துல்கர் படத்திற்கு இசையமைக்கும் கேரளா மசாலா காஃபி

துல்கர் சல்மானின் 25வது படமாக கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் உருவாகி வருகிறது..ரிது வர்மா ஜோடியாக நடிக்கும் இந்த மெல்லிய காதல் கதைக்கு இசையமைக்கிறார்கள். கேரளாவின் மிகவும் பிரபலமான இசைக் குழுவான மசாலா காஃபி.

பல காதல் கதைகள் உலகளாவிய பார்வையாளர்களின் இதயத்தையும் ஆன்மாவையும் திருட காரணம் புத்துணர்ச்சியுடனான மயக்கும் இசை தான் காரணம். அதனால் இந்தப்படத்தில் அன்பை அள்ளித் தெளிக்க வேண்டிய அவசியத்தை உணர்ந்த இயக்குனர் தேசிங் பெரியசாமி, பல புதிய திறமையாளர்களை படத்துக்குள் கொண்டு வந்திருக்கிறார்.

இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்தவுடன் தான், உற்சாகமான இந்த இசைக்கலைஞர்களை இசையமைக்க ஒப்பந்தம் செய்திருக்கிறார் இயக்குனர். “இசை இன்னும் புதுமையாக இருக்க வேண்டும், இசை மூலம் இந்த காதல் கதையை அடுத்த கட்டத்துக்கு எடுத்து செல்ல வேண்டும். அதை இந்த இளைஞர் குழு மிகச்சரியாக செய்யும் என நாங்கள் நினைத்தோம். எற்கனவே இவர்கள் உறியடி படத்திற்கு இசையமைத்திருந்தாலும், அவை இவர்களின் முந்தைய ஆல்பங்களில் இருந்து உருவாக்கப்பட்டவை. ஆனால் கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் படத்தில் பாடல்கள் புதியதாக இருக்கும். படத்தில் வெவ்வேறு வகையான நான்கு பாடல்கள் உள்ளன, மிகச்சிறந்த அனுபவத்தை வழங்கும்’ என்கிறார் தேசிங் பெரியசாமி.

சமூக ஊடகங்களில் இந்த இசைக்குழுவிற்கு கிடைக்கும் வரவேற்பு அபரிமிதமானது. நாளுக்கு நாள் இந்த இசைக்குழுவுக்கு ரசிகர்கள் கூடிக்கொண்டே போவதும் இவர்களை இந்த படத்துக்கு ஒப்பந்தம் செய்ய காரணம். நடிகர்கள், தொழில்நுட்ப கலைஞர்கள் என முழுக்க, முழுக்க இளைஞர்களை கொண்டு உருவாகி வரும் இந்த ‘கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்’ இளைஞர்களுக்கான படமாக இருக்கும் என்கிறார் தயாரிப்பாளர் ஆண்டோ ஜோசெஃப்.