‘கொம்பன்’ படம் ஜாதி மோதலை பற்றியதல்ல – ஸ்டுடியோகிரீன் விளக்கம்..!

கார்த்தி நடிப்பில் குட்டிப்புலி முத்தையா இயக்கியுள்ள படம் தான் ‘கொம்பன்’. ராமநாதபுரம் மாவட்ட பின்னணியில் நிகழும் கதைக்களத்தில் லட்சுமி மேனன் கதாநாயகியாக நடிக்க, கார்த்தியின் மாமனாராக ராஜ்கிரண் முக்கியமான வேடத்தில் நடிக்கிறார். இதுவரை தமிழ்சினிமா அவ்வளவு அதிகமாக தொடாத ஏரியாவான மாமனார்-மருமகன் பாசத்தை காட்ட இருக்கிறது இந்த ‘கொம்பன்’.

‘கொம்பன்’ படம் நாளை மறுநாள் (ஏப்-2) வெளியாகவுள்ள நிலையில் தற்போது திடீரென ஒரு எதிர்ப்பு கிளம்பியுள்ளது. குறிப்பிட்ட இரு ஜாதியினரின் மோதல் பற்றித்தான் படம் எடுக்கப்பட்டுள்ளது என்றும் கடந்த ஆறு மாதங்களாக தமிழகத்தில் சாதி கலவரங்கள் அதிகரித்துள்ளன, இந்நிலையில் இந்த படம் வெளியானால் மேலும் இந்த கலவரங்கள் அதிகரிக்கும் என்றும் எதிர்ப்பிற்கு காரணம் சொல்லப்படுகிறது.

ஆனால் ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் இதை மறுத்துள்ளது “ஸ்டுடியோ கிரீன் எப்போதுமே நல்ல படங்களை மட்டுமே எடுக்கும் நிறுவனம். ‘கொம்பன்’ படம் மாமனார் – மருமகன் உறவை மையப்படுத்திய ஒரு உணர்வுப்பூர்வமான குடும்பப்படம். இதில் எந்த ஒரு ஜாதியை குறிக்கும் காட்சியமைப்போ வசனங்களோ இல்லை. ஒரு குறிப்பிட்ட ஜாதியை உயர்த்தியோ, தாழ்த்தியோ வசனங்கள் இல்லை. தற்போது யூகத்தின் அடிப்படையில் தவறான கருத்துக்கள் பேசப்பட்டு வருகின்றன. படம் வெளிவந்தவுடன் இவை அனைத்தும் அடிப்படையற்றவை என்கிற உண்மை தெரியவரும். அதனால் கொம்பன் படம் மக்களை சென்றடையை அனைவரும் ஒத்துழைப்பு தரவேண்டும்” என தன்னிலை விளக்க அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்கள் ஸ்டுடியோ கிரீன் நிறுவனத்தினர்.