“குப்பத்து ராஜா தர(மான) லோக்கல் படம்”- பார்த்திபன் சிலாகிப்பு

kuppathu raja pressmeet

எஸ் ஃபோகஸ் ப்ரொடக்‌ஷன்ஸ் சார்பில் சரவணன்.எம், எஸ்.சிராஜ், சரவணன்.டி தயாரிப்பில் உருவாகி இருக்கும் படம் `குப்பத்து ராஜா’. நடன இயக்குனர் பாபா பாஸ்கர் இந்தப்படத்தின் மூலம் இயக்குனராக மாறியுள்ளார்.

ஜி.வி.பிரகாஷ்குமார், பார்த்திபன் இணைந்து நடித்திருக்கும் இந்த படத்தில் பல்லக் லால்வானி, பூனம் பாஜ்வா, நாயகிகளாக நடித்துள்ளனர். எம்.எஸ்.பாஸ்கர், யோகி பாபு, ஆர்.என்.ஆர்.மனோகர், ஜாங்கிரி மதுமிதா உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

சமீபத்தில் நடைபெற்ற இந்தப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் இயக்குநர் பேசும்போது, “நடன இயக்குனராக என் பயணத்தை துவக்கி வைத்தவர் தனுஷ், என் இயக்குனர் கனவை நனவாக்கியவர் ஜி.வி.பிரகாஷ். அவர் கதை மீது வைத்த நம்பிக்கை தான் காரணம். சுவர் இருந்தால் தான் சித்திரம் வரைய முடியும், அப்படி எனக்கு கிடைத்த தயாரிப்பாளர்கள் எனக்கு வரம். கலை இயக்குனர் கிரண் ராயபுரத்தை சேர்ந்தவர் என்பதால் மிகவும் உதவிகரமாக இருந்தார். இந்த குழுவில் எங்களை மிகச்சிறப்பாக வழிநடத்தி சென்றவர் ஒளிப்பதிவாளர் மகேஷ் முத்துசாமி சார்.

பலமான பல கலைஞர்கள் சேர்ந்தது தான் இந்த குப்பத்து ராஜா. யோகிபாபு காமெடியனாக இல்லாமல் மிக முக்கிய ஒரு கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். அவரை வேறு பரிமாணத்தில் பார்ப்பீர்கள்” என்றார்.

பார்த்திபன் பேசும் போது, “எஸ் ஃபோகஸ் பெயருக்கு ஏற்ற மாதிரியே மிகவும் ஃபோகஸ் உடன் படத்தை மிக கவனமாக எடுத்திருக்கிறார்கள். இயக்குனர் ஒரு ஹிட்லர் மாதிரி, அவர் படம் பிடித்ததை விட அடம் பிடித்ததே அதிகம். அவர் நினைத்ததை செய்யட்டும் என நினைப்பவன் நான். கதை கேட்கும்போது நிறைய நல்ல கதைகளை முதல் 10 நிமிடங்களிலேயே உணர்ந்திருக்கிறேன். நான் எப்போதுமே பரபரப்பான திரைக்கதைகளை ரசிப்பவன். பாபா பாஸ்கர் அவரின் நடனத்தை போலவே திரைக்கதையையும் மிகவும் புதிதாக, வேகமாக வடிவமைத்திருந்தார். கதை சொல்லும் போது மிகவும் ரேஸியாக இருப்பதை உணர்ந்தேன், டப்பிங்கின் போது அவர் என்ன எழுதினாரோ அதை அப்படியே திரையில் கொண்டு வந்ததை பார்த்ததில் மகிழ்ச்சி. இதில் அந்த உணர்வு கிடைத்தது. இது வெறும் தர லோக்கல் படம் மட்டுமல்ல, தரமான லோக்கல் படம்.

எம்.ஜி.ராஜேந்திரன் (எம்ஜிஆர்) என்ற கதாபாத்திரத்தில் தொப்பி அணிந்து நடிக்கலாமா என்ற ஒரு குழப்பம் எனக்குள் இருந்தது. ஆனால் அந்த கதாபாத்திரம் மிகவும் நல்லவர். யாரையும் தவறாக சித்தரிக்கும் கதாபாத்திரம் இல்லை என்பதால் நடித்தேன். ஆயிரத்தில் ஒருவன் படத்தில் ஜி.வி.பிரகாஷ்குமார் இசையை பார்த்து மிரண்டிருக்கிறேன். அவர் நடிப்பும் சிறப்பாகவே இருக்கிறது. பாலய்யா, எஸ்வி சுப்பையா மாதிரி நடிகர்கள் இந்த காலத்தில் இல்லையே என்ற ஏக்கத்தை எம் எஸ் பாஸ்கர் போக்கியிருக்கிறார்” என்றார்.

படம் வருகிற ஏப்ரல் 5-ந் தேதி திரைக்கு வருகிறது.