அடைகாக்கும்போதே அசலை தேத்திய தனுஷ்..!

முழுக்கதையையும் படிப்பதற்காகத்தான் மொத்த ஸ்கிரிப்ட்டையும் வெற்றிமாறனிடம் அனுப்பிவைக்க சொன்னார் தனுஷ். பத்து சீன் படித்ததுமே உடனே வெற்றிமாறனுக்கு போன் போட்டு இந்தப்படத்தில் நானும் சேர்ந்துக்கிறேன் என பச்சைக்கொடி காட்டிவிட்டார். அப்படி இந்த இருவர் தயாரிப்பில் உருவான ‘காக்கா முட்டை’ படம் தான் தேசிய விருது உட்பட பல சர்வதேச விருதுகளை அள்ளி வந்து இவர்களை சந்தோஷத்தில் திக்குமுக்காட வைத்துள்ளது.

இந்தப்படத்தை வெற்றிமாறனின் உதவியாளர் மணிகண்டன் இயக்கியுள்ளார். ‘ரம்மி’, ‘பண்ணையாரும் பத்மினியும்’ புகழ் ஐஸ்வர்யா கதையின் நாயகியாக நடிக்க, மற்றும் புதுமுகங்கள் பலர் நடிக்கும் இந்தப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார். இந்தப்படத்தின் ட்ரெய்லர் நேற்று தனுஷ், வெற்றிமாறனால் வெளியிடப்பட்டது.

இந்த நிகழ்வின்போது பேசிய தனுஷ், “ஒரு உண்மையை சொல்கிறேன்.. காக்கா முட்டை படம் இன்னும் ரிலீஸ் ஆகலை. ஆனால் சாட்டிலைட் ரைட்ஸ் உட்பட சில பிசினஸ்களின் மூலம் நான் போட்ட காசை எடுத்து தந்துவிட்டது. இனி படம் ரிலீஸாகி ஒரு ரூபாய் கிடைத்தால் கூட அது எனக்கு லாபம் தான்” என்றார். ஆக விருதுக்கும் லாபத்துக்கும் சேர்த்து படம் எடுக்கும் வித்தையை தனுஷ் கற்றுக்கொண்டு விட்டார் என்பது தெளிவாக தெரிகிறது.