே சென்றுசேர, விஷயம் தெரிந்த லஞ்ச அதிகாரி அதை தட்டிப்பறிக்க முயல, ஜெயசூர்யாவுக்கு கோடீஸ்வரன் ஆகும் அதிர்ஷ்டம் கிட்டியதா என்பதுதான் க்ளைமாக்ஸ்..

ஒரே நாளில் நிகழும் கதைக்களத்தில் வருடத்திற்கு ஐந்து படங்களாவது மலையாளத்தில் வெளியாகின்றன. அந்தவகையில் ஒரு லாட்டரியை வைத்துக்கொண்டு ஒரே நாளில் நிகழும் சம்பவங்களை பரபரப்பாக படமாக்கியிருக்கிறார்கள்..

இரண்டு மணி நேரத்திற்கு பத்து நிமிடம் குறைவான படம்.. கிட்டத்தட்ட ஒரே இடத்தில் நீண்டு செல்லும் காட்சிகள் என ஒரு ஆர்ட் சினிமா பாணியில் இருந்தாலும் சுவராஸ்யம் குறையாமல் சொல்லியிருக்கிறார்கள்.

கதாநாயகன் ஜெயசூர்யா தான் என்றாலும் அவருக்கு சற்றும் குறைவில்லாத வேடம் நெடுமுடி வேணுவுக்கும் அஜூ வர்கீஸுக்கும். லாட்டரி தொலைந்துவிட்டது என்றதும் இவர்கள் மூவரும் படும் பாட்டை படு காமெடியாக வெளிப்படுத்தியிருக்கிறார்கள்.

எந்த பலனும் எதிர்பாராமல் கூடவே சுற்றும் நெடுமுடி வேணுவும் லாட்டரி கைக்கு கிடைத்தால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் தன் நண்பனுக்கு ஏதாவது உதவுங்கள் என கோரிக்கை வைக்கும் அஜு வர்கீஸ் இருவரும் நம் மதிப்பில் உயர்கிறார்கள்.

கதாநாயகி சான்ட்ரா சைமனுக்கு வரும் காட்சிகளில் எல்லாம் கண்களாலேயே பேசும் வேலை தான்.. அழகாக இருக்கிறார்.. அளந்து பேசுகிறார். க்ளைமாக்சில் லாட்டரி இவர் கையில் சிக்குவது ட்விஸ்ட்..

இவர்களைத்தவிர லாட்டரி விற்கும் சிறுவனாக நடித்திருப்பவன் நம் மனதில் நிறைகிறான். நேர்மையை மட்டுமே மனதில் இருத்தி, கோடி ரூபாய் பரிசு விழுந்த லாட்டரியை அதன் உரிமையாளரிடம் ஒப்படைத்துவிட அவன் படும் கஷ்டங்கள் தான் படத்தின் அடிநாதம்..

ஆனால் இறுதிக்காட்சியில் அந்த லாட்டரியால் ஜெயசூர்யா மட்டுமே பயன் அடைந்திருப்பதாக காட்டுவதுடன் அதற்கு உதவியவர்களுக்கும் அந்த தொகை பயன்படுவதாக காட்டியிருந்தால் நிறைவாக இருந்திருக்கும்..

படத்தின் முதல் பாதி மெதுவாக நகர்வதற்கு பிஜிபாலின் இசையும் ஒரு காரணம் என்றாலும், இடைவேளைக்குப்பின் அவரது இசையில் கதை வேகம் பிடிப்பது உண்மை… ஜெயசூர்யாவின் கிராமமாக காட்டப்படும் பகுதியை எங்கே பிடித்தார்களோ தெரியவில்லை.. இரண்டு பக்கமும் நீர் நிரந்த ஏரியும் நடுவில் செல்லும் சிறிய சாலையும் எல்டோ இஷாக்கின் ஒளிப்பதிவில் நம் கண்களைவிட்டு அகல மறுக்கின்றன..

அதிர்ஷ்டம் யாருக்கு வேண்டுமானாலும் எப்போது வேண்டுமானாலும் அடிக்கலாம்.. அது கை நழுவிப்போனாலும் மனிதாபிமானமும் நேர்மையும் அதை மீண்டும் நமக்கே கொண்டுவந்து சேர்க்கும் என்பதைத்தான் இந்தப்படம் எடுத்துரைக்கிறது.