கருப்பன் – விமர்சனம்

karupan review

அக்மார்க் கிராமத்து கதையில் விஜய்சேதுபதி நடிப்பில் வெளியாகி இருக்கும் படம் தான் இந்த ‘கருப்பன்’.

மாடுபிடி வீரரான விஜய்சேதுபதி, யாராலும் அடக்கவே முடியாத பக்கத்து ஊர் பசுபதியின் காளையை அடக்குகிறார். காளையை அடக்குவதற்கு முன், தான் கொடுத்த வாக்குப்படி தனது தங்கை தான்யாவை விஜய்சேதுபதிக்கு திருமணம் செய்து வைக்கிறார் பசுபதி. அண்ணனின் செயலில் தான்யாவுக்கு உடன்பாடில்லை என்றாலும், விஜய்சேதுபதியின் நல்ல மனதறிந்து சந்தோஷமாக திருமணம் செய்து வாழ்க்கை நடத்துகிறார்.

ஆனால் சின்னவயதில் இருந்தே தான்யா தனக்குத்தான் என காத்திருக்கும் முறைமாமன் பாபி சிம்ஹாவுக்கு தலையில் இடி விழுந்தது போல் ஆகிறது. இதனால் விஜய்சேதுபதிக்கும் பசுபதிக்கும் இடையே மனஸ்தாபத்தை ஏற்படுத்தி, அதை கொஞ்சம் கொஞ்சமாக ஊதி பெரிய நெருப்பாக்குகிறார். இந்த களேபரத்தால் வெறுத்துப்போய் தான்யா புகுந்த வீடு வந்துவிட, இதை சாக்காக வைத்து ஒருகட்டத்தில் விஜய்சேதுபதியை போட்டுத்தள்ளவும் பசுபதியை சம்மதிக்க வைக்கிறார் பாபி சிம்ஹா.

இதன்மூலம் தான்யாவை அடைய நினைக்கும் பாபி சிம்ஹாவின் திட்டம் நிறைவேறியதா..? இல்லை சதியை வென்று விஜய்சேதுபதி-தான்யா ஒன்று சேர்ந்தார்களா என்பது க்ளைமாக்ஸ்.

முறுக்கு மீசையுடன் அசல் கிராமத்தானாக முழுப்படத்தையும் தாங்கிப்பிடிக்கிறார் விஜய்சேதுபதி. மனைவியுடன் காதல், மச்சான் பசுபதியுடன் ஊடல், வில்லன்களுடன் அதிரடி மோதல் என ஆல் ஏரியாவிலும் கலக்குகிறார் மனிதர்.. குறிப்பாக ஜல்லிக்கட்டில் ஜமாய்த்திருக்கிறார்.

ஜாடிக்கேத்த மூடியாக அவருக்கு ஜோடியாக, மனைவியாக தான்யா செமையாக செட்டாகி இருக்கிறார். கணவனிடம் காதலுடன் அன்பை பரிமாறுவதாகட்டும், அவனை கட்டுக்குள் வைத்திருப்பதாகட்டும் அவன் கைமீறி போகும்போது விரக்தியை வெளிப்படுத்துவதாகட்டும் முந்தைய படங்களை விட இதில் நடிப்பில் ஒரு படி முன்னேறி இருக்கிறார் தான்யா.

அளவெடுத்து தைத்த சட்டை போல கேரக்டருக்குள் தன்னை நுழைத்துக்கொண்டுள்ளார் பசுபதி. தனது தங்கையை திருமணம் செய்துகொடுக்க விஜய்சேதுபதிக்கு வக்காலத்து வாங்கும் அவரே, காலப்போக்கில் அவரை கொலைசெய்ய துணியும் அளவுக்கு சூழ்நிலைக்கைதியாக தன்னை மிகச்சரியாக வெளிப்படுத்தியுள்ளார்.

தனக்கான பெண்ணை இன்னொருவன் தட்டிச்சென்றுவிட்டான் என்பதாலேயே வில்லனாக மாறி அண்டர்பிளே செய்து சாணக்கியத்தனம் காட்டியுள்ளார் பாபி சிம்ஹா. ஹீரோவாக அவர் நடித்ததை விட வில்லனாக நடிக்கும்போதுதான் அவர்மீது தனி வெளிச்சம் தெரிகிறது. விஜய்சேதுபதியின் தாய்மாமனாக வரும் சிங்கம்புலி காமெடியை விட குணச்சித்திர நடிப்பில் பாஸ்மார்க்.. இல்லையில்லை பர்ஸ்ட் மார்க்கே வாங்குகிறார்.

துணை வில்லனாக வரும் சரத் லோஹித்ஸ்வா மற்றும் லிங்கா அன் கோ அணுகுண்டு வெடிப்பதுபோல வந்து புஸ்வாணம் போல ஆகிவிடுகிறார்கள். பசுபதியின் மனைவியாக நீண்ட நாளைக்குப்பின் தலைகாட்டியுள்ளார் ‘சமுத்திரம்’ பிரதர்ஸின் தங்கச்சி காவேரி. பாபி சிம்ஹாவுடன் இருந்து அவருக்கு தூபம் போடுவதுடன், ஒவ்வொரு முறையும் தனது குதர்க்கமான பேச்சால் விஜய்சேதுபதிக்கும் பசுபதிக்கும் சண்டை இழுத்துவிடும் சகுனி வேலையை படம் முழுதும் ‘கருப்பன் குசும்புக்காரன்’ பெரிசு நன்றாகவே செய்துள்ளார்.

இமானின் இசையில் .பாடல்களும் ஓரளவு இனிமைதான்.. இருந்தாலும் டூயட்டுகளின் எண்ணிக்கையில் ஒன்றை குறைத்திருக்கலாம். ‘காளையை அடக்கினால் பெண்’ என தொண்ணூறுகளின் புகழ்பெற்ற கான்செப்ட்டில் பெரிய அளவில் லேட்டஸ்ட் சமாச்சாரங்களை திணிக்காமல் யதார்த்தமான ஒரு கிராமத்து கதையை தந்துள்ளார் இயக்குனர் பன்னீர் செல்வம்.. லாஜிக்காக கேட்பதற்கு சில கேள்விகள் இருந்தாலும், ஜஸ்ட் லைக் தட் அதை ஒதுக்கிவிட்டு படத்தை பார்க்கும்போது சுவாரஸ்யத்தில் எந்த குறையும் இருப்பதாக தெரியவில்லை.