“கொம்பனுக்கு பிரச்சனை முடிந்தது… எனக்கு இன்னும் தொடர்கிறது” – ஞானவேல்ராஜா பகீர் தகவல்..!

கொம்பன் படம் எதிர்பார்த்ததை விட வெற்றிகரமாக ஓடும் சந்தோஷத்தில் அதன் சக்சஸ் மீட்டை நடத்தினாலும் படத்தின் தயாரிப்பாளரான ஸ்டுடியோ கிரீன் ஞானவேல்ராஜாவிடம் முகத்தில் மட்டும் அந்த வெற்றியின் சந்தோஷத்தை முழுதாக காண முடியவில்லை. அதற்கான காரணம் அவர் பேசியபோது வெளிப்பட்டு நம்மை திகிலூட்டியது..

“கொம்பன் படத்திற்கான பிரச்சனை முடிந்துவிட்டது. ஆனால் எனக்கு எனக்கான பிரச்சனை ஆரம்பித்துவிட்டது. படம் ரிலீஸாவதற்கு முன் என்னிடம் எதிர்ப்பாளர்கள் பேசிய விதத்தில் இருந்து அதை நான் புரிந்துகொண்டேன்.. என்னை வேட்டையாடாமல் விடமாட்டார்கள். ஆனால் அதையும் நான் ஊடகத்தாரின் துணையுடன் வெற்றிகரமாக சந்திப்பேன்” என்றார் ஞானவேல்ராஜா.

அப்படியென்றால் வேண்டுமென்றே போய் வழக்கு போட்டு எதிர்த்தவர்களுக்கு என்ன தான் பதிலடி..? என்று ஞானவேல்ராஜாவிடம் கேட்டால், “இந்த விவகாரத்தில் கிருஷ்ணசாமி வெறும் அம்புதான். ஆனால் எய்தவர்கள் வேறு.. ஆனாலும் இதுபோன்ற அம்புகள் இனி எய்யப்படக்கூடாது என்பதற்காக கிருஷ்ணசாமி மீது மன உளைச்சலை ஏற்படுத்தியது, படத்திற்கு பொருளாதார ரீதியாக நட்டத்தை ஏற்படுத்தியது ஆகிய பிரிவுகளில் நஷ்ட ஈடு கேட்டு வழக்கு தொடர்ந்துள்ளோம்” என்றார்.