கமலி from நடுக்காவேரி’ ; மாணவர்களுக்கும் பெற்றோர்களுக்குமான படம்.


கயல் ஆனந்தி கதாநாயகியாக நடித்துள்ள படம் ‘கமலி from நடுக்காவேரி’. படத்தின் டைட்டிலே கேட்பதற்கு வித்தியாசமாக இருக்கிறது. அதேபோல படமும் நிச்சயமாக வித்தியாசமாக இருக்கும் என்கின்றனர் படக்குழுவினர். இந்தப்படத்தை இயக்குநர் ராஜசேகர் துரைசாமி இயக்கியுள்ளார். இவர் இயக்குனர் லிங்குசாமியின் சீடர். பிரதாப் போத்தன், இமான் அண்ணாச்சி, நக்கலைட் ஸ்ரீஜா, ரேகா சுரேஷ் மற்றும் பலர் நடித்துள்ளனர்.

வரும் பிப்-19ஆம் தேதி இந்தப்படம் வெளியாகிறது. இந்தநிலையில் இந்தப்படத்தின் பத்திரிகையாளர்கள் சந்திப்பில் கலந்து கொண்டு படம் குறித்த சுவாரஸ்யமான தகவல்களையும் தங்களது அனுபவங்களையும் படக்குழுவினர் பகிர்ந்துகொண்டனர்.

படத்தின் இயக்குநர் ராஜசேகர் துரைசாமி பேசும்போது, நான் திருச்சி மாவட்டம் பச்சைமலை அடிவாரத்தை சேர்ந்தவன். சொல்லப்போனால் நான் தான் ஆண் கமலி. என்னுடைய பெண் வர்க்கம் தான் கமலி கதாபாத்திரம். அரசாங்க வேலையில் இருக்கும் ஒருவர் தன்னுடைய மகனை தனியார் பள்ளியில் படிக்க வைத்தார். ஆனால் மகளை அரசுப்பள்ளியில் படிக்க வைத்தார். அந்த இடத்தில் தான் இப்படத்தின் கரு தோன்றியது.

இந்த கதை எழுதும்போது எனக்கு நினைவிற்கு வந்தது ஆனந்தி மட்டும்தான். ஆனால், ஆனந்தி ஒப்பந்தமானது எளிதாக நடக்கவில்லை. ஆந்திராவில் அவர் வாரங்கல்ளில் அவர் வசிக்கும் வீட்டுக்கே சென்று கதை கூறினோம். கதை கேட்ட அடுத்த நிமிடம் இப்படத்தை எப்போது எடுக்கலாம். நான் என்ன செய்ய வேண்டும் என்று ஒரு அப்போதே அந்தப்படத்திற்குள் வந்துவிட்டார்.. படம் ஆரம்பித்ததில் இருந்து முடியும் வரை கமலியாகவே வாழ்ந்தார்.

பிரதாப் போத்தனிடம் கதை சொல்வதற்கு முன் பயம் இருந்தது.. ஆனால் நேரில் சந்தித்தபோது வேறுவிதமாக இருந்தார்.. கதை கூறியதும் மிகவும் ஆர்வமாக ஒப்புக்கொண்டார்.. பெரிய மனிதருக்குள்ளும் குழந்தைத்தனம் இருக்கும் என்பதை அவரிடம் கண்டேன்.

நிகழ்ச்சியில் முத்தாய்ப்பாக ‘கயல்’ ஆனந்தி பேசும்போது, “என்னுடைய வாழ்க்கையிலும், சினிமாவிலும் இது முக்கியமான படம். இப்படம் அனைவருக்கும் சென்று சேர வேண்டும். அனைத்து பெண்களையும் இணைக்கும் விதமாக இருக்கும். பெற்றோர்கள் ஊக்கமளிக்கும் விதமாக இருக்கும்.

கதாநாயகிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படம் என்றதும் பலரும் ஏன் இதேபோல படங்களைத் தேர்ந்தெடுக்கிறீர்கள் என்று கேட்டதுதான் நினைவிற்கு வந்தது. ஆனால், இந்த கதாபாத்திரம் கிடைத்தது எனக்கு அதிர்ஷ்டம். இப்படத்தை நிறைய பெற்றோர்களும், பிள்ளைகளும் பார்க்க வேண்டும்” என்றார்.