கிடாரி – விமர்சனம்

Kidaari Movie Stills 2

சாத்தூர் பகுதியில் வாரச்சந்தை, சொத்து பரிமாற்றம், கொடுக்கல் வாங்கல் என எல்லாவற்றிலும் தனது ஆதிக்கத்தை செலுத்துபவர் கொம்பையா பாண்டியன் அவரின் வலதுகையாக இருந்து அவர்மீது ஒரு துரும்பு கூட விழாமல் காக்கும் விசுவாச காவல்காரன் கிடாரி.. ஊரில் பலரின் பகையை சம்பாதித்து இருக்கும் கொம்பையா பாண்டியன் மீது கொலைமுயற்சி தாக்குதல் நடந்து உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சேர்க்கப்படுகிறார்…

தங்களது கட்டப்பாஞ்சயாத்தால் பாதிக்கப்பட்டவர்களில் யார் இந்த காரியத்தை செய்திருப்பார்கள் என வெறியோடு கொலையாளியை தேடுகிறார் கிடாரி. உண்மையான கொலையாளி யார் என கிடாரிக்கு தெரிய வரும்போது அதிர்ச்சியும், தனது தந்தையை கொன்றவர் தான் கொம்பையா பாண்டியன் என்கிற உண்மை தெரிய வரும்போது பேரதிர்ச்சியும் ஏற்படுகிறது. கிடாரி விசுவாசியாகவே இர்ருந்தாரா..? இல்லை வைரியாக மாறினாரா..? கொம்பையா பாண்டியன் கதி என்ன ஆனது என்பது க்ளைமாக்ஸ்.

கிராமங்களில் இன்றும் கூட உள்ள யார் பெரியவன் என்கிற கௌரவ மோதலை வைத்து வெளியாகி உள்ள பல படங்களில் ‘கிடாரி’யும் ஒன்றுதான் என்றாலும் இதில் கதை நகர்த்தி செல்லப்பட்ட விதம் புதுசு. கோபம், எவரையும் மதிக்காத தன்மை, எல்லோரையும் பயத்திலேயே வைத்திருப்பது என விசுவாசி கேரக்டரில் நூறு சதவீதம் சரியாக பொருந்துகிறார் சசிகுமார்.

சசிகுமாருக்கு சமமான முக்கிய கதாபாத்திரத்தில் விறைப்பும் முறைப்புமாக வேலா ராமமூர்த்தி சபாஷ் பெறுகிறார். எண்ணெய் தடவிய உடம்பும் வேல் கம்புமாக எதிரியை நோக்கி பாய்வதும், தனக்கு உதவி செய்யவந்த நெப்போலியனாகட்டும் அல்லது தன்னையே எதிர்க்கும் தனது மகனாகட்டும் யாரையும் தனது சுயநலத்துக்காக பதம் பார்ப்பதுமாக எதிர்மறை சாயல் கலந்த கொம்பையா பாண்டியனாக வாழ்ந்திருக்கிறார்.

சசிகுமாரை விரட்டி விரட்டி காதலிக்கும் வேலையை தவிர கதாநாயகி நிகிலா விமலுக்கு, அதைத்தவிர இதில் பெரிய வேலை ஒன்றும் இல்லை. ஆனால் அழகாக இருக்கிறார். படத்தின் இறுதிக்காட்சிகளில் கொஞ்ச நேரமே வந்துபோனாலும் நீண்ட நாளைக்குப்பின் நெப்போலியனின் மிடுக்கான நடிப்பை பார்க்கும்போது அவரை இவ்வளவு நாள் மிஸ் பண்ணியிருக்கிறோம் என்பது புரிகிறது. நெப்போலியன் தலைவராக வரும் ஹரீஷ் பிஷரோடியும், கொம்பையாவின் மனைவியாக வரும் அம்பிகா மோகனும் மலையாளத்தில் இருந்து தமிழுக்கு தங்கள் அழைத்து வரப்பட்டதன் நோக்கத்தை சிறப்பாக நிறைவேற்றியுள்ளார்கள்.

கிடாரி, கொம்பையா ஆகியோரால் பாதிப்புக்கு ஆளாகி அவர்களை பழிவாங்க தலையை சுற்றி மூக்கைத்தொடும் காரியத்தில் இறங்கும் சுஜா வாருணியின் கேரக்டர் நம்மை பரிதாபப்பட வைக்கிறது. சமீபத்தில் ஜோக்கரில் பார்த்த மு.ராமசாமி, இதில் இன்னொரு முகம் காட்டி நம்மை ஆச்சர்யப்படுத்துகிறார். கொம்பையா பாண்டியனின் மச்சானாக வரும் ஓ.ஏ.கே சுந்தருக்கு இதிலும் வலுவான கேரக்டர். சும்மா பிய்த்து உதறியிருக்கிறார் மனிதர். அவரது அண்ணனாக நடித்திருப்பவரும் தான். தர்புகா சிவாவின் இசை படத்தின் வேகத்தை குறைக்காமல் நகர்த்த உதவியுள்ளது.

ஏற்கனவே நாம் பார்த்துள்ள சில படங்களின் சாயல்கள் இதிலும் இருக்கின்றன தான். ஆனாலும் சில காட்சிகளில் இயக்குனர் பிரசாந்த் முருகேசன் தன்னை தனித்து வெளிப்படுத்தியுள்ளார். நிகிலா விமல்- சசிகுமார் காதலைவிட, சசிகுமாருக்கும் கொம்பையா பாண்டியனாக நடித்திருக்கும் வேலா ராமமூர்த்திக்குமான தந்தை-மகன் உறவை அழகாக எடுத்துக்காட்டியிருக்கிறார் இயக்குனர் பிரசாத் முருகேசன். தென் மாவட்டத்து கதைக்களம் என்றாலும் சாதிச்சாயம் பூசாமல் ஒரு கமர்ஷியல் படத்தை கொடுத்ததற்காக இயக்குனரை பாராட்டலாம்.