கேணி – விமர்சனம்

இன்று பெருவாரியான மக்களின் வாழ்வாதார பிரச்சனையாக இருக்கும் தண்ணீருக்காக இரு மாநிலங்களுக்குள் நடக்கும் அரசியல் யுத்தமும், மொழிகள் தாண்டி மனசாட்சிப்படி மக்களுக்கு உதவும் குணத்தால் தான் நினைத்ததை விடாப்பிடியாக சாதிக்க நினைக்கும் ஒரு பெண்மணியின் போராட்டமும் தான் இந்த கேணி படத்தின் கதை.

கணவர் இறந்தபின் கேரளாவில் இருந்து தமிழக கேரள எல்லையில் உள்ள தனது சொந்த ஊரான புளியன்மலைக்கு வருகிறார் ஜெயப்ரதா. கூடவே மாவோயிஸ்ட் என முத்திரை குத்தப்பட்டு சிறைவாசம் அனுபவிக்கும் ஒரு கைதியின் இளம் மனைவியான பார்வதி நம்பியாரையும் சில மனித கழுகுகளுக்கு இரையாகாமல் காப்பாற்றி தன்னுடன் அழைத்து வருகிறார்.

இங்கே வந்ததும் தான் தனக்கு சொந்தமான இடம் இரண்டு மாநில எல்லைகளுக்குள்ளும் பரவி இருப்பதால், அவரது நிலத்தில் கேரளா பக்கம் உள்ள கிணற்றில் இருக்கும் தண்ணீரை, தமிழ்நாட்டு பக்கம் பஞ்சத்தால் தவிக்கும் மக்களுக்கு கொடுக்க கூடாது என உத்தரவு போட்டு வைத்திருப்பது தெரிய வருகிறது.

தன் கண்ணெதிரே கிராம மக்கள் தண்ணீருக்காக துடிப்பதையும், தனக்கு சொந்தமான இடத்தில் தண்ணீர் இருந்தும், தருவதற்கு தனக்கு தாராள மனது இருந்தும் அதை செயல்படுத்த முடியாமல் குமுறுகிறார் ஜெயப்ரதா. ஆனாலும் தனது கணவரின் கடைசி ஆசையை நிறைவேற்ற, உள்ளூர் பஞ்சாயத்து தலைவர் பார்த்திபன் மற்றும் கலெக்டர் ரேவதி மற்றும் ஊர்க்காரர்கள் ஒத்துழைப்புடன் அனைவருக்கும் தண்ணீர் கிடைக்கும் போராட்டத்தில் இறங்குகிறார்.

ஆனால் பிரிவினையை தூண்டும் சில மலையாளிகள், மற்றும் சில தமிழக அரசியல்வாதிகள் ஆகியோர் ஜெயப்ரதாவின் முயற்சிக்கு முட்டுக்கட்டை போடுவதுடன், அந்த இடத்தில் உள்ள மக்களை குடிநீர் பிரச்சனையை காரணம் காட்டி அப்புறப்படுத்த முயற்சிக்கின்றனர். அடுத்ததாக வக்கீல் நாசர் மூலமாக நீதிமன்ற போராட்டத்திற்கு தயாராகிறார் ஜெயப்ரதா..? ஆனால் அது அவரது எண்ணம்போல எல்லாம் நடந்ததா…? அது அவ்வளவு எளிதாக இருந்ததா..? என்பதுதான் மீதிக்கதை.

தமிழகம், கேரளாவுக்கு இடையே இருக்கும் தண்ணீர் பிரச்சனையை ஒரு கிராமத்தின் பிரச்சனையாக காட்டி அதன்மூலம் பிரச்சனையின் உண்மைத்தன்மை என்ன என்பதையும், இதற்கான தீர்வையும் சொல்ல முயன்றிருக்கிறார் இயக்குனர் எம்.ஏ.நிஷாத். குறிப்பாக தமிழர்கள், மலையாளிகள் இருவரையும் சரியாக பேலன்ஸ் செய்திருப்பதுடன், ஒருபடி மேலே போய் அரசியல் லாபம் தேடும் சில மலையாளிகளின் பக்கம் தவறு இருப்பதையும் குத்திக்காட்டியுள்ளார் இந்த மலையாள இயக்குனர்.. அதற்காகவே சபாஷ் போடலாம் இவருக்கு.

