மும்பை சென்று தோனியை சந்தித்த ‘காக்கா முட்டை’கள்..!

 

தமிழ்நாடு முழுவதும் தனுஷ் தயாரிப்பில் மணிகண்டன் இயக்கத்தில் வெளியாகியுள்ள ‘காக்கா முட்டை’ பற்றிய பேச்சாகத்தான் இருக்கிறது. குறிப்பாக இந்த படத்தில் நடித்த சின்ன காக்கா முட்டை (ரமேஷ்) மற்றும் பெரிய காக்கா முட்டை (விக்னேஷ்) இருவரும் படம் பார்த்தவர்கள் மனதில் பத்திரமாக தங்கிவிட்டார்கள்..

அதுமட்டுமல்ல, படத்தில் பீட்சா வாங்குவதற்காக சிரமப்பட்ட இந்த இரண்டு சிறுவர்களையும், எந்தவித சிரமும் இல்லாமல் மும்பை அழைத்துச்சென்று நம்ம கிரிக்கெட் ‘தல’ தோனியை சந்திக்க வைத்துள்ளது படத்தை வெளியிட்டுள்ள பாக்ஸ் ஸ்டார் நிறுவனம். உடன் படத்தின் இயக்குனர் மணிகண்டனும் சென்று வந்துள்ளார்.

ஏற்கனவே தேசிய விருது வாங்க டில்லி சென்றுவந்த, இந்த இரண்டு காக்கா முட்டைகளும் தங்களுக்கு தேசிய விருது கிடைத்ததை விட, அதை வாங்குவதற்காக டெல்லிக்கு விமானத்தில் போய்வந்த அனுபவத்தைத்தான் பரவசத்துடன் சிலாகித்து பேசிக்கொண்டிருந்தார்கள். படத்தில் பீட்சா வாங்குவதற்கே சிரமப்பட்ட அவர்களைப்போன்ற, சிறுவர்களுக்கு உண்மையிலேயே விமானப்பயணம் என்பது எவ்வளவு குதூகலாமானது என்பதை வார்த்தைகளால் விவரிக்க முடியாது.

மீண்டும் அப்படி ஒரு விமானப்பயணமும், கூடவே தங்களது கிரிக்கெட் நாயகன் தோனியை சந்தித்த மகிழ்ச்சியான தருணமும் இந்த காக்கா முட்டைகளுக்கு  எதிர்பாராமல் கிடைத்துள்ள இன்னொரு தேசிய விருது என்று தாராளமாக சொல்லலாம்.