கப்பல் – விமர்சனம்

 

திருமணம் செய்தால் நட்பு பிரிந்துவிடும் என்பதால் ‘என்றென்றும் புன்னகையுடன் இருக்கவேண்டும் என்பதற்காக திருமணமே செய்யக்கூடாது என ஐந்து சிறுவர்கள் சின்ன வயதிலேயே சபதம் செய்கிறார்கள்.

பெரியவர்களானதும் இதில் ஒருவர் திருமணம் செய்துகொண்டுவிட நண்பர்கள் அவனை ஒதுக்குகிறார்கள். இன்னொருவரான வைபவ்க்கும் காதல் கைகூட, இதை அறிந்த மற்ற மூன்று பேரும், அதை தடுக்க அஸ்திரம் எடுக்கிறார்கள். காதல் ஜெயித்ததா? நண்பர்களின் சபதம் ஜெயித்ததா..? என்பதுதான் க்ளைமாக்ஸ்.

வைபவுக்கு ஏற்றமாதிரி கதை என்பதால் முழுப்படத்திலும் புகுந்து விளையாடுகிறார். கூடவே ஐடியா கொடுக்கிறேன் என வி.டி.வி கணேசும் சேர்ந்துகொள்ள இருவரும் பிரமாதப்படுத்துகிறார்கள். நண்பர்களான கருணாகரன் & கோ, காதலை பிரிக்கிறோம் என அடிக்கும் கூத்துக்கள் ஆரம்பத்தில் காமெடியாக இருந்தாலும் அவர்கள் அதில் சீரியஸாக இறங்கும்போது நமக்கு வெறுப்பையே ஏற்படுத்துகிறது.

கதாநாயகி சோனம் பஜ்வா வடக்கத்திய முகமாக இருந்தாலும், அவரிடம் உள்ள ஏதோ ஒரு வசீகரம் அவர்பால் நம்மை ஈர்க்கிறது. அவருக்கும் வைபவுக்குமான ரொமான்ஸ் காட்சிகள் இளசுகளுக்கு நல்ல தீனி.. ரோல் மாடல் பில்டப்புடன் சில நிமிடங்கள் மட்டுமே வந்தாலும் ரோபோ சங்கர் அசால்ட் பண்ணுகிறார். பாவம்ப்பா அந்த வில்லன் அபய்.. க்ளைமாக்சில் அவரை அப்படி அசைங்கப்படுத்தியிருக்கத்தான் வேண்டுமா..?

நடராஜன் சங்கரன் இசையில் ‘ஊருவிட்டு ஊரு வந்து’ பாடலை ரீமிக்ஸ் செய்து, அதை சரியான நேரத்தில் பிக்ஸ் செய்த விதம் அருமை. பாடல் காட்சிகளில் பிரமாண்டம் காட்டுகிறது தினேஷ் கிருஷ்ணனின் கேமரா.. காமெடியாக நகர்த்த வேண்டும் என்பதற்காக இயக்குனர் கார்த்திக் ஜி.கிரிஷ் கதையின் எந்த இடத்திலும் லாஜிக் பார்க்கவில்லை என்பது நன்றாகவே தெரிகிறது. சரி, காமெடிக்கு எதற்கு லாஜிக்..? சிரித்து ரசிக்க ‘கப்பல்’ நல்லதொரு பொழுதுபோக்குதான்.