கைதி – விமர்சனம்

மாநகரம் புகழ் லோகேஷ் கனகராஜ் டைரக்சனில் கார்த்தி நடிப்பில் வெளியாகியுள்ள படம் கைதி.

கோடிக்கணக்கான மதிப்புள்ள சுமார் 1000 கிலோ போதைப்பொருளை தனது குழுவினருடன் செயல்பட்டு சாமர்த்தியமாக கைப்பற்றுகிறார் போலீஸ் அதிகாரி நரேன். அதை எதிரிகளின் கைகளுக்கு சிக்காமல் கமிஷனர் அலுவலகத்தில் உள்ள ரகசிய அறையில் பதுக்கி வைக்கிறார். இந்த சாதனையை கொண்டாட பார்ட்டி கொடுக்கும்போது, உயரதிகாரி ஹரீஷ் பெராடியின் உத்தரவின் பேரில் போலீசில் இருக்கும் கருப்பு ஆடு ஒருவர் போலீஸ் அதிகாரிகளுக்கு மதுவில் மயக்க மருந்து கலந்து உயிருக்கு ஆபத்து ஏற்படுத்துகிறார்.

அனைவரையும் காப்பாற்றும் முயற்சியில் இறங்கும் நரேன் அப்போதுதான் ஜெயிலிலிருந்து வெளியாகி தனது மகளை பார்க்கச் செல்லும் கைதியான கார்த்தியின் உதவியை நாடுகிறார்.. ஆரம்பத்தில் தயங்கினாலும் மகளின் எதிர்கால வாழ்க்கையை மனதில் கொண்டு, உயிருக்கு போராடும் போலீஸ் அதிகாரிகளை லாரியில் ஏற்றிக்கொண்டு மருத்துவமனைக்கு விரைகிறார்.. அவர் மருத்துவமனை செல்லும் பாதையில் தொடர்ந்து இடைவிடாமல் எதிரிகள் தடைகளை ஏற்படுத்துகிறார்கள்..

இது ஒரு பக்கம் இருக்க இன்னொரு பக்கம் கமிஷனர் அலுவலகத்தில் இருக்கும் போலீஸ்காரர்கள் அனைவரும் உயிருக்கு பயந்து வெளியேறிவிடுகிறார்கள்.. ஆனால் அன்றுதான் புதிதாக பொறுப்பேற்க வந்திருக்கும் கான்ஸ்டபிள் ஜார்ஜ் என்பவர், அங்கே சந்தேகத்தில் பிடித்து வைக்கப்பட்டிருக்கும் ஐந்து இளைஞர்களின் துணையுடன் எதிரிகள் போதைப் பொருட்களை எடுத்துச் செல்ல விடாமல் தடுக்கும் முயற்சியில் ஈடுபடுகிறார்..

இந்த இரு தரப்பினரையும் காப்பாற்ற வேண்டிய பொறுப்பு ஒரேசமயத்தில் கார்த்தியின் தலையில் விழுகிறது. கார்த்தியால் இவற்றை சமாளித்து அனைவரையும் காப்பாற்ற முடிந்ததா..? அவரால் தனது குழந்தையை பார்க்க முடிந்ததா என்பது கிளைமாக்ஸ்.

கிட்டத்தட்ட படம் ஆரம்பித்து கால் மணி நேரம் ஆன பின்பு ஹீரோ என்ட்ரி, ஹீரோயின், டூயட், பில்டப் வசனங்கள் பேசாதது என இப்படி ஒரு கதையில் நடிக்க ஒப்புக்கொண்ட கார்த்தியை மனதார பாராட்டிய ஆகவேண்டும். அப்படி ஒரு புதிய முடிவை அவர் எடுத்தது தான் இந்த படத்தின் வெற்றிக்கு மிகப் பெரிய தூணாக அமைந்துவிட்டது. பத்து வருடம் கழித்து சிறையிலிருந்து வெளிவரும் கைதியின் மனோபாவத்தையும் உடல் மொழியையும் அழகாக பிரதிபலித்திருக்கிறார் கார்த்தி. ஆக்சன் காட்சிகளில் பின்னி பெடல் எடுக்கிறார் மனிதர். சேசிங் காட்சிகளில் அவரது வேகம் பிரமிப்பூட்டுகிறது குறிப்பாக கிளைமாக்ஸ் சீன் மொத்த எதிரிகளையும் அவர் எதிர்கொள்ளும் காட்சி நம்மை இருக்கை நுனியில் அமர வைக்கும்.

