கவண் – விமர்சனம்

kavan poster 1

மீடியா நினைத்தால் நல்லதை கெட்டதாக்கவும் முடியும் கெட்டதை நல்லதாக்கவும் முடியும். இதை தனது பாணியில் சொல்லி மீடியாக்களுக்கு இடையே நடைபெறு வரும் டி.ஆர்.பி யுத்தத்தை பளிச்சென படம் பிடித்து காட்டியுள்ளார் இயக்குனர் கே.வி.ஆனந்த்.
விஜய்சேதுபதி, மடோனா, ஜெகன் உள்ளிட்டவர்கள் ஒரு பிரபல தனியார் சேனலில் வேலை பார்ப்பவர்கள்.. சேனல் முதலாளியான ஆகாஷ்தீப் டி.ஆர்.பி ரேட்டிங் மற்றும் பணத்துக்காக பாம்பை கயிறாக்கவும் கயிறை பாம்பாக்கவும் மாற்றக்கூடிய கூடிய ஆள்.., ஆளுங்கட்சி அரசியல்வாதியான போஸ்வெங்கட் தன்னுடைய கெமிக்கல் பேக்டரிக்கு எதிராக கிளம்பும் இளைஞர் இயக்கத்தின் மீது ஏவிவிடும் அராஜகத்தையும் சேனல் மூலமாக வெளிக்கொண்டுவர முயற்சிக்கிறார் விஜய்சேதுபதி.

ஆரம்பத்தில் விஜய்சேதுபதியின் நிகழ்ச்சிகளுக்கு ஊக்கம் கொடுத்தாலும், போகப்போக போஸ்வெங்கட்டிற்கு சாதகமாக நிகழ்ச்சியின் போக்கை மாற்றும்படி விஜய்சேதுபதியை நிர்ப்பந்திக்கிறார் ஆகாஷ்தீப்.. ஆனால்; விஜய்சேதுபதி இதற்கு உடன்பட மறுக்கவே, அவர் உட்பட நண்பர்கள் டீமை வேலையை விட்டு நீக்குவதுடன் வேறு எந்த சேனலிலும் வேலைக்கு சேரமுடியாதபடியும் செய்கிறார்..

சாதாரண சேனல் ஒன்றை நடத்திவரும் டி.ராஜேந்தர் இவர்களுக்கு வேலை கொடுக்கிறார்.. மீண்டும் போஸ்வெங்கட்டின் அநியாயங்களை இந்த சேனல் மூலம் விஜய்சேதுபதி டீம் தூசிதட்ட, டி.ஆர் சேனலின் டி.ஆர்.பி சூடு பிடிக்கிறது. இந்நிலையில் போஸ்வெங்கட்டின் தொழிற்சாலையை மூடச்சொல்லும் விக்ராந்த் தலைமையிலான இளைஞர் இயக்கத்திற்கு டி.ஆர் சேனல் ஆதரவு தருகிறது..

இதனை விரும்பாத போஸ்வெங்கட்டும் சேனல் அதிபர் ஆகாஷ்தீப்பும் விக்ராந்தை ஒழித்துக்கட்டுவதுடன் பழியை டி.ஆர் சேனல் மற்றும் விஜய்சேதுபதி மேல் தூக்கிப்போட முயற்சிக்கின்றனர். யாருடைய கை ஓங்கியது..? எந்த மீடியாவின் பவர் வென்றது என்பது க்ளைமாக்ஸ்.

துறுதுறு மீடியா நிருபராக, நிகழ்ச்சி தொகுப்பாளராக விஜய்சேதுபதி துடிப்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார்.. கூடவே அவரது வழக்கமான நக்கலும் நையாண்டியும் அவரது கேரக்டருக்கு இன்னும் வலு கூட்டுகிறது.. நடக்கும் தப்புகளுக்கு துணைபோகாமல் அதை தட்டி கேட்கவேண்டுமேன்கிற சராசரி இளைஞனின் கோபத்தை இயல்பாக வெளிப்படுத்துகிறார் விஜய்சேதுபதி.

