குரங்கு பொம்மை – விமர்சனம்

kurangu bommai review

விதார்த், பாரதிராஜா நடிப்பில் உருவாகியிருக்கும் படம் தான் குரங்கு பொம்மை அறிமுக இயக்குனர் நித்திலன் இந்தப்படத்தை இயக்கியுள்ளார்.

கும்பகோணத்தில் இருக்கும் தேனப்பன் சிலைகளை திருடி விற்பவர்.. எதிர்ப்பவர்களை தூக்கியடிக்கும் வில்லன் என்றாலும், இவரிடம் பலவருட காலம் விசுவாசமாக வேலை பார்க்கும் பாரதிராஜாவுக்கு என்றுமே நண்பன்.. பாரதிராஜாவின் மகன் விதார்த்.. சென்னையில் கால் டாக்ஸி ட்ரைவர்.. இந்த கூடா நட்பு விதார்த் உட்பட குடும்பத்தினருக்கே பிடிக்கவில்லை.

இந்தநிலையில் ஐந்து கோடி ரூபாய் மதிப்புள்ள ஒரு ஐம்பொன் சிலையை கடத்தி, குரங்கு பொம்மை படம் போட்ட பேக்கில் வைத்து, பாரதிராஜாவிடம் கொடுத்து சென்னையில் உள்ள குமரவேலிடம் சேர்க்க சொல்லி அனுப்புகிறார் தேனப்பன்.

இதற்கிடையே சென்னையில் வேலைக்கு செல்வதற்காக பஸ் ஸ்டாப்பில் நிற்கும் விதார்த்தின் கைகளில் அந்த குரங்கு பொம்மை பேக் வந்து சேர்கிறது. அந்த பேக்கை உரியவரிடம் சேர்ப்பதற்காக அலைகிறார் விதார்த். ஒரு திருடன் முதற்கொண்டு பலர் அந்த பேக்கை கைப்பற்ற அலைகின்றனர்.. அதேசமயம் இன்னும் அந்த பேக் கைக்கு வரவில்லை என குமரவேலிடம் இருந்து தேனப்பனுக்கு தகவல் பறக்கிறது..

கும்பகோணத்தில் கிளம்பிய பாரதிராஜாவிடம் இருந்த அந்த குரங்கு பொம்மை பேக், சென்னையில் விதார்த்தின் கைகளில் கிடைப்பதற்கு இடையே என்ன நடந்தது..?. பேக்கின் உள்ளே என்ன இருக்கிறது என்பது விதர்த்துக்கு தெரியவந்ததா..? இதனால் விதார்த் சிக்கலில் மாட்டினாரா என பல கேள்விகளுக்கு பரபரப்பாக பதில் சொல்கிறது மீதிப்படம்.

விதார்த் நடிப்பில் கடந்த சில படங்களாகவே பக்குவம் தெரிகிறது.. அதுதான் அவரை ரசிக்கவும் வைக்கிறது. இந்தப்படத்திலும் அது தொடர்கிறது. ஒருவர் தவறவிட்ட பொருளை உரியவரிடம் சேர்ப்பதில் அவர் காட்டும் அக்கறை நமக்கு பாடம் சொல்லித்தருகிறது. தந்தையை காணவில்லை என வீட்டில் இருந்து போன் வந்ததில் இருந்து மனிதர் பதறுகிறார் பாருங்கள்.. சான்ஸே இல்லை..

விதார்த்தின் அப்பாவாக பாரதிராஜா.. வேகம், கோபம் காட்டாத வெள்ளந்தியான கிராமத்து மனிதரை கண்முன் நிறுத்துகிறார்.. குறிப்பாக குமரவேலின் வீட்டிற்குள் அவர் சென்றபின் நடக்கும் காட்சிகளில் கடவுளே அவருக்கு ஒன்றும் ஆகிவிடக்கூடாதே என்கிற பதைபதைப்பை நம்மிடம் ஏற்றிவிடுகிறார்.

நாயகி டெல்னா டேவிஸ்.. தனது அப்பாவை அடித்துவிட்டார் என விதார்த்தின் மேல் கோபம் காட்டுவது, சென்னைக்கு வந்த இடத்தில் விதார்த் உதவி செய்ய முன்வந்தாலும் அதை மறுத்து வீராப்பு காட்டுவது, பின் கொஞ்சம் கொஞ்சமாக விதார்த்தை நெருங்குவது என நம் மனதிலும் ஒரு இடத்தை பிடிக்க முயல்கிறார்.

தேனப்பன், தான் பாரதிராஜாவிடம் கொண்டுள்ள நட்பை க்ளைமாக்ஸ் காட்சிக்கு முன் குமரவேலிடம் வெளிப்படுத்தும் காட்சியில் அவர் திருடன், கொலைகாரன் என்பது மறந்துபோய் ‘நன்பேண்டா’ என சொல்லவைக்கிறார். இதில் நாம் யாரும் எதிர்பாராதது இதுவரை பல படங்களில் பூனையாய் பார்த்துவந்த குமரவேலின் மிரட்டலான நடிப்பு தான். என்னா வில்லத்தனம்.. சிலையை வைத்துக்கொண்டு அவர் போடும் ட்ராமா இருக்கிறதே பலே..பலே..

என்னமாதிரியான ஆளுய்யா நீ என கேட்கும் விதமாக பாலாசிங்கின் கதாபாத்திரம் சிறப்பாக வடிவமைக்கப்பட்டுள்ளது. அவரது செயலபாடுகள் தான் கொஞ்சம் ஓவர்.. சிலையை கைமாற்றினால் கிடைக்கும் பணத்தில் மகளின் திருமணத்தை நடத்த நினைக்கும் கிருஷ்ணமூர்த்தி, விதார்த்தின் அம்மாவாக வரும் ரமா, திருடனாக இருந்து, விதார்த்தின் நிலைகண்டு அவருக்கு உதவியாக மாறும் நபர் என மற்ற கதாபாத்திரங்களும் கதையுடனேயே ஒன்றிப்போய் விட்டார்கள்.

சிலை கடத்தல், தந்தை-மகன் செண்டிமெண்ட், நட்பு, துரோகம் என பல அம்சங்களை உள்ளடக்கியிருந்தாலும் கோட்டைவிட்டு தாண்டாமல் கதையை நகர்த்தியுள்ளார் இயக்குனர் நித்திலன்.. அந்த குரங்கு பொம்மை பேக்கினுள் என்ன இருந்தது என தெரியவரும் நேரம் விதார்த்துக்கு மட்டுமல்ல நம்மையும் மிகப்பெரிய அதிர்ச்சி கவ்வுகிறது. என்னை கொல்லத்தானே முடியும்.. வேறென்ன செய்வ.. என கொக்கரிக்கும் குமாரவேலின் முடிவு யாரும் எதிர்பாரததது.. மிகச்சரியான ஒன்றும் கூட.

முதல் பாதியில் மெதுவாக நகரும் காட்சிகள் மட்டுமே சிறிய பலவீனம்.. ஆனால் கதை சூடுபிடிக்க ஆரம்பித்ததில் அந்தக்குறையும் பெரிதாக தெரியவில்லை.. இது வெற்றிப்படமா அல்லது ஹிட் படமா என்று கேட்டால், பார்க்கவேண்டிய படம் என தாரளமாக சொல்லலாம்.