கென்னடி கிளப் – விமர்சனம்

தமிழகத்தில் தென் மேற்கு மாவட்டம் ஒன்று பெண்களுக்கான கபடி கிளப் நடத்தி வருகிறார் பாரதிராஜா. மாநில அளவில் அவர்களை வெற்றிபெற செய்யும் அளவுக்கு பயிற்சி கொடுக்கும் நிலையில், அவருக்கு உடல்நிலை சரியில்லாமல் போக அந்த பொறுப்பை அவரது சிஷ்யரான சசிகுமார் ஏற்றுக்கொள்கிறார். மாநில அளவில் தனது அணியை வெற்றிபெற வைக்கிறார்

இதில் ஒரு வீராங்கனைக்கு தேசிய அளவில் வாய்ப்பு கிடைக்க அதற்கு தேர்வாளர் 30 லட்ச ரூபாய் லஞ்சம் கேட்க, லஞ்சம் கொடுக்க முடியாத அந்த வீராங்கனை தற்கொலைக்கு முயற்சிக்கிறார். இதை அடுத்து அந்த அணியில் உள்ள மற்ற வீராங்கனைகளின் பெற்றோர்களும் தங்கள் பெண்களுக்கு கபடி வேண்டாம் என ஒதுங்குகின்றனர்.

இந்த நிலையில் மீண்டும் வீராங்கனைகளை ஒன்று சேர்த்து தேசிய அளவில் விளையாட தயார் செய்வதுடன் ஊழல் பெருச்சாளியான தேர்வு அதிகாரிக்கு எதிராக போராட்டத்தையும் தொடங்குகிறார் சசிகுமார். இரண்டையும் அவர் வெற்றிகரமாக சாதித்தாரா என்பதுதான் மீதிக்கதை

சமீபகாலமாக தமிழில் விளையாட்டை மையப்படுத்தி வரும் படங்கள் எல்லாமே கிரிக்கெட் அல்லது கபடி என்கிற இந்த விளையாட்டுகளை மையமாக வைத்துதான் உருவாகி வருகின்றன.. ஆண்கள் கிரிக்கெட், பெண்கள் கிரிக்கெட் என்பது போல ஆண்கள் கபடியை வைத்து சில படங்கள் வெளியாகி விட்ட நிலையில், பெண்கள் கபடி என்கிற ஆயுதத்தை கையில் எடுத்திருக்கிறார் இயக்குனர் சுசீந்திரன்.. ஏற்கனவே வெண்ணிலா கபடிக்குழு படம் மூலமாக வெற்றிகரமாக அறிமுகமான சுசீந்தரன் தற்போது பெண்கள் கபடி போட்டியை கையில் எடுத்திருப்பது பாராட்டத்தக்க விஷயம்.

வழக்கமான ஹீரோயிஸம், அடிதடி, நட்பு என்கிற ரூட்டில் பயணித்து வந்த சசிகுமார், அதிலிருந்து விலகி ஒரு கபடிக்குழு கோச்சாக அதற்கு தேவையான ஆக்ரோஷம் காட்டி நடித்திருக்கிறார். குறிப்பாக இந்த கதைக்கு தனது நடிப்பால் நியாயம் செய்திருக்கிறார். அதேபோல பெண்கள் கபடி குழுவை மிகப்பெரிய அளவில் கொண்டு வர வேண்டும் என போராடும் முக்கியமான கதாபாத்திரத்தில் சோடை போகாத நடிப்பை வழங்கியிருக்கிறார் பாரதிராஜா.

தனியாக கதாநாயகி என்று இல்லாமல் கபடி குழுவில் இடம் பெற்றுள்ள ஒவ்வொரு வீராங்கனையும் தங்களது தனித்துவத்தை ஒவ்வொரு காட்சிகளிலும் காட்டி சபாஷ் பெறுகின்றனர். இதற்கு அவர்கள் நிஜமான வீராங்கனைகள் என்பதும் ஒரு காரணம். கபடி குழு தேசிய அணியின் தேர்வாளர் ஆக வில்லத்தனம் காட்டி நடித்துள்ளார் முகேஷ் ரத்தோர். ரசிக்கும்படியாக தான் இருக்கிறது அவரது நடிப்பும். சூரி இல்லாத சுசீந்திரன் படமா என்பது போல கபடிகுழு கோச்சாக சூரியும் அவ்வபோது கலகலப்பூட்டுகிறார்.

முக்கியமான காட்சிகளில் டி.இமானின் இசை உணர்வுகளை கடத்துவதில் முக்கியபங்கு வகிக்கிறது. இந்த படத்தில் சமீபத்தில் வெளியான ஒரு படத்தின் சாயல் நிறையவே தெரிகின்றது என்றாலும் இந்தப் படம் தயாரிப்பில் நீண்ட நாள் இருந்து தாமதமாக வெளியானதும் அதற்கு ஒரு காரணம்.. இந்த படம் முன்பே வெளியாகி இருந்தால் அந்த படங்களுக்கு இது முன்னோடியாக அமைந்திருக்கும்.. இருந்தாலும் படத்தில் குறை சொல்வதற்கு என எதுவும் இல்லை என்பதால் எல்லோரும் ஒருமுறை தாராளமாக பார்க்கக்கூடிய படம் தான் இந்த கென்னடி கிளப்.