குற்றமே தண்டனை – விமர்சனம்

kuttrame thandanai

தேசியவிருது பெற்ற ‘காக்கா முட்டை’ இயக்குனர் மணிகண்டனின் அடுத்த படைப்பு என்பதால் மிகுந்த எதிர்பார்ப்புடன் வெளியாகியுள்ள இந்தப்படம் அந்த எதிர்பார்ப்பை நிறைவேற்றியுள்ளதா..?

கிரெடிட் கார்டு பணம் வசூயக்கும் தனியார் நிறுவனத்தில் வேலை பார்க்கிறார் விதார்த். தனக்கு நேரெதிரில் உள்ள பொருளையோ, அல்லது நபரின் முகத்தையோ பார்க்கும் அளவுக்கு பார்வை குறைபாடு உள்ளவர். அவரது கண் மாற்று சிகிச்சைக்கு 3 லட்சத்துக்கு மேல் தேவைப்படுகிறது.

இந்நிலையில் அவரது வீட்டின் எதிர் வீட்டில் வசிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் திடீரென கொல்லப்படுகிறார். கொலை நடந்த நேரத்திற்கு சற்று முன்னதாக ஒரு வாலிபனையும் அதன்பின்னர் ஒரு தொழிலதிபரான ரகுமானையும் அங்கே பார்க்கிறார் விதார்த்.. தன்னை பார்த்த உண்மையை சொல்லாமல் இருக்க விதார்த்தின் கண் சிகிச்சைக்கான பணத்தை கொடுக்கிறார் ரகுமான். சிகிச்சைக்கு மேலும் அதிக பணம் தேவைப்பட மீண்டும் ரகுமானிடம் மீண்டும் பணம் வாங்குகிறார் விதார்த்.

மூன்றாவது முறையும் சூழல் காரணமாக சிகிச்சைக்காக ரகுமானிடம் பணம் கேட்டு நெருக்க, அவர் தர மறுக்கிறார். போலீசிடம் ரகுமானை போட்டுக்கொடுக்க போலீஸ் ஸ்டேஷன் செல்லும் விதார்த், எதிர்பாராத விதமாக ஐஸ்வர்யா வீட்டில் பார்த்த இளைஞனை அங்கே பார்த்ததும் தனது திட்டத்தை மாற்றி அவனை போட்டுக்கொடுக்கிறார்.

அந்த இளைஞனின் தரப்பில் விதார்த்திடம் பேரம் பேசப்படுகிறது. அவர் கேட்ட பணம் தருவதாகவும் முன்தொகையாக ஒரு லட்சமும் தருவதாகவும் கூறி, அந்த பையனுக்கு சாட்சி சொல்லவேண்டாம் என்கிறார்கள். அதற்கும் ஒப்புக்கொள்ளும் விதார்த், நீதிமன்ற விசாரணையின்போது அந்த இளைஞனையே மாட்டி விடுகிறார். அவர்கள் கொடுத்த பணத்தையும் கொடுத்துவிட்டு, தனது வேலையை விட்டுவிட்டு வேறு மாநிலத்துக்கு செல்கிறார்..

விதார்த் திடீரென அந்த இளைஞனை மாட்டிவிட என்ன காரணம்..? ஐஸ்வர்யா ராஜேஷை கொலை செய்தது யார்..? எதற்காக கொன்றார்கள் என்கிற முடிச்சுக்களை அவிழ்க்கிறது க்ளைமாக்ஸ்..

விதார்த்துக்கு நீண்ட நாளைக்குப்பிறகு மிகவும் பக்குவமான கேரக்டர்.. நேர்த்தியாக அதை பிரதிபலித்திருக்கிறார். குறிப்பாக பார்வை குறைபாட்டால் பாதிக்கப்பட்டவனின் மன இயல்புகளையும் நடவடிக்கைகளையும் அழகாக வெளிப்படுத்தி இருக்கிறார். ஆரம்பத்தில் அவர்மீது பரிதாபம் தோன்ற செய்து, போகப்போக கோபம் கொள்ளச்செய்கிறது திரைக்கதை.

தொழிலதிபாராக ரஹ்மான்… தனது கௌரவத்தை காப்பற்றிக்கொள்ள செய்யாத குற்றத்திற்காக பிளாக் மெயிலுக்கு கட்டுப்படும்போது பரிதாபப்பட வைக்கிறார். விதார்த்திற்கு நல்வழி கூறி திசைதிருப்பும் கண்ணியமான கேரக்டரில் நாசர்.

மாடர்ன் யுவதியாக ஐஸ்வர்யா ராஜேஷ்.. திடீரென கொல்லப்பட்டாலும் பிளாஸ்பேக் காட்சிகளின் மூலம் அவ்வப்போது தலைகாட்டுகிறார். தேர்ந்த அளவான நடிப்பு.. டெலிகாலர் பணிபுரியும் பெண்ணாக பூஜா தேவார்யா. .’இறைவி’க்கும் இதற்கும் தான் எவ்வளவு வித்தியாசம் காட்டியிருக்கிறார் நடிப்பிலும் உருவத்திலும்..?
லாயரின் உதவியாளராக ‘ஜோக்கர்’ குருசோமசுந்தரம்.. இதில் ஆளே அடையாளம் தெரியாமல் மாறியிருக்கிறார்.. பாடல்களை திணித்து திரைக்கதையை சிதைக்க விரும்பாத மணிகண்டன், இளையராஜாவின் பின்னணி இசையை வைத்தே முழுப்படத்தையும் நகர்த்தி இருக்கிறார். அது சரியான முடிவு என்பது படம் பார்க்கும்போதே நம்மால் உணரமுடிகிறது.

ஒரு கொலை, அதன் பின்னணியில் ஒரு சஸ்பென்ஸ், ஒரு பிளாக் மெயில், ஒரு சமரசம் என நான்கைந்து விஷயங்களை ஒரு நூலில் கோர்த்து திரைக்கதை மாலையாக்கி இருக்கிறார் மணிகண்டன். படம் மெதுவாக நகர்வது பலவீனம்.. இன்னொரு பக்கம் குற்றமே தண்டனை என்பதற்காக இறுதிக்காட்சியில் நாம் காண்பது சரியான தண்டனையாக தெரியவில்லையே என்பது உறுத்தலை தருகிறது.

கமர்ஷியல் அம்சங்கள் எதையும் கலக்காமல் ஒரு நீட்டிக்கப்பட்ட ஷார்ட் பிலிம் போல படமாக்கப்பட்டிருப்பது தான் இந்த படத்தின் பிளஸ்ஸும் மைனஸும்..

உங்களிடம் நிறைய எதிர்பார்த்தோம் மணிகண்டன்..