கட்டப்பாவ காணோம் – விமர்சனம்

Kattappava-Kanom review

தனது படங்களில் தன்னைத்தவிர இன்னொரு எக்ஸ்ட்ரா பவரையும் இணைத்துக்கொண்டு வாகை சூடிவரும் சிபிராஜ் இந்தமுறை வாஸ்து மீன் என்கிற சினிமாவுக்கே புதிய விஷயத்தை கையில் எடுத்துள்ளார்..

தொட்டதெல்லாம் பொன்னாகும்.. இல்லையில்லை மண்ணாகும் பேட் லக் ஆசாமி தான் சிபிராஜ்.. பெற்ற தகப்பன் கூட தன்னை குத்திக்காட்டும் நிலையில், தனது வாழ்கையை தானே சொந்தமாக அமைத்துகொள்ள முயலும் சிபிராஜ், அதன் ஒரு கட்டமாக ஐஸ்வர்யா ராஜேஷை காதலித்து திருமணம் செய்துகொண்டு தனிக்குடித்தனம் போகிறார்..

எந்த வேலையிலும் நிலைக்க முடியாமல் போக, ஏதாவது பிசினஸ் செய்யலாம் என பணத்திற்காக யோசிக்கும் நேரத்தில் தான், அவரது வீட்டிற்கு அவரது தோழி சாந்தினி மூலமாக ‘கட்டப்பா’ என்கிற வாஸ்து மீன் வருகிறது.. கொஞ்சம் கொஞ்சமாக நம்பிக்கை வந்து, சரி இந்த மீன் மூலமாக அதிர்ஷ்டத்தை சோதித்து தான் பார்ப்போமே என முடிவுசெய்து, ஒரு கோடி ரூபாய் பணம் தங்களுக்கு கிடைக்க வேண்டும் என‘கட்டாப்பாவிடம் கோரிக்கை வைக்கின்றனர்.

இந்த நிலையில், இந்த கட்டப்பாவால் தான் தனக்கு அதிர்ஷ்டம் என எண்ணிக்கொண்டிருக்கும் சாந்த மீனுக்கு சொந்தக்கராரரான ரவுடி மைம் கோபியிடம் இருந்து லோக்கல் திருடர்களால் களவாடப்பட்ட இந்த மீன் தான் இப்போது சிபி வீட்டில் தஞ்சம் புகுந்துள்ளது.

கட்டப்பா தொலைந்ததில் இருந்து மைம் கோபிக்கு எதிர்பாராத இழப்புகள் தொடர்ந்து ஏற்பட, முழு மூச்சாக மீனை தேடுகிறார்.. இந்நிலையில் ‘களவாணி’ திருமுருகன் உட்பட மூன்று பேர் தங்களுக்கு சேரவேண்டிய நான்கு கோடியை அபேஸ் பண்ணிவிட்டதாக கூறி, அதை கொடுக்குமாறு மிரட்டி சிபிராஜின் வீட்டில் வந்து டேரா போடுகின்றனர்.

சிபிராஜ் கேட்ட பணம் கிடைப்பதற்கு பதிலாக திருமுருகன் குரூப்பினரிடம் இருந்து அடி உதை தான் கிடைக்கிறது.. உண்மையிலேயே கட்டப்பா அதிர்ஷ்டம் தரும் மீன் தானா..? சிபிராஜுக்கு கேட்டதை அது கொடுத்ததா..? மைம் கோபியிடமே திரும்ப சேர்ந்ததா..? திருமுருகன் குரூப் எதற்காக நான்கு கோடி கேட்டு சிபிராஜை மிரட்டுகிறார்கள் என்பதற்கு விடை சொல்கிறது மீதிப்படம்.

கலகலப்பாக காமெடியாக கதை சொல்வது என முடிவெடுத்து இறங்கிவிட்டார்கள்.. அதனால் மேக்ஸிமம்.. ரசிகர்கள் ரசிக்கும் விதமாகவே போரடிக்காமல் படத்தை நகர்த்தி இருக்கிறார்கள்..

‘அதிர்ஷ்டக்கட்டை’யாக வரும் சிபிராஜ் தனது கேரக்டரில் இயல்பாக பொருந்தி இருக்கிறார்.. அளவுக்கு அதிகமான ஹீரோயிசம் எங்கும் தலை தூக்காமல் கேரக்டர் போட்டுக்கொடுத்த பார்டரிலேயே அழகாக பயணித்திருக்கிறார்.. காமெடியும் சரளமாக இவருக்கு ஒர்க் அவுட் ஆகியிருக்கிறது..

ஐஸ்வர்யா ராஜேஷிடம் நடிப்பு மட்டுமல்லாமல் கிளாமரும் நாளுக்கு நாள் மெருகேறி வருகிறது.. தண்ணியடித்து விட்டு சிபிராஜிடம் ஜாலியாக சலம்புவது, பெண் பார்க்க இன்டர்வியூ எடுக்கும் அவரது அப்பாவை கலாய்ப்பது, வீட்டிற்குள் புகுந்த ரவுடி கும்பலுக்கு சோறாக்கி போடுவது என படத்தில் இவருக்கு நிறைய முகங்கள்..