ஜாடிக்கேத்த மூடியாக, அழகு குதிரையாக, மீடியா பர்சனாலிட்டியாக பர்ஸ்ட் கிளாஸில் பாஸாகிறார் மடோனா செபாஸ்டியன்.. படத்தின் இன்னொரு கதாநாயகன் என சொல்லும் விதமாக தனது மேனரிசங்கள் எதையும் மாற்றிக்கொள்ளாமல், தன்னை அப்டேட் செய்துகொண்டு நடித்திருக்கிறார் டி.ராஜேந்தர்.. நேர்மையை விலைபேச முடியாத அந்த மயில்வாகனன் கதாபாத்திரத்தில் அவர் கனகச்சிதம்..

‘அயன்’ வில்லன் ஆகாஷ்தீப் இதில் சேனல் அதிபராக டீசன்டான வில்லத்தனம் காட்டியிருக்கிறார் என்றால், அரசியல்வாதியாக வரும் போஸ்வெங்கட்டோ அரை வழுக்கையுடன் எந்நேரமும் குடித்துக்கொண்டு மூன்றாந்தர ரவுடி ரேஞ்சுக்கு இறங்கி அடித்துள்ளார். சமூகத்திற்கு எதிரான தீய விஷயங்களை தட்டிக்கேட்கும் கனமான கதாபாத்திரம் விக்ராந்திற்கு.. நேர்த்தியாக செய்திருக்கிறார்..

ஜெகனின் அளந்தெடுத்த காமெடி சரியாக ஒர்க் அவுட் ஆகிறது.. அவரது கேரக்டரின் ட்விஸ்ட்டும் ‘அட’ போட வைக்கிறது.. சூழ்நிலைக்கைதியான சேனல் செய்தி ஆசிரியராக பாண்டியராஜனுக்கும் பொருத்தமான கேரக்டர். பவர்ஸ்டாரின் கெஸ்ட் எண்ட்ரியும் அதில் அவர் ரசிகனுக்கு கொடுக்கும் சர்ப்ரைசும் செம. சேனல் முதலாளியின் வலதுகையாக இருந்துகொண்டு சேனலின் டி.ஆர்.பி ரேட்டிங்கை ஏற்றுவதற்காக தகிடுதத்தம் செய்யும் அந்த பெண்மணிக்கு ஒரு சபாஷ் பொக்கே கொடுக்கலாம்.

ஹிப் ஹாப் ஆதியின் இசையில் பாடல்கள் அளவாக நிறுத்தப்பட்டு பின்னணி இசைக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது.. அபிநந்தன் ராமானுஜனின் ஒளிப்பதிவு மீடியாவின் வேகத்துக்கு ஈடுகொடுத்து சடுகுடு ஆடியிருக்கிறது.. இடைவேளை வரை கத்திரிக்கு நிற்காமல் வேலைகொடுத்த எடிட்டர் ஆண்டனி, க்ளைமாக்ஸ் நெருங்கும்போது கொஞ்சம் ரிலாக்ஸ் ஆகி கத்திரிக்கும் ஒய்வு கொடுத்துவிட்டார் என்பது நன்றாகவே தெரிகிறது.. விக்ராந்தை தீவிரவாதியாக சித்தரித்து நடக்கும் வேட்டையும் க்ளைமாக்ஸில் நடந்தது என்ன என சொல்லப்படும் விளக்கமும் இன்னும் கொஞ்சம் நறுக்கப்பட்டு இருக்கலாம்.

பொது நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ளும் ஒரு அரசியல்வாதி எல்லா இடங்களிலும் குடித்துக்கொண்டேவா இருப்பார்..? அவரது நடவடிக்கைகளுக்கு ஒரு மீடியா இந்த அளவு துணைபோகுமா என படத்தில் கேட்பதற்கும் சில கேள்விகள் இருக்கின்றன. இருந்தாலும் அவற்றை யோசிக்கவிடாமல் படத்தை சுவாரஸ்யமாக நகர்த்தியுள்ளார் கே.வி.ஆனந்த்.

மக்களின் சார்பாக தப்பை தட்டிக்கேட்க வேண்டிய மீடியாவுக்குள் கார்ப்பரேட் அரசியல் புகுந்தால் என்ன ஆகும் என்பதை காட்சிக்கு காட்சி நினைவூட்டல் செய்வதோடு நடப்பில் உள்ள சில மீடியாக்களின் முகத்திரையையும் கிழித்துள்ளது இந்த கவண்..