கதையின் பிரதான நாயகியாக ஜெயப்ரதா.. தண்ணீர் தர மறுத்து நடக்கும் அரசியலை எதிர்கொண்டு அவர் போராடும்போது நாமும் அவருக்கு துணையாக நிற்க வேண்டும் என்கிற எண்ணத்தை நமக்குள் ஏற்படுத்தி விடுகிறார். நல்லதையே நினைத்து, மக்களுக்கு நல்லது செய்ய துடிக்கும் நல்ல மனசுக்கராரராக பார்த்திபனுக்கு பெருந்தன்மையான கேரக்டர். தமிழர், மலையாளிகளுக்கு இணைப்பு பாலமாக இருந்து அவர்களை பார்த்திபன் கையாளும் விதம் அருமை.

வக்கீலாக வரும் நாசர், ஜெயப்ரதாவின் முயற்சிக்கு தோள்கொடுத்து துணை நிற்கும் கேரக்டரில் மேன்மையான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். பஞ்சத்தால் வாடும் மக்களுக்கு நல்லதே செய்ய துடிக்கும் கலெக்டராக ரேவதி, இந்த போராட்டத்தில் நீதியின் பக்கம் நிற்கும் நீதிபதியாக ரேகா, படபடவென பொரிந்து தள்ளும் கிராமத்து பட்டாசாக அனுஹாசன் இவர்கள் கதைக்கு பக்கபலமான தூண்கள் என்றே சொல்லலாம்.

எப்போதும் தமிழர்-மலையாளி பிரச்சனயை இழுத்துவிடும் சுனில் சுகாதா, நல்லது செய்யப்போய் குற்றவாளியாக மாறும் ஜாய் தாமஸ் என படத்தில் உள்ள அனைத்து கேரக்டர்களுமே நேர்த்தியாக உருவாக்கப்பட்டுள்ளன. சாம்ஸ், பிளாக் பாண்டி காமெடி சில இடங்களில் சிரிக்கவும் சிந்திக்கவும் வைக்கிறது. கொஞ்ச நேரம் வரும் எம்.எஸ்.பாஸ்கர் அவரது வழக்கமான பாணிக்கு நேரெதிராக நடித்துள்ளார். அதேபோல குள்ளநரித்தனமான நடிப்பில் சபாஷ் பெறுகிறார் தலைவாசல் விஜய்..

சாம்.சி.எஸ்ஸின் பின்னணி இசை இதம் சேர்க்கிறது. நௌஷாத் ஷெரீப்பின் ஒளிபதிவில் தமிழக கேரளா எல்லைப்பகுதி கண்களை கொள்ளை கொள்கிறது. மலையாளியாக இருந்தாலும் இயக்குனர் எம்.ஏ.நிஷாத், இந்த தண்ணீர் பிரச்சனையில் உண்மை நிலையை ஏரியல் வியூவில் பார்த்து இரண்டு பக்கங்களையும் சரியாக அலசியிருக்கிறார்.

மொத்தத்தில் கேணி படத்தை சமூக விழிப்புணர்வு கருதி, அனைவரும் ஒரு தடவை பார்த்தால், அது இந்தப்படத்தில் வலியுறுத்தி சொல்லப்பட்ட நடுநிலையான கருத்துக்கு மதிப்பு கொடுத்தது போலாகும்.

மொத்தத்தில் கேணி – இறைக்க இறைக்க அன்பையும் சேர்த்து பெருகும் ஊற்று..