கொம்பன் – விமர்சனம்

 

ஆடு வாங்கி விற்கும் சாதாரண ஆள் தான் என்றாலும் கொம்பையா பாண்டியன் (கார்த்தி) சொல்கிற ஆள் தான் அரசம்பட்டிக்கு பஞ்சாயத்து தலைவராக வர முடியும். கொம்பனின் அடாவடியால் செம்மம்பட்டி குண்டன் ராமசாமி (சூப்பர் சுப்பராயன்) மருமகனின் பஞ்சாயத்து தலைவர் கனவு தகர்ந்து போகிறது.

தனது மாமன் ராஜாக்கிளி (தம்பி ராமையா) மற்றும் சித்தப்பு துரைப்பாண்டி (வேலா ராமமூர்த்தி) ஆகியோருடன் சண்டியராக சுற்றும் கொம்பனுக்கு அவனது பங்காளி முனியாண்டி (கருணாஸ்), பக்கத்து ஊர் சாமியாடி முத்தையா (ராஜ்கிரண்) மகள் பழனியை (லட்சுமி மேனன்) திருமணம் செய்து வைக்கிறார்.

திருமணம் முடிந்தும் மகளின் விருப்பத்திற்கு இணங்கி மருமகன் வீட்டிலேயே தங்கும் முத்தையாவை மரியாதை குறைவாக நடத்துவதோடு ஒருகட்டத்தில் அடித்தும் விடுகிறான் கொம்பன்.. மனைவி, மாமனாருடன், தனது தாயும் தன்னை விட்டுவிட்டு வெளியேற, தவறை உணர்ந்து மாமனிடம் மானசீகமாக மன்னிப்பு கேட்டு அவர் மனதில் கொஞ்சம் கொஞ்சமாக நுழைகிறான் கொம்பன்.

முதலில் கொம்பனிடமும், பின்னர் முத்தையாவிடமும் பலபேர் முன்னிலையில் அவமானப்பட்ட குண்டன் தனது மகன்களுடன் சதித்திட்டத்தில் ஈடுபட்டு மாமனையும் மருமகனையும் பல இடங்களில் கொலை செய்ய முயற்சித்து தோல்வியை தழுவுகிறார்.. அவருக்கு தோதாக ஊர்த்திருவிழா வர, அன்று ஒரு பயங்கரத்திற்கு தயாராகும் குண்டனும் அவரது ஆட்களும், திருவிழா இரவில் முத்தையா, கொம்பன், அவனது மனைவி பழனி ஆகியோரை சுற்றி வளைக்கிறார்கள். இந்த தாக்குதலில் இருந்து கொம்பனும் மற்ற இருவரும் தப்பித்தார்களா என்பது பரபர க்ளைமாக்ஸ்.

இந்தப்படத்தில் என்ன ஜாதி கருமாந்திரம் இருக்கிறது என்று கேஸ் போட்டார்களோ தெரியவில்லை, அவர்களது நினைப்பை ஒரு சதவீதம் கூட பலிக்கவிடவில்லை இந்த ‘கொம்பன்’. அவ்வளவு ஏன் படத்தில் எந்த ஒரு இடத்திலும் இன்னார் இன்ன ஜாதி என்கிற வார்த்தை கூட இடம்பெறவில்லையே.. அப்புறம் எங்கே வருகிறது ஜாதி மோதல்..?

கொஞ்சம் மிஸ்ஸாகி இருந்தால் இன்னொரு பருத்தி வீரனாக மாறிப்போய்விடக்கூடிய அபாயம் உள்ள கொம்பன் கேரக்டரில் நடித்திருக்கும் கார்த்தி, அதை அசால்ட்டாக ஒதுக்கித்தள்ளிவிட்டு கொம்பனை மட்டுமே நம் கண்முன்னே நிறுத்துகிறார்.  அவரது சண்டியர்த்தனத்தை எல்லாம் ஓவர்டேக் செய்துவிடுகிறது அவருக்கும் அவரது மாமனார் ராஜ்கிரணுக்குமான சில்லுண்டி சடவுகள்..

கார்த்தி, தனது மாமனார் ராஜ்கிரணுடன் மரியாதைக்குறைவாக நடந்து கொள்வதை பார்த்து நமக்கே கோபம் ஏற்படுகிறது என்றால் அது தான் அவரது ‘கொம்பன்’ கேரக்டருக்கு கிடைத்த வெற்றி.. தனது மாமனாரை காப்பாற்ற கார்த்தி எடுக்கும் அதிரடி நடவடிக்கைகளில் சினிமாத்தனம் எட்டிப்பார்த்தாலும் விறுவிறுப்புக்கு பஞ்சமில்லை.

கொடுக்கிற பாத்திரமாக மாறிப்போவது ராஜ்கிரணின் இயல்பு.. இதில் மகளை கட்டிக்கொடுத்துவிட்டு, மருமகனிடம் இருக்கும் கொஞ்சம் நல்ல குணங்களை பார்த்து பெருமைப்பட முடியாமலும், அவரது மரியாதைக்குறைவான அடாவடிகளை பொறுத்துக்கொள்ள முடியாமலும் தவிக்கும் மாமனாராக ராஜ்கிரணுக்கும் சரி, நமக்கும் சரி அவரது முத்தையா கேரக்டர் ரொம்பவே புதுசு.

