காக்கி சட்டை – விமர்சனம்

பீகார், மேற்கு வங்காளம் பகுதிகளில் இருந்து சென்னைக்கு வந்து வேலைபார்ப்பவர்களில் கேட்க யாருமற்ற அப்பாவிகள் சிலரை மருத்துவ ரீதியாக கொன்று, அவர்களின் உடல் உறுப்புகளை கோடிகளில் விற்கிறார் தாதாவான விஜய் ராஸ். இதற்கு தவிர்க்க முடியாமல் உடந்தையாக இருக்கிறார் டாக்டர் யோக் ஜேபி.

இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் தனது தந்தை நாகிநீடுவையும் இந்த கேசில் மூக்கை நுழைத்த இன்ஸ்பெக்டர் பிரபுவையும் குண்டுவைத்து கொல்கிறார் விஜய் ராஸ். இந்த விவகாரத்தின் ஆணிவேரை முதலில் கண்டுபிடித்த கான்ஸ்டபிளான சிவகார்த்திகேயன், பிரபுவின் மறைவுக்குப்பின் கேஸில் இன்னும் வேகம் காட்டுகிறார்.

விஜய் ராஸிடம் இருக்கும் ஆதாரங்களை கைப்பற்றி, சட்டத்தின் முன் நிறுத்த முயற்சிக்கிறார். ஆனால் விஜய் ராஸோ அரசியல் முகமூடியை மாட்டிக்கொண்டு இதிலிருந்து தப்பிக்க நினைக்கிறார். அதை தவிடு பொடியாக்க சாதாரண கான்ஸ்டபிளான சிவகார்த்திகேயன் என்ன வியூகம் அமைக்கிறார் என்பது க்ளைமாக்ஸ்.

இதுவரை டிசைன் டிசைனாக போட்ட காமெடி கலர்சட்டையை கழட்டிவைத்துவிட்டு, காக்கி சட்டை போட்டுகொண்டு ஆக்சன் ரூட்டில் கால் வைத்திருக்கிறார் சிவகார்த்திகேயன். ஆக்சனும், காமெடியும் கலந்து சரிவிகிதமாக பண்ணியிருக்கிறார் என்றாலும் ஒரு முழுமையான ஆக்சன் ஹீரோவாக மாற இன்னும் நிறைய ட்ரெய்னிங் எடுக்கவேண்டும் என்றே தோன்றுகிறது. குறிப்பாக ஆக்ரோஷம் காட்டவேண்டிய காட்சிகளில் அவரது கேரக்டர் ஒரு கான்ஸ்டபிள் என்பதாலேயே அடங்கிப்போகும் இடங்கள் கொஞ்சம் மைனஸ் தான். மழை சண்டைக்காட்சி மட்டும் சபாஷ் சொல்லவைக்கிறது.

மெழுகு பொம்மையோ என சந்தேகத்தை வரவழைக்கும் ஸ்ரீதிவ்யா, போலீஸ்காரரான சிவாவை காதலிப்பது, அவருக்கு உதவுவது என படம் முழுவதும் வந்தாலும் மனதில் நிற்கும்படியான காட்சி ஒன்றுகூட இல்லையே என்பது குறைதான். அதிகாரம் இருந்தும் செயல்படமுடியாத யதார்த்தமான போலீஸ் இன்ஸ்பெக்டராக வரும் பிரபு, சூழ்நிலைக்கைதியாக வரும் டாக்டர் யோக் ஜேபியின் நடிப்பு நிறைவு.

வில்லனாக நடித்திருக்கும் விஜய் ராஸ் படத்தின் மிகப்பெரிய பலம்.. ஆனால் தன்னை எதிர்க்கும் தனது தந்தையையே சட்டென கொன்றுவிடும் விஜய் ராஸ், ஜுஜுபி சிவகார்த்திகேயனுடன் கண்ணாமூச்சி ஆடும்போது அந்த கேரக்டரின் கம்பீரம் குறைந்து விடுகிறது.

காமெடி ரேஸில் வசனங்களால் இமான் அண்ணாச்சியும், சேஷ்டைகளால் மயில்சாமியும் முதலிடத்துக்கு முந்த, மனோபாலாவோ ஓடாமல் அப்படியே நின்றிருக்கிறார். கல்பனா, சுஜாதாக்கள் செண்டிமெண்ட் ஏரியாவை கவனித்துக்கொள்கிறார்கள். வில்லன் போல வந்து நல் உருவம் காட்டி, உயிரை விடும் நாகிநீடு நம் மனதை தொடுகிறார். அனிருத்தின் இசையில் ‘காதல் கண்கட்டுதே’ பாடல் சுகமாக இருக்கிறது. மற்றபடி அவரது முந்தைய படங்களைப்போல எழுந்து ஆடத்தூண்டும் ‘டார்லிங் டம்பக்கு’கள் இல்லாதது ஒரு குறைதான்.

சிவகார்த்திகேயன், போலீஸ் கேரக்டர், வெளிமாநில கூலித்தொழிலாளர்கள், மனித உறுப்புகள் விற்பனை என ஒரு அருமையான நாற்காலிக்கு தேவையான நான்கு உறுதியான கால்கள் இருந்தும், அதை பொருத்திய விதத்தில் பலமில்லாமல் ஆடுகிறது இந்த ‘போலீஸ்’ நாற்காலி. சிவகார்த்திகேயனை முழு ஆக்சன் ஹீரோவாக ரசிகர்கள் ஏற்பார்களோ என்கிற தயக்கத்தின் காரணமாகவே படம் முழுவதும் பயத்துடனேயே பயணித்திருக்கிறார் இயக்குனர் துரை செந்தில்குமார்.

ரவுடிகளுக்கு பயந்து, அவர்களின் உத்தரவுகளை நிறைவேற்றும் கைப்பாவையாக செயல்படும் கமிஷனர், அரசியல்வாதி போன்ற கதாபாத்திரங்களுக்கு இனியாவது யாரேனும் முற்றுப்புள்ளி வைக்கக்கூடாதா அய்யா..? எந்த ஊரில் குற்றவாளியை பிடிப்பதற்காக ஒரு ஸ்டேஷனில் உள்ள அத்தனை பேரும் கிளம்பி வெளி மாநிலத்திற்கு செல்கிறார்கள்..? அரசியல்வாதி நடத்தும் கூட்டத்தில் கலாட்டா பண்ணி, வில்லனின் முழங்காலில் மட்டும் சுட்டுவிட்டு, அவர் மூளைச்சாவு அடைவதாக காட்டுவது சரியான காமெடி. எப்போதும் கூட இருக்கும் அவரது பாடிகார்டுகள் ஒருத்தர் கூடவா பக்கத்தில் இல்லாமல் போய்விட்டார்கள்..?

சரி.. ரசிக்கும்படியான விஷயங்களே இல்லையா..? கேசரியில் முந்திரி பருப்பு போல ஆங்காங்கே இருக்கத்தான் செய்கிறது.. இதில் முக்கியமான விஷயம் என்னவென்றால் இந்தப்படத்தின் திரைக்கதை அமைப்பில் எழுத்தாளர் பட்டுக்கோட்டை பிரபாகர் தலைமையில் எட்டு பேர் அடங்கிய குழுவே வேலை பார்த்திருக்கிறதாம்.. அப்படியா..?

மொத்தத்தில் அயன் பண்ணாத கசங்கிய ‘காக்கி சட்டையை’த்தான் சிவகார்த்திகேயனுக்கு மாட்டிவிட்டுள்ளார்கள்.