கழுகு 2 – விமர்சனம்

சின்ன சின்ன திருட்டுகளில் ஈடுபடுபவர்கள் கிருஷ்ணாவும் காளி வெங்கட்டும் ஒரு முறை போலீஸ் காவலில் இருந்து தப்பித்து அவர்களது துப்பாக்கிகளையும் தூக்கிக் கொண்டு ஒரு மலை கிராமத்துக்கு செல்கிறார்கள் இருவரும். அங்கு இவர்களை வேட்டைக்காரர்கள் என நினைத்துக் கொண்ட கணக்குப்பிள்ளை எம்.எஸ்.பாஸ்கர் செந்நாய்களை விரட்டும் வேலையை கொடுக்கிறார்.

வந்த இடத்தில் எம்.எஸ்.பாஸ்கரின் மகள் பிந்து மாதவி கிருஷ்ணாவை காதலிக்க இது தெரியவரும்போது கடுமையாக எதிர்ப்பு தெரிவிக்கிறார் எம்.எஸ்.பாஸ்கர். இன்னொரு பக்கம் அந்த ஊரின் பெரும்புள்ளியான ஹரிஷ் பெராடி வீட்டில் மிகப்பெரிய திருட்டு ஒன்றில் ஈடுபடுகிறார்கள் கிருஷ்ணா.

ஆனால் அது கிருஷ்ணா மற்றும் பிந்து மாதவி இருவரின் வாழ்க்கையையே புரட்டிப்போடும் அளவிற்கு பூதாகரமாக திரும்புகிறது.. கிருஷ்ணாவும் பிந்து மாதவியும் அதிலிருந்து மீண்டார்களா என்பது க்ளைமாக்ஸ்.

ஏழு வருடங்களுக்கு முன்பு வெளியாகி ரசிகர்களின் மனம் கவர்ந்த கழுகு படத்தின் இரண்டாம் பாகமாக இந்தக் கழுகு 2 வெளியாகியுள்ளது. முதல் பாகத்தில் இடம்பெற்ற அதே கூட்டணி தான் என்றாலும் முதல் பாகத்திற்கும் இரண்டாம் பாகத்திற்கும் எந்தவித தொடர்பும் இல்லாமல் இன்னொரு கதையை கையில் எடுத்துள்ளார் இயக்குனர் சத்யசிவா.

கழுகு படத்தின் மூலம் தனக்குள் இருந்த நடிப்பு திறமையை வெளிப்படுத்திய கிருஷ்ணா, இந்த படத்திலும் தனது கதாபாத்திரத்தில் வெகு இயல்பாக பொருந்தியிருக்கிறார்.. ஜாடிக்கேத்த மூடியாக முதல் பாகத்தைப் போலவே இந்த பாகத்திலும் கிருஷ்ணாவுடன் அழகான காதல் கெமிஸ்ட்ரியில் ஒத்துப்போகிறார் பிந்து மாதவி.. குறிப்பாக அவரது கண்களே பல கதைகள் சொல்கின்றன.

இந்த படத்தில் எம்.எஸ்.பாஸ்கரின் கேரக்டர் எதிர்பாராத திருப்பத்துடன் நம்மை ஆச்சரியப்படுத்துகிறது.. காளி வெங்கட்டும் இந்த படத்தில் தனது பங்களிப்பை மிகச் சிறப்பாக செய்துள்ளார்.. ஹரிஷ் பெராடி, வரும் காட்சிகளில் எல்லாம் தான் ஒரு சிறந்த நடிகர் என்பதை அழகாக வெளிப்படுத்துகிறார்.

யுவன் சங்கர் ராஜாவின் பின்னணி இசையும் பாடல்களும் முதல் பாகத்தைப் போலவே இது இரண்டாம் பாகத்தையும் தாங்கிப் பிடிக்கின்றன.. மலையும் மலை சார்ந்த பகுதிகளையும் வெகு அழகாக குளிர்ச்சியாக படம் பிடித்திருக்கிறது ராஜா பட்டாச்சார்ஜியின் ஒளிப்பதிவு.

இயக்குனர் சத்யசிவா மலையும் மலை சார்ந்த மனிதர்களின் வாழ்க்கையையும் படமாக்கியிருக்கும் விதம் எதார்த்தத்திற்கு மிக அருகில் இருக்கிறது.. செந்நாய் வேட்டையாடும் அந்த துவக்க காட்சிகள் படத்தில் இடையிலும் கிளைமாக்ஸிலும் கூட ஒருமுறை இடம்பெற்றிருந்தால் சுவாரசியமும் திரில்லும் இன்னும் அதிகரித்திருக்கும்.. மீண்டும் ஒரு அழகான காதல் கதையை அதே பின்னணியில் கொடுத்திருக்கும் சத்திய சிவா இந்த இரண்டாம் பாகத்திலும் தன்னை ஒரு வெற்றி இயக்குனர் என நிரூபித்திருக்கிறார்.