எனக்கு கிராமத்து கேரக்டர்களே வேண்டாம் என லட்சுமி மேனன் சொல்வதிலும் அநியாயத்திற்கு உண்மை இருக்கத்தான் செய்கிறது. அவரது நடிப்பு யதார்த்தமாக இருந்தாலும், அவரது முகத்தில் கண்டிப்பான கிராமத்து டீச்சர் ‘களை’ தாண்டவமாடுவது இந்தப்படத்திலும் தொடர்கிறது.  அட.. கோவை சரளா இப்படியெல்லாம் கூட நடிப்பாரா..? வழக்கமான பாத்திரத்தில் இருந்து டோட்டல் சேஞ்ச் ஆகியிருக்கும் கோவை சரளா மகனை திட்டும் காட்சிகளிலும், மருமகளுக்கும் அவளது தந்தைக்கும் ஆதரவாக வீட்டை விட்டு கிளம்பும் காட்சியிலும் சபாஷ் சரளா என சொல்லவைக்கிறார்.

ஊரில் தான்தோன்றித்தனமாக சுற்றும் சண்டிக்காளையை சரியான பாதைக்கு திருப்பி மூக்கணாங்கயிறு போட யாராவது ஒரு பங்காளி இருப்பாரில்லையா..? அப்படியென்றால் அதுதான் கருணாஸ். மாப்பிள்ளைக்கு கல்யாணம் ஆனாலும் தான் இன்னும் கல்யாணம் செய்யாமல் மாப்பிள்ளையையும் குடும்பஸ்தன் ஆகவிடாமல் தடுக்கும் தாய்மாமாக்களும் சிலர் இருப்பார்கள் தானே. அதுதான் தம்பி ராமையா.. இரண்டு கேரக்டர்களுக்கும் இவர்கள் இருவரும் ஏகப்பொருத்தம்..

வில்லனுக்கு தோதான ஆளாகத்தான் ஸ்டண்ட் மாஸ்டர் சூப்பர் சுப்பராயனை இறக்கியிருக்கிறார்கள். அவரது நான்கு பையன்களில் குறிப்பாக முதல் இரண்டு பேரும் உருவத்திலும் நடிப்பிலும் சூப்பர் சுப்பராயனின் சாயல் காட்டியுள்ளார்கள்.. கார்த்தியின் சின்னையாவாக வரும் வேலா ராமமூர்த்தி மாதிரியான கதாபாத்திரங்கள் கதை நகர்வதற்கு பக்கபலமாக இருப்பதோடு, கிராமத்து யதார்த்தை அவ்வப்போது நம் மனதில் பதியவைத்துக்கொண்டே இருக்கின்றன.

பாடல்கள் அனைத்துமே கிராமிய குத்துக்களாக இருப்பதை தவிர்த்து ஒரு மெலடியிலாவது ஜி.வி.பிரகாஷ் கவனம் செலுத்தியிருக்கலாம். பாடல்கள் காதுகளில் வன்முறை நடத்துகின்றன. ஒளிப்பதிவாளராக வேல்ராஜின் பணி இதில் மகத்தானது. கூடவே இதில் சர்ப்ரைஸ் கெஸ்ட் ரோல் வேறு.. திலீப் சுப்பராயனின் சண்டைகாட்சிகளில் கார்த்தி அடிக்கும் அடி நம் மேலே விழுமோ என்கிற பயம் ஏற்படவே செய்கிறது.

முதல் படமான குட்டிப்புலியில் சற்றே சறுக்கிய இயக்குனர் முத்தையா இதில் சுதாரித்திருப்பது பல காட்சிகளில் புலப்படுகிறது. ஜெயிலில் ராஜ்கிரணை கார்த்தி காப்பற்றுவது, எதிரி போலீஸை சிக்கவைப்பது, க்ளைமாக்ஸில் லட்சுமி மேனனை தப்பிக்கவைப்பது ஆகிய காட்சிகளில் புத்திசாலித்தனம் காட்டியிருக்கிறார் இயக்குனர். ஆனால் அவை எல்லாவற்றையும் விட இந்த அடிதடி கதையில் மாமனார், மருமகன் உறவை அவர் காட்சிப்படுத்திய விதம் தான் மனதில் ஆணியடித்த மாதிரி நிற்கிறது.

குறிப்பாக கார்த்தி, தனது சுபாவத்தை மாற்றிவிட்டதாக ராஜ்கிரணுக்கு உணர்த்தும் காட்சிகள்.. அதற்காகவே இயக்குனரை தனியாக பாராட்டலாம். படத்தின் ஆரம்ப காட்சிகள் சில படங்களில் வந்தது போல தோன்றினாலும் இந்த குறிப்பிட்ட ஏரியாவில் கதை பண்ணும்போது அது தவிர்க்கப்படமுடியாது என்பதும் உண்மை தான்.

‘கொம்பன்’ – குடும்பத்துடன் உங்களை தியேட்டருக்கு வரச்சொல்லும் தைரியசாலி…!