ரஜினி-கமல் இணைந்து செயல்படவேண்டும் “ – பிறந்தநாளில் ஐசரி கணேஷ் வேண்டுகோள்..!

isari ganesh-kamal

வேல்ஸ் கல்விக்குழுமத்தின் நிறுவனர், வேந்தர் டாக்டர் ஐசரி கே கணேஷ் அவர்களின் பிறந்த தினமான அக்டோபர் 7ஆம் தேதியை ஆண்டுதோறும் வேல்ஸ் குடும்ப விழாவாக கொண்டாடி வருகிறார்கள். இந்த ஆண்டின் வேல்ஸ் குடும்ப விழா சென்னை ஈஞ்சம்பாக்கத்தில் உள்ள வேல்ஸ் இண்டர்நேஷனல் பள்ளியில் நடைபெற்றது. விழாவில் நடிகர் கமல்ஹாசன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு வாழ்த்தி பேசினார்.

விழா நாயகன் ஐசரி கணேஷ் பேசும்போது,“கமல்ஹாசன் சாருக்கும் எனக்கும் ஒரு நல்ல உறவு நீடித்து வருகிறது. என் மீது அதிக அக்கறை கொண்டவர். கமல்ஹாசன் நற்பணி இயக்கம் சினிமாவையும் தாண்டி, நல்ல பல சமூக சேவைகளையும் செய்து வருகிறது. அடுத்த கட்டத்தை நோக்கியும் அது போய்க் கொண்டிருக்கிறது. தற்போது இரண்டு வண்ண பறவைகள் வேறு வேறு திசையில் பயணித்து வருகின்றன, அவை இணைந்து பயணித்தால் அது நிச்சயம் வரலாற்றில் முக்கியமான நிகழ்வாக மாறும்” என்று ரஜினி-கமல் அரசியலிலும் இணையவேண்டும் என்கிற தனது ஆசையை சூசகமாக வெளிப்படுத்தினார்.

“இது நட்பு உறவாக மாறும் விழா. தாயார் மற்றும் குடும்பத்தார் முன்னிலையில் நடக்கிறது. இனி நண்பர் கமல்ஹாசன் என்று அழைக்காமல், அண்ணன் கமல்ஹாசன் என்றே அழைக்கலாம். அவருக்கு நான் அண்ணனாக மாறியது தான் இந்த பிறந்தநாள் பரிசாக அளிக்கிறேன். கணேஷின் தந்தையார் ஐசரி வேலன் அவர்கள் அரசியலில் பல பதவிகள் கிடைத்தும் கூட, கலையின் மீது இருந்த தீராத ஆர்வத்தால் வாழ்நாளின் கடைசி வரை நடித்தார். இங்கு பறவைகளை பற்றி பேசினார்கள். நான் மக்களுக்காக பறக்கிறேன், உடன் யார் வந்தாலும் சேர்ந்து பறப்பேன். நான் கோழிக்குஞ்சுகளுடன் வளர்ந்த கழுகு. என் கொடியும் நானும் பறப்பது மக்களுக்காக தான். டெல்லி சென்றபோது, என்னை யாருடன் கூட்டணி வைத்துக் கொள்வீர்கள் என்று கேட்டார்கள், எங்கள் மரபணுவை மாற்ற முயற்சிக்காதவர்களுடன் தான் நான் கூட்டணி வைப்பேன்” என்றார் கமல்ஹாசன்.

விழாவில் ஐசரி கணேஷ் அவர்களின் தாயார் புஷ்பா ஐசரி வேலன், வேல்ஸ் பல்கலைக்கழக பதிவாளர் வீரமணி, ஆர்த்தி கணேஷ் ஆகியோர் கலந்து கொண்டனர். பல்வேறு முக்கிய பிரபலங்கள், வேல்ஸ் குழும பேராசிரியர்கள், ஆசிரியர்கள், பணியாளர்கள் ஆகியோரும் இந்த விழாவில் கலந்து கொண்டனர்.

சேவியர் பிரிட்டோ கௌரவ விருந்தினராக கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தார். இவ்விழாவில் வேல்ஸ் கல்விக்குழுமத்தில் சிறப்பாக பணியாற்றி, அதன் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருப்பவர்களுக்கு விருதுகள் மற்றும் பரிசுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டது. விழாவின் ஒரு அங்கமாக மரக்கன்றுகள் நடப்பட்டன.