படத்தில் இடம்பெற்றுள்ள மற்ற துணை கதாபாத்திரங்கள் அனைவருமே நிச்சயமாக ஏதோ ஒரு விதத்தில் நம்மை இம்ப்ரெஸ் செய்தவாறே இருக்கின்றனர்.. வாஸ்து மீன் தான் தனது செல்வாக்கிற்கு காரணம் என நம்பும் மைம் கோபி அதி கைப்பற்ற மெனக்கெடும் காட்சிகள், வாஸ்து மீனை திருடிவிட்டு வாளி தேடிப்போகும் பெயிண்டர் யோகிபாபு, வாஸ்து மீன் வியாபாரம் செய்யும் லிவிங்ஸ்டன். ஆறுவிரல் டிடெக்டிவாக வரும் திண்டுக்கல் சரவணன் என ஒரு குரூப் காமெடியில் களைகட்ட வைக்கிறார்கள்..

இவர்கள் போதாதென்று பணம் கேட்டு சிபிராஜை மிரட்டி வீட்டிற்குள் நுழையும் திருமுருகன், காளி வெங்கட், ‘எமன்’ ஜெயக்குமார் இவர்களின் ரூட் மிரட்டலும் காமெடியும் கலந்த ஜூகல்பந்தி.. அதிலும் ஆரம்பத்தில் தன்னை வான்டட் ஆக ரவுடியாக கட்டும் காளிவெங்கட், போகப்போக ஐஸ்வர்யாவின் நைட்டியை போட்டுக்கொண்டு அமர்க்களம் பண்ணும் அளவுக்கு இறங்கி அடித்திருக்கிறார்.. போதாததற்கு ஜெயக்குமாரும் ‘இங்க பாருடா’ என அசத்துகிறார்..

இரண்டு மூன்று காட்சிகளில் வந்தாலும் சாந்தினி துறுதுறுவென ஜமாய்க்கிறார். அதிலும் காளி வெங்கட்டுடன் அமர்ந்து அவர் டிவியில் கிரிக்கெட் பார்க்கும் காட்சி செம கலாட்டா.. பக்கத்து வீட்டு நட்பாக வரும் ‘விஜய் டிவி’ சேது, அவரது மகளாக வரும் பேபி மோனிகா இருவருக்கும் படத்தில் நிறைய வாய்ப்பு கொடுக்கப்பட்டுள்ளது.. அவர்களும் அதை சரியாக பயன்படுத்தி இருக்கிறார்கள். சிபிராஜின் அப்பாவாக வரும் சித்ரா லட்சுமன் கூட தனது பங்கிற்கு லெப்ட் ரைட் வாங்குகிறார். இவர்களுடன் சேர்த்து கதையின் முக்கிய காரணகர்த்தாவான ‘கட்டப்பா’ என்கிற அந்த வாஸ்து மீனும் தனது இருப்பை படம் முழுவதும் அமைதியாக காட்டுகிறது.

ஆனந்த் ஜீவாவின் ஒளிப்பதிவும், சந்தோஷ் தயாநிதியின் இசையும் படம் முழுவதும் நம்மை ரிலாக்ஸ் மூடிலேயே பயணிக்க வைக்கின்றன. காணாமல் போன கட்டாப்பாவை மீட்பதற்காக லிவிங்ஸ்டன், திண்டுக்கல் சரவணன் என ஆளாளுக்கு பேரத்தை ஏற்றுவதும் பின்னர் அவர்களது குட்டு உடைபடுவதும் சரியான காமெடி. படத்தில் அத்தனை நடிகர்களின் திறமையையும் கொஞ்சம் கூட வீணாக்காமல் பயன்படுத்தியுள்ளார் இயக்குனர் மணி சேயோன்..

படத்தின் கதாபாத்திரங்கள் அனைவருக்குமே மீன்களின் பெயர் வருவது போல பெயர் வைத்திருப்பது புதுமை.. அதேபோல காட்சிகளிலும் பல இடங்களில் புத்திசாலித்தனத்தை கையாண்டிருக்கிறார்.. என்னவொரு குறை என்றால் வசனங்களில் பல இடங்களில் இரட்டை அர்த்தம் தெறிக்கிறது… இளைஞர்கள் அந்த காட்சியில் வெடித்து சிரித்தாலும் கூட, சிபிராஜின் படங்களுக்கு சமீபகாலமாக தாய்மார்களும் குழந்தைகளும் அதிக அளவில் ஆடியன்ஸ் ஆக என்ட்ரி ஆகியிருக்கிறார்கள் என்பதால் அதை கவனமாக தவிர்த்திருக்கலாமே என்கிற எண்ணமும் தோன்றவே செய்கிறது..

மொத்தப்படமாக பார்க்கும்போது கொடுத்த காசுக்கு உத்தரவாதம் தரும் ஒரு அருமையான பொழுதுபோக்கு படம் தான் இந்த ‘கட்டப்பாவ காணோம்’.