‘கட்டப்பா’வுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்..!

தனித்துவம்… புரட்சித்தமிழன் சத்யராஜின் பெயரை இன்று வரை திரையுலகில் நிலை நிறுத்தியது அந்த வார்த்தை தான்.. வில்லனாக நடித்து கதாநாயகனாக மாறிய சிலருக்கும், வில்லனாக நடித்து, அப்படியே கதாநாயகனாக மாற விரும்பும் பலருக்கும் இன்றும் கூட சத்யராஜ்தான் ரோல் மாடல் என்பதில் மாற்றுக்கருத்தே இல்லை.

அதுமட்டுமல்ல.. சினிமாவில் சாதிக்கவேண்டும் என வருபவர்களுக்கு தன்னம்பிக்கை ரொம்பவே முக்கியம். தன்னம்பிக்கையுடன் கூடிய திறமைக்கு என்றுமே மரியாதை உண்டு. பத்து அடியாட்களில் ஒருவராக வந்தாலும் தனது திறமையான நடிப்பால் மெயின் வில்லனாக மாறி, அதிலும் புதிய பரிணாமத்தை காட்டியதால் ஒரு முழுமையான கதாநாயகனாகவும் தன்னை மாற்றிக்கொண்ட நடிகர் சத்யராஜை விட தன்னம்பிக்கைக்கு உதாரணமாக வேறு யாரை சொல்லிவிட முடியும்?.

ஓகே.. ஹீரோவாக நடித்த காலம் முடிந்துவிட்டது என்பதற்காக நடிப்பை முடக்கிப்போட்டு விட முடியுமா என்ன..? ‘மாத்துடா ரூட்டை’ என ஒன்பது ரூபாய் நோட்டு, பெரியார், நண்பன், ராஜாராணி, சிகரம் தொடு, பூஜை, பாகுபலி என ட்ரெண்டிற்கு ஏற்றமாதிரி குணச்சித்திர வேடங்களை தேர்ந்தெடுத்து புதிய பாதை போட்டுக்கொண்ட சத்யராஜ், ‘பாகுபலி’யின் கட்டப்பாவாக அவதாரம் எடுத்ததை தொடர்ந்து தனி ராஜபாட்டையில் நடைபோட்டு வருகிறார்.

இன்று வரைக்கும் ‘பாகுபலி 2′ ஆம் பாகத்துக்கான ரசிகர்களின் எதிர்பார்ப்பு, ‘கட்டப்பா’ ஏன் பாகுபலியை கொன்றார்’ என சத்யராஜின் கதாபாத்திரத்தின் மீதான எதிர்பார்ப்பாகவே இருந்து வருகிறது.. ஆம்.. ‘பாகுபலி’ வெளியானதில் இருந்து இன்றுவரை குழந்தைகள் முதற்கொண்டு அனைவரும் சத்யராஜை மனதில் இருத்தியிருப்பது ‘கட்டப்பா’வாகத்தானே..

சரித்திர வீரனாக நடித்த அதே சத்யராஜ், ‘ஜாக்சன் துரை’யில் வித்தியாசமான பேய் கெட்டப்பில் நடித்தது அவரது சமகாலத்திய நண்பர்கள் யாரும் செய்யாதது.. செய்யத்துணியாதது.. தமிழ் மட்டுமல்ல.. தெலுங்கு, இந்தி என மொழி பேதம் இல்லாமல் பரபரப்பாக நடித்துவருகிறார் சத்யராஜ். காரணம் சத்யராஜின் தனித்துவமான நடிப்பு மற்ற மொழி இயக்குனர்களையும் கவர்ந்திருப்பது தான்.

இன்று பிறந்தநாள் காணும் நம் புரட்சித்தமிழன் சத்யராஜுக்கு நமது behind frames தனது இனிய பிறந்தநாள் வாழ்த்துக்களை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறது.