அருண்விஜய் முதன்முதலாக போலீஸ் அதிகாரி வேடத்தில் நடித்துள்ள படம் ‘குற்றம்-23’. க்ரைம் கதை மன்னன் ராஜேஷ்குமாரின் ஒரு நாவலில் உள்ள கருவை மையப்படுத்தி, மெடிக்கல் க்ரைம் ஆக்சன் த்ரில்லராக இந்தப்படம் உருவாகியுள்ளது. ‘ஈரம்’ அறிவழகன் இயக்கியுள்ள இந்தப்படத்தின் கதாநாயகியாக மஹிமா நம்பியார் நடித்துள்ளார். விஷால் சந்திரசேகர் இசையமைத்துள்ளார்.
இதோ அதோ என போக்கு காட்டிக்கொண்டிருந்த ‘குற்றம்-23’ படம் ஒரு வழியாக மார்ச்-3ல் ரிலீஸாகிறது. இந்தப்படத்தை அக்ராஸ் பிலிம்ஸ் பிரபு வெங்கடாச்சலம் (வி.பிரபு) தமிழகம் முழுவதும் வெளியிடுகிறார். இவர்தான் ‘கொடி’ திரைப்படத்தின் சேலம் பகுதி விநியோக உரிமையை வாங்கி வெளியிட்டவர்.
அந்த வெற்றியை தொடர்ந்து, திரையுலகின் மூத்த தயாரிப்பாளர் கலைப்புலி எஸ் தாணுவோடு இணைந்து, ‘பறந்து செல்ல வா’ படத்தையும் தமிழகத்தில் பிரபு வெங்கடாச்சலம் விநியோகம் செய்தது குறிப்பிடத்தக்கது. அதுமட்டுமின்றி ‘டூ மூவி பஃப்ஸ்’ நிறுவனத்தோடு கைக்கோர்த்து ‘திட்டம் போட்டு திருடற கூட்டம்’ படத்தையும் தற்போது தயாரித்து வருகிறார்.
‘என்னை அறிந்தால்’ திரைப்படத்திற்கு பிறகு, அருண் விஜயின் நடிப்பில் வெளியாகும் திரைப்படம் ‘குற்றம் 23′ என்பதால், இந்த படம் வர்த்தக உலகில் பெரும் வரவேற்பை ஏற்படுத்தி வருகிறது. நிச்சயமாக மார்ச் 3 ஆம் தேதி வெளியாகும் ‘குற்றம் 23′ திரைப்படம் ஒவ்வொரு ரசிகரையும் கவரும்” என்று நம்பிக்கையுடன் கூறுகிறார் “பிரபு வெங்கடாச்சலம்”.