கத்தி – விமர்சனம்

 

விவசாய நிலங்களை ஆக்கிரமிக்க முயலும் பன்னாட்டு நிறுவனங்களுக்கு எதிராக ஜீவானந்தம் (விஜய்-1) துவக்கும் போரட்டாமும் சந்தர்ப்ப சூழ்நிலையால் அதை கதிரேசன் (விஜய்-2) கையிலெடுத்து தீர்வு காண்பதும் தான் ‘கத்தியின் ஷார்ப்பான கதைக்கரு. அந்தவகையில் நீர் ஆதாரம் காப்பாற்றப்பட வேண்டியதன் அவசியத்தை உரக்க கத்தி சொல்லியிருக்கிறது இந்த ‘கத்தி’..

ஜீவா, கதிரேசன் என இரண்டு கேரக்டர்களில் விஜய் தோன்றினாலும் ஆள் மாறாட்டம் காரணமாக ஜீவா அடக்கி வாசிக்க, கதிரேசனுக்குத்தான் கூடுதலாக ஸ்கோர் செய்கிறார்.. சில்லரை காசுகளை வைத்து விஜய் பண்ணும் பைட் ரசிகர்களுக்கு எக்ஸ்ட்ரா போனஸ்.

செல்போனுடன் ஆபரில் வாங்கிய மெமரி கார்டு போல அளவாக ஆனால் அழகாக வந்து போகிறார் சமந்தா. வீராணம் குழாய்க்குள் அமர்ந்து விஜய்யை மோதிரம் மாற்றி நிச்சயம் பண்ணுவது ரணகளத்திலும் ஒரு கிளுகிளுப்பு.

காமெடிக்காக நுழைத்திருந்தாலும் படம் முழுவதும் கேரக்டர் ரோலிலேயே ட்ராவல் பண்ணுகிறார் சதீஷ்.. ஓரளவுக்கு விஜய்யே காமெடியையும் மேனேஜ் பண்ணுவதால் அதில் பெரிய குறைபாடு எதுவும் சொல்லவேண்டியதில்லை.

கார்ப்பரேட் கம்பெனி முதலாளி என்பதாலேயே வெண்ணை தடவிய ரொட்டிபோல வரும் வில்லன் நீல் நிதின் முகேஷ் அவரது கம்பெனிக்குள்ளேயே அமர்ந்து வில்லத்தனம் காட்டுகிறார்.  விஜய்யின் அம்மாவாக வரும் ‘ரமா’ இனி அம்மா கேரக்டர்களில் சரண்யாவுக்கு போட்டியாக இருப்பார்.. விஜய் படத்தில் நட்சத்திர கூட்டம் குறைவாக இருப்பது இந்தப்படமாகத்தான் இருக்கும். அனிருத்தின் மெர்சல் இசையில் பாடல்கள் சீரியசான திரைக்கதையை அவ்வப்போது ரிலாக்ஸாக்குகின்றன..

விவசாயம் மற்றும் நீர் ஆதாரம் என சீரியசான பிரச்சனையை கையில் எடுத்து அதற்கு தனது பாணியில் தீர்வுசொல்ல முயன்றிருக்கிறார் ஏ.ஆர்.முருகதாஸ். ஆனால் பிரச்சனைக்கு தீர்வு காண்பதைவிட அதை மீடியாக்கள் மூலம் மக்களிடம் எடுத்துச்செல்லும் காட்சிகளில் தான் மெனக்கெட்டிருக்கிறார். மீடியாக்கள் மேல் முருகதாஸுக்கு என்ன கோபமோ.. கிடைத்த இடங்களில் எல்லாம் அவர்களை வாருகிறார் மனிதர்.

அதேபோல ஆள்மாறாட்ட கதைகளில் ஒருவருக்கு தெரியாமல் இன்னொருவர் அந்த கேரக்டராக மாறும்போது ஏற்படும் லாஜிக் விஷயங்களை  ஜஸ்ட் லைக் தட் தன் இஷ்டத்திற்கு தாண்டும்போது ‘யூ ட்டூ முருகதாஸ்’ என கேட்க தோன்றுகிறது..

அதேசமயம் 5௦ பேரை தனி ஆளாக விஜய் அடித்து வீழ்த்தும் டெக்னிக்கில் முருகதாஸின் ஐடியா கைதட்டலை அள்ளுகிறது. ஆனாலும் விஜய்யை இரட்டை வேடங்களில் நடிக்கவைத்து இருவருக்கும் சமமான தீனி போடாமல் விட்டுவிட்டாரே என்பதுதான் கொஞ்சம் மனக்குறையாக இருக்கிறது..