காயம்குளம் கொச்சுன்னி (மலையாளம்) – விமர்சனம்

kayamkulam kochunni review

சமகால சமூக கதைகளையே படமாக இயக்கிவந்தவர் இயக்குனர் ரோஷன் ஆண்ட்ரூஸ்.. தமிழில் ஜோதிகா நடித்த 36 வயதினிலே படத்தை இயக்கியவரும் இவரே. ஆனால் தற்போது, முதன்முறையாக பீரியட் படமாக காயம்குளம் கொச்சுன்னி என்கிற படத்தை இயக்கி வெளியிட்டுள்ளார். இது கேரளாவில் 1980களில் வெள்ளையர் ஆட்சிக்காலத்தில் பிரசித்தி பெற்ற ராபின்ஹூட்டை போன்ற ஒரு கொள்ளையன் ஒருவனின் கதை.

சாதாரண இளைஞன் ஒருவன் மக்களுக்கு உதவும் கொள்ளையனாக எப்படி மாறுகிறான் என்பதும் சாகசம் நிரம்பிய அவனது வாழ்க்கையும் தான் மொத்தப்படமும். இதில் நிவின்பாலி கதாநாயகனாகவும் மோகன்லால் முக்கிய வேடத்திலும் நடித்துள்ளனர்.. அதனாலேயே மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்திய இந்தப்படம் ரசிகர்களின் எதிர்பார்ப்பை ஈடு செய்துள்ளதா..? பார்க்கலாம்.

தந்தைக்கு திருட்டுப் பட்டம் கட்டப்பட்டதால் சாப்பாட்டுக்கு வழியின்றி தனது பத்து வயதிலேயே வேறு ஊருக்கு சென்று தஞ்சம் புகுகிறார் நிவின்பாலி (காயம்குளம் கொச்சுன்னி). திருடவே கூடாது என வைராக்கியமாக இருக்கும் நிவின்பாலியை தங்களது சுயலாபத்துக்காக பயன்படுத்தும் சிலர், தாங்கள் மாட்டிக்கொள்ளாமல் இருக்க, அவருக்கு திருட்டு பட்டம் சூட்டி தண்டனை கிடைக்க செய்கின்றனர்.

அந்த சமயத்தில் அரசாங்கத்தையே கதிகலக்கவைக்கும் மிகப்பெரிய கொள்ளையனான மோகன்லால் (இத்திக்கர பக்கி) நிவின்பாலியை காப்பாற்றி, ஏழைகளை காப்பாற்ற கொள்ளையடிக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தி அவருக்கு பயிற்சி அளித்து கொள்ளையனாக மாற்றுகிறார்.

அதன் பின் பணம் படைத்தவர்களிடம், ஆதிக்க மனம் படைத்தவர்களிடம் பொருட்களை கவர்ந்து ஏழைகளுக்கு உதவும் நிவின்பாலி, அரசாங்கத்திற்கு சிம்மசொப்பனமாக மாறுகிறார். முன்பு களரி கற்கும் குருகுலத்தில் அவரால் அவமானப்பட்டதாக கறுவிக்கொண்டு இருக்கும் தற்போதைய போலீஸ் அதிகாரி சன்னி வெய்ன், நிவின்பாலியை பிடித்து தூக்கிலிடுவேன் என சூளுரைக்கிறார். சட்டம் ஜெயித்ததா.? நியாயம் ஜெயித்ததா என்பது க்ளைமாக்ஸ்.

அப்பாவி இளைஞன், கோபக்கார கொள்ளையன் என தனது கதாபாத்திர மாற்றத்தை வெகு அழகாக இயல்பான நடிப்பால் படம் முழுக்க வெளிப்படுத்தி இருக்கிறார் நிவின்பாலி. குறிப்பாக இதுநாள் வரை செய்திராத அளவுக்கு இதில் ஆக்சன் காட்சிகளில் பின்னி எடுத்திருக்கிறார் மனிதர். கடும் உழைப்பை கொடுத்து அதற்கான வெற்றியையும் அறுவடை செய்திருக்கிறார்.

சரியாக இருபது நிமிடமே வந்தாலும் கெஸ்ட் ரோல் போல இல்லாமல், படம் முழுமைக்கும் தான் இருப்பது போன்ற தனது எனர்ஜியை கடத்திவிட்டு செல்கிறார் மோகன்லால். ஒரு கண்ணை மட்டும் சுருக்கிக்கொண்டு தலையை சாய்த்தபடி அவர் பேசும் ஸ்டைலே தனி.

