கேரளாவுக்கும் போகுது ‘காக்கா முட்டை’..!

சுமார் ஒரு கோடி ரூபாய் பட்ஜெட்டில் எடுக்கப்பட்டதாக சொல்லப்படும் ‘காக்கா முட்டை’ கிட்டத்தட்ட தமிழ்நாட்டில் மட்டும் பத்துகோடி ரூபாய் வசூலித்துள்ளதாக சொல்லப்படுகிறது. அதுமட்டுமல்ல, மும்பை, பெங்களூர் ஆகிய இடங்களில் இன்னும் வெற்றி வாகையுடன் ஓடிக்கொண்டு இருக்கிறது.

இது தவிர கர்நாடாகாவில் ‘காக்கா முட்டை’க்கு வரிவிலக்கு அளித்தும் கௌரவப்படுத்தியுள்ளார்கள். இப்போது ‘காக்கா முட்டை’ கேரளாவுக்கும் செல்கிறது. ஆம்.. மலையாள டப்பிங் எதுவுமின்றி தமிழ் மொழியிலேயே வரும் ஜூன்-26ஆம் தேதி கேரளாவில் காக்கா முட்டை ரிலீசாகிறது.

தனுஷ், வெற்றிமாறன் இணைந்து தயாரித்த இந்தப்படத்தை இயக்குனர் மணிகண்டன் நேர்த்தியாக இயக்கியிருந்தார். அத்துடன் காக்கா முட்டைகளாக நடித்த அந்த சிறுவர்களின் யதார்த்தமான நடிப்பு எந்த மொழிக்கும் பொருந்தக்கூடிய ஒன்றுதான். கேரளாவிலும் காக்கா முட்டைக்கு ஜெயம் தான்.