கொடிவீரன் – விமர்சனம்

சசிகுமார் – முத்தையா கூட்டணியில் ‘குட்டிப்புலி’க்கு அடுத்ததாக உருவாகியுள்ள படம் தான் ‘கொடிவீரன்’. இது குட்டிப்புலியா..? இல்லை பெரிய புலியா..? பார்க்கலாம்.

சிறுவயதிலேயே பெற்றோரை இழந்த சசிகுமார் தன் தங்கை சனுஷாவை பொத்திப்பொத்தி வளர்க்கிறார். கல்லூரியில் சனுஷாவின் கூட படிக்கும் மாணவியான மஹிமாவை சசிகுமார் விரும்ப, பதிலுக்கு தனது அண்ணன் விதார்த்துக்கு சனுஷாவை பெண் கேட்கிறார் மஹிமா.. இந்த சூழலில் நேர்மையான அதிகாரியான விதார்த்தை, போட்டுத்தள்ள துடிக்கிறார்கள் பட்டாசு ஆலை அதிபர்களான இந்தர்குமாரும் அவரது மச்சான் பசுபதியும்.

தங்கையின் திருமணத்தை நடத்திய சசிகுமார், அவர்களை காப்பாற்ற நடத்தும் முயற்சியில், இந்தர்குமார் உயிரைவிடுகிறார். இந்தர்குமாரின் மனைவி பூர்ணா, தனது தாலி இறங்க காரணமான சசிகுமாரின் தங்கை சனுஷாவின் தாலியையும் அண்ணன் பசுபதி மூலமாக காவு கேட்கிறார். எந்த தங்கையின் பாசத்துக்கு சக்தி அதிகம் என்பதற்கு க்ளைமாக்ஸ் முடிவு சொல்கிறது.

கொடிவீரனாக தனக்கு கொடுக்கப்பட்டுள்ள ரெடிமேட் சட்டையில் கச்சிதமாக பொருந்தியிருக்கிறார் சசிக்குமார். தங்கை கணவனின் உயிரை காக்க, பிரியாணி விருந்து போடுவது கொஞ்சமும் நம்பும்படி இல்லை என்றாலும், இடைவேளையில் அவர் நடத்தும் அதிரடி ஆபரேசன் உண்மையிலேயே செம ட்விஸ்ட் தான். கடைசிவரை சசிகுமார் என்னதான் வேலை பார்க்கிறார் என்பதை சொல்லாமலேயே படத்தை கொண்டு சென்றிருப்பது கூட ஒரு புது விதம் தான்.

கேரக்டருக்கு தகுந்த ஆளாக தன்னை மாற்றிக்கொண்டு இருக்கும் விதார்த், எந்த ஹீரோயிசமும் இல்லாமல் எளிய மனிதராக நம்மை கவர்கிறார்.. இனி இந்த ரூட்டில் பயணித்தால், விதார்த்தின் பயணம் தடையில்லாமல் சீராக தொடரும் என உறுதியாக சொல்லலாம்..

ஒன்றுக்கு மூன்று கதாநாயகிகளாக பூர்ணா, மஹிமா, சனுஷா. இதில் பளீர் சிரிப்பாலும் கொஞ்சல் பேச்சாலும் மஹிமாவும் சனுஷாவும் படம் முழுதும் நம்மை கட்டிப்போட்ட, ஆக்ரோஷமான நெகடிவ் கேரக்டரில் நம்மை அதிரவைக்கிறார் பூர்ணா. அதிலும் அவர் மொட்டையடித்துக்கொள்ளும் காட்சி.. சான்சே இல்லை.

தங்கைக்காகவும் தங்கையின் கணவருக்காகவும் அநியாயத்தின் பக்கம் நிற்கும் பசுபதி கேரக்டர் அவருக்கும் நமக்கும் புதிதா என்ன..? பெர்பெக்ட் மேட்ச்.. பூர்ணாவின் கணவராக அறிமுகமாகியிருக்கும் இந்தர்குமார் (அருண்விஜய்யின் மச்சான்) தமிழ்சினிமாவில் நல்லதொரு வில்லனாக வலம்வருவார்.

படத்தின் கலகலப்பை தக்கவைப்பதில் பாலசரவணன் மீட்டர் மாறாமல் கவனம் செலுத்தி இருக்கிறார்.. கூடவே சசிகுமாரின் தாய்மாமனாக வருபவரும் தன் பங்கிற்கு சலசலக்க வைக்கிறார். விதார்த்தின் தம்பியாக வரும் விக்ரம் சுகுமாறனும் முரட்டு தோற்றத்துடன் டெரர் ஏற்றுகிறார்.

முத்தையாவின் முந்தைய படங்களில் நாம் தொடர்ந்து பார்த்துவரும் கிராமத்து மனிதர்களின் கோபம், பாசம், ஆத்திரம், வன்மம் கலந்த கதைதான் இதுவும்.. ஆனால் இந்தப்படம் ஏனோ உணர்வு ரீதியாக நம்மை கட்டிப்போடவே செய்கிறது.. ஒன்றுக்கு மூன்றாக அண்ணன்-தங்கைகள் பாசத்தை மையப்படுத்தியே அவர் தனது திரைக்கதையை சுழல விட்டுள்ளதுதான் இந்தப்படத்தின் பலம். கொடுத்த காசுக்கு குறையில்லாமல் நம்மை திருப்திப்படுத்தி அனுப்புகிறான் இந்த கொடிவீரன்.