நிவின்பாலியை காதலித்ததை தவிர வேறெந்த குற்றமும் செய்யாத பிரியா ஆனந்திற்கு இந்தப் படத்தில் துணிச்சலான வேடம். கொஞ்சம் கிரே சாயலுடன் அந்த கேரக்டரை அழகாக நடித்து கொடுத்திருக்கிறார். இத்தனை வருட பயணத்தில் நடிகை பிரியா ஆனந்திற்கு இதில் ரொம்பவே அழுத்தமான கதாபாத்திரம் என்று சொல்லலாம்.

தனக்கான அங்கீகாரம் இன்னொருவரிடம் பறி போகும் போது ஏற்படும் குரோதம், வெறுப்பு ஆகியவற்றை தனது கதாபாத்திரத்தில் வெளிக்கொணர்ந்து அக்மார்க் வில்லத்தனம் காட்டியிருக்கிறார் சன்னி வெய்ன். களரி பயிற்சி தரும் குருவாக பாபு ஆண்டனி கம்பீரம்.. கடைசியில் க்ளைமாக்ஸ் திருப்பத்திற்கு இவர் துணை போவது எதிர்பாராதது.

இவர்கள் தவிர ஆதிக்க சாதிக்காரர் என்பதை அடிக்கடி பறைசாற்றி அதிகாரம் செய்யும் சுதீர் காரமணா, மேல்சாதிக்கரர் என்றாலும் ஒடுக்கப்பட்டவர்களுக்காக குரல் கொடுக்கும் ஷைன் டாம் சாக்கோ, நண்பனின் உயிரை காப்பாற்றுவதாக நினைத்து துரோகத்துக்கு விலை போகும் மணிகண்ட ஆச்சாரி ஆகியோருடன் நம்ம எம்.எஸ்.பாஸ்கரும் படம் முழுதும் வரும் கேரக்டரில் அழகாக பொருந்தி ஆச்சர்யமூட்டுகிறார்.

18ஆம் நூற்றாண்டிற்கே அழைத்து சென்று கதை மாந்தர்களுடன் நம்மையும் உலாவர செய்துள்ளார் ஒளிப்பதிவாளர் பினோத் பிரதான். சமகாலத்திய தாக்கம் எதுவும் பின்னணியில் தென்பட்டு விடாதபடி வெகு ஜாக்கிரதையாக, அதேசமயம் அன்றைய கால கட்டத்தையும் அழகாக பிரதிபலிக்க உதவிய கலை இயக்குனரையும் பாராட்டியே ஆகவேண்டும். கோபிசுந்தரின் பின்னணி இசையில் காலத்திற்கேற்ற, கதைப்போக்கின் தீவிரத்திற்கேற்ற அழகான மாற்றம். படம் நெடுக தடதடக்க வைக்கிறார். படம் சற்றே நீளம் என்றாலும் அப்படி தோன்றாதபடி கச்சிதமாக படத்தொகுப்பு செய்துள்ளார் ஸ்ரீகர் பிரசாத்.

ஒரு கொள்ளையனின் உண்மை வரலாற்றை மிக நேர்மையாக பதிவு செய்துள்ளார் இயக்குனர் ரோஷன் ஆண்ட்ரூஸ். கள்ளனின் பக்கமும் ஒரு நியாயம் உண்டு என்பதை திரைக்கதை மூலம் சமன்படுத்தி சொல்லியிருக்கிறார். வெள்ளையார் ஆட்சிக்காலம், கொள்ளையர் வாழ்க்கை முறை என மிகப்பெரிய ஆய்வுகளை மேற்கொண்டு வரலாற்று படமான இதை ஒரு தவம் போல செய்து முடித்துள்ளார். எந்த இடத்திலும் குறை சொல்ல முடியாத ஆர்ட் டைரக்சன் அதற்கு முக்கிய சாட்சி.

மொத்த இரண்டே முக்கால் மணி நேரமும் டைம் மிஷினில் பயணித்து பதினெட்டாம் நூற்றாண்டுக்கு சென்று வாழ்ந்துவிட்டு வந்ததை போன்ற உணர்வு ஏற்படுவது நிஜம்