காக்கா முட்டை – விமர்சனம்

 

சேரிப்பகுதியில் வசிக்கும் இரண்டு சிறுவர்கள்.. தங்கள் பகுதியில் புதிதாக ஆரம்பிக்கப்படும் பீட்சா, கார்னரில் பீட்சா வாங்கி சாப்பிட ஆசைப்படுகிறார்கள். அதற்காக தினமும் ரயில்வே ட்ராக்கில் கரி அள்ளி பத்து இருபதாக சம்பாதித்து சேர்த்து வைத்து பீட்சா வாங்கப்போகிறார்கள்.

இவர்களது அழுக்கு உடையையும் பரட்டைத்தலையையும் பார்த்து வாட்ச்மேன் துரத்த, நல்ல உடை இருந்தால் தான் உள்ளேயே நுழைய முடியும் என முடிவுக்கு வந்த சிறுவர்கள் இருவரும் நல்ல உடை வாங்குவதற்காகவும் மீண்டும் காசு சேர்க்க ஆரம்பிக்கிறார்கள்.

ஒரு வழியாக இலக்கை அடைந்ததும் புதுத்துணியை உடுத்திக்கொண்டு பீட்சா வாங்கப்போனால், இப்போது சிறுவர்கள் இருவரையும் அடித்து தள்ளுகிறார் கடையின் சூப்பர்வைசர். இது ஏதேச்சையாக செல்போன் ஒன்றில் படம்பிடிக்கப்பட்டு, அதன்பின் டிவியிலும் ஒளிபரப்பாகிறது. ஒரேநாளில் சிட்டியில் ஹாட் டாபிக்காகி விடும் அந்த பையன்கள், தங்கள் விருப்பபப்படி பீட்சா சாப்பிட்டார்களா, இல்லையா என்பதுதான் க்ளைமாக்ஸ்.

வசதியற்ற சிறுவர்கள் பீட்சா சாப்பிட ஆசைப்படும் ஒன்லைன் தான். ஆனால் அதற்குள் தான் எத்தனை அரசியல், ஏளனம், மிரட்டல், ஆதிக்கம், ஏற்றத்தாழ்வு என எல்லாவித பிரச்சனைகளையும் மனதில் ஆணியடித்தாற்போல சொல்லியிருக்கிறார் இயக்குனர் மணிகண்டன்.

படத்தின் ஹீரோக்கள் என்றால் பெரிய காக்க முட்டையாக வரும் ரமேஷும், சின்ன காக்கா முட்டையாக வரும் விக்னேசும் தான். மொத்தப்படத்தையும் இவர்கள் இருவர் தான் அசால்ட்டாக சுமந்திருக்கிறார்கள். குறிப்பாக சின்ன காக்க முட்டை பார்வையிலேயே பல கதைகள் சொல்கிறான்.

இந்த நகரமும் மேல் தட்டு வர்க்கத்தினரும் கற்பிக்கும் பாடங்களை புரிந்துகொள்ள இயலாத வயதில், தங்களது ஆசையை நிறைவேற்றுவதற்காக அவர்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியும், அது தட்டிப்போகும்போது ஏற்படும் வலியும் படம் பார்ப்பவர்களையும் தொற்றிக்கொள்கிறது.

சிறுவர்களின் அம்மாவாக நடித்திருக்கும் ஐஸ்வர்யாவுக்கு ஒரு ராயல் சல்யூத்ட்.. டூயட் பாடும் கதாநாயகியாகத்தான் நடிப்பேன் என பல நடிகைகள் அடம்பிடிக்கும் இந்தக்காலத்தில் தனது நடிப்பின் இன்னொரு பரிமாணத்தை காட்டுவதற்கு வாய்ப்புள்ள சேரிப்பெண் வேடத்தில், அதுவும் இரண்டு குழந்தைகளுக்கு அம்மாவாக தைரியமாக நடித்ததுடன், நடிப்பில் தனது கேரக்டருக்கான நியாத்தையும் சரியாக வழங்கியுள்ளார்.

