கூட்டாளி – விமர்சனம்

காதலை விட நட்புதான் பெரிது என பாடம் எடுத்திருக்கும் 1௦௦1வது படம் தான் கூட்டாளி. அதை தனது ஸ்டைலில் ஒரு ‘ஸ்கெட்ச்’ போட்டு சொல்லியிருக்கிறார் இயக்குனர் எஸ்.கே.மதி..

பைனான்சியர் உதயபானு மகேஸ்வரன் கொடுக்கும் அசைன்மென்ட்படி அவரிடம் கடன் வாங்கிவிட்டு, சரியாக தவணை கட்டாத கார்களை அதிரடியாக தூக்கி வரும் வேலை பார்ப்பவர்கள் சதீஷ் மற்றும் நண்பர்கள் மூவரும். இந்த நால்வருக்கும் காட்பாதர் ஏரியா தாதா அருள்தாஸ்.

இந்தநிலையில் தனது தாய் கௌசல்யா இறந்ததால், அதற்கு காரணமான தந்தை மாஸ்டர் கல்யாண் மீது வெறுப்பு கொண்டு வீட்டை விட்டு ஹாஸ்டலில் தங்கி படிக்கும் க்ரிஷா மீது, ஒரு கார் விபத்து மூலம் சதீஷுக்கு ஈர்ப்பு வருகிறது. அதை காதலாக மாற்றலாமா வேண்டாமா என அவர் மனம் ஊசலாட, தானே வந்து காதலை வெளிப்படுத்துகிறார் க்ரிஷா.

இந்த காதலால், கார்களை தூக்கும் வேலையில் கவனச்சிதறல் ஏற்படுகிறது. இதனால் சேட் உதயபானு இவர்கள் மீது நம்பிக்கை இழக்கிறார். இன்னொரு பக்கம் ஏரியா கவுன்சிலர் காரையே தூக்கியதால் அவர் இவர்களை போட்டுத்தள்ள ஆவேசம் காட்டுகிறார்.

இந்தநிலையில் தனது தந்தை மனம் திருந்திவிட்டார் என்பதை அறிந்து மீண்டும் வீடு திரும்பும் க்ரிஷா, தந்தையிடம் தனது காதலை சொல்லி காதலன் மற்றும் அவனது நண்பர்களுக்கு ஏற்பட்டுள்ள ஆபத்திலிருந்து காப்பாற்ற உதவி கேட்கிறார்.

ஆனால் கூடவே இருக்கும் நண்பர்களும் தன் காதலால் சிரமப்படுவதை பார்த்து, தனது காதலை கை விட்டுவிட்டு, நண்பர்களுடன் மும்பை போய் பிழைத்துக்கொள்ள திட்டமிட்டு கிளம்புகின்றார் சதீஷ். எதிர்பாராத விதமாக ஏற்கனவே இந்த நண்பர்கள் குரூப் செய்த தவறு ஒன்றுக்கான தண்டனை, இப்போது க்ரிஷாவின் தந்தைக்கு உத்தரவாக பிறப்பிக்கப்பட்டு அவர்களை காவு வாங்க காத்திருக்கிறது.

நண்பர்கள் தப்பித்தார்களா.? காதலர்கள் இணைந்தார்களா..? நல்லவராக மாறிய போலீஸ் தந்தை நல்லவராகவே இருந்தாரா..? மீண்டும் கோரமுகம் காட்டினாரா..? இதற்கெல்லாம் விடை சொல்கிறது க்ளைமாக்ஸ்.

நண்பர்கள், நட்பு பற்றிய படங்களில் நாம் என்னென்ன கிளிஷே காட்சிகளை எதிர்பார்ப்போமோ, அவை அத்தனையும் இதிலும் இருக்கிறது. ரப் அன்ட் டப் முகத்துடன் ஓரளவு நடிக்கவும் செய்கிறார் நாயகன் சதீஷ். இவரை விரட்டி காதலித்து, இந்த நண்பர் கூட்டத்துக்கு நல்லது செய்ய முயற்சிக்கும் வெள்ளந்தியான கேரக்டரில் க்ரிஷா குறூப். பல இடங்களில் இவரது நடிப்பில் ரேவதியின் சாயல் தென்படுவது கேரக்டருக்கு பிளஸ்.

நண்பர்களாக வரும் அப்புக்குட்டி வழக்கம்போல முரட்டுத்தனமாக காமெடி செய்கிறார். இன்னொரு நண்பராக வருபவர் காதலில் தோல்வி கண்டவர் என்பதாலேயே அடிக்கடி சந்தேகக்கண்ணோடு நண்பனின் காதலை வெறுத்து டயலாக் பேசுவது ஓவர் டோஸ்.

நாயகியின் தந்தையாக முரட்டு போலீஸ் அதிகாரியாக மாஸ்டர் கல்யாண் நடிப்புலகுக்கு புதுவரவு… இனி பிஸியான நடிகராக இவரை பார்க்கலாம். கார்களை தூக்க சொல்லும் சேட் உதயபானு மகேஸ்வரன், நண்பர்கள் கூட்டணிக்கு பக்கபலமாக இருக்கும் அருள்தாஸ், லோக்கல் தாதாவான நந்தகுமார் என அனைவருமே பக்கா.. ஆனால் இவர்களது கேரக்டர்கள் எல்லாம் சமீபத்தில் தானே அய்யா ஒரு படத்தில் பார்த்து முடித்திருந்தோம்.. அதை கவனித்து புதிதாக கேரக்டர் ஸ்கெட்ச் போட்டிருக்கலாமே இயக்குனர் சார்..?

அவ்வளவு பெரிய கவுன்சிலர் ட்யூ கட்டாமல் கார் வைத்திருப்பாரா..? நடுராத்திரியில் குடும்ப பெண்களுடன் காரில் வருபவர்களை வழிமறித்து காரை சீசிங் செய்யவேண்டிய அவசியம் என்ன..? அதன்பின் சம்பந்தப்பட்ட நபர் கோபம் கொண்டு இவர்களை பழிதீர்க்க அரசியல் மட்டத்தில் இறங்கி காய் நகர்த்துகிறாரே, அப்படிப்பட்ட ஆள் ட்யூ கூட காட்ட முடியாமலா இருப்பார் என சில சந்தேகங்கள் அவ்வப்போது வந்துபோகவே செய்கின்றன.

நட்பை தக்கவைத்துக்கொள்ள ரொம்பவே சிரமப்படுகிறான் இந்த கூட்டாளி..