‘சூது கவ்வும்’ ரமேஷ் திலக்கும், அவரது நண்பராக வரும் யோகி பாபுவும் வரும் காட்சிகளில் எல்லாம் கலகலப்பை ஊட்ட தவறவில்லை. குறிப்பாக சிறுவர்கள் தாக்கப்பட்ட வீடியோவை வைத்து, பீட்சா கார்னர் முதலாளியான பாபு ஆண்டனியிடம் ரமேஷ் திலக் பேரம் பேசுவதும், அந்த தொகை என்வென்று தெரியாத யோகி பாபு அதற்கு காட்டும் ரியாக்சனும் செம அப்ளாஸ் அள்ளுகின்றன.

பீட்சா கார்னர் முதலாளியாக பாபு ஆண்டனி கனகச்சிதம். அதைவிட அவரது பள்ளி கால நண்பராக, எப்போதும் கூடவே இருந்துகொண்டு, நேரங்காலம் தெரியாமல் யோசனை சொல்லி, வாங்கிக்கட்டிக்கொள்ளும் கிருஷ்ணமூர்த்தி காமெடியில் கலக்குகிறார். ஒரு கட்டத்தில் டென்சனாகும் பாபு ஆண்டனி, “நீ எது வேணாலும் சொல்லு.. ஆனா தயவுசெஞ்சு சிரிக்காம சொல்லு” என அதட்டும்போது நம்மையறியாமல் குபீர் சிரிப்பு வருகிறது.

காக்கா முட்டை பையன்களின் ஆயாவாக நடித்திருப்பவரிடம் அவ்வளவு எதார்த்தாம். பையன்களுக்கு எப்போதும் சப்போர்ட் பண்ணுவதும், பையன்களின் பீட்சா சாப்பிடும் ஏக்கத்தை போக்குவதற்காக, பீட்சா விளம்பரப்படத்தை பார்த்தபடியே தோசை மாவில் பீட்சா தயார் செய்து கொடுக்கும்போதும், வலியுடன் கூடிய சிரிப்பு தோன்றுகிறது.

ரயில்வே கேங்மேன் பழரசமாக வரும் ஜோ மல்லூரி, சிறுவர்களிடம் அவர்களுக்கு சமமான நட்பு பாராட்டி, அவர்கள் கரி அள்ளவரும்போது உதவி செய்யும் நல்ல மனம் படைத்தவராக நம் மனதில் நிறைகிறார். வாவ்.. தனுஷ் தயாரித்துள்ள படத்தில் சிம்பு..!! இரண்டு காட்சிகளில் சிம்புவாகவே வந்து மனிதர் சட்டென மனதில் உயர்ந்துவிடுகிறார்.

ஜி.வி.பிரகாஷின் இசையும், நா.முத்துக்குமாரின் வரிகளும் எளிய மனிதர்களின் வாழ்க்கையை போகிறபோக்கில், ஆனால் அழுத்தமாக சொல்லிவிட்டு போகின்றன. இந்தப்படத்தின் வெற்றியை, உலக திரைப்பட விழாக்கள் கொண்டாடுவதை பார்ப்பதற்கு இந்தப்படத்திற்கு அழகாக படத்தொகுப்பு செய்த எடிட்டர் கிஷோர் உயிருடன் இல்லையே என்கிற வருத்தமும் எழத்தான் செய்கிறது.

எந்தவித சமரசமும் செய்துகொள்ளாமல் நல்ல ஒரு படைப்பை, கமர்ஷியலாகவும் கொடுத்துள்ள இயக்குனர் மணிகண்டன், புதிய இயக்குனர்கள் சினிமாவிற்குள் நுழைய வேண்டிய புது வழி ஒன்றை திறந்துவிட்டுள்ளார் என்றே சொல்லவேண்டும்.