கார்த்தியுடன் படம் முழுவதும் பயணிக்கும் கதாபாத்திரத்தில் போலீஸ் அதிகாரியான நரேன், கேட்டரிங் சர்வீஸ் நடத்தும் விஜய் டிவி தீனா இருவருமே தங்களது சிறப்பான பங்களிப்பை தந்திருக்கிறார்கள். ஒரு கை அடிபட்டு செயல்பட முடியாத நிலையில் காவல்துறை அதிகாரியின் உயிரை காப்பாற்ற நினைப்பது, போதைப்பொருள்கள் எதிரியின் கைகளில் சிக்கி விடாமல் தடுப்பதற்கு நடத்தும் போராட்டம் என ஒரு நேர்மையான அதிகாரி எப்படி இருக்க வேண்டும் என்பதனை நினைவுபடுத்துகிறார் நரேன்.

சூழ்நிலையால் இந்த சிக்கலில் சிக்கிக்கொள்ளும் தீனா ஆரம்பத்தில் கலகலப்பூட்டினாலும் போகப்போக குணச்சித்திர நடிப்புக்கு தாவுகிறார். இவர்களை தவிர நம்மை ரொம்பவே கவர்பவர் போலீஸ் கான்ஸ்டபிளாக நடித்துள்ள ஜார்ஜ். உயிருக்கு பயந்து மற்ற காவலர்கள் அனைவரும் ஓடிவிட போலீஸின் உத்தரவை தலைமேல் ஏற்று ஒற்றை நபராக, உடன் நான்கைந்து இளைஞர்களை வைத்துக்கொண்டு கடைசிவரை போராடும் அவரது கதாபாத்திரம் ரசிகர்கள் மனதை விட்டு நீங்க நிறைய நாள் ஆகும். சூழ்நிலையால் போலீஸில் சிக்கி அதேசமயம் போலீசுக்கு பக்கபலமாக ரவுடிகளுக்கு எதிராக மாறும் இளைஞர் கூட்டணி சபாஷ் போட வைக்கின்றது.

காவல்துறையில் இருந்துகொண்டே போதை போதை கைமாற்றி லாபம் பார்க்க நினைக்கும் ஹரீஷ் பெராடியின் வில்லத்தனமும் அதன் முடிவும் நாம் எதிர்பார்த்த ஒன்றுதான்.

மொத்த படமும் நான்கு மணி நேர அவகாசத்தில் இரவு நேரத்திலேயே நடப்பதால் ஒளிப்பதிவாளர் சத்யன் சூரியனின் மிகப்பெரிய பங்களிப்பு இந்த படத்தின் வெற்றிக்கு துணை நிற்கிறது.. ஒரு திகிலான நள்ளிரவு பயணத்தில் நாமும் மாட்டிக் கொண்டது போன்ற ஒரு உணர்வை அவரது ஒளிப்பதிவு ஏற்படுத்துகிறது. சாம் சி.எஸ்ஸின் பின்னணி இசையை பற்றி சொல்லவும் வேண்டுமோ..? பாடல்கள் இல்லை என்கிற குறையை தெரியவில்லை.. அந்த அளவுக்கு மிரட்டி எடுத்து இருக்கிறார் மனிதர்.

மாநகரம் படம் பார்த்தபோதே லோகேஷ் கனகராஜ் தமிழ் சினிமாவின் ஒரு நம்பிக்கை நட்சத்திரமாக தென்பட்டார். தனது இரண்டாவது படத்தில் நமது நம்பிக்கை சரிதான் என்பதை உறுதிப்படுத்தியுள்ளார். கதைக்கும் கதாபாத்திரங்களுக்கும் மட்டுமே முக்கியத்துவம் கொடுத்து இந்த கைதி படத்தை இரண்டரை மணி நேரம் விறுவிறுப்பாக இயக்கியுள்ளார். தமிழ் சினிமாவுக்கு புது இரத்தம் பாய்ச்சும் விதமாக சினிமாவிற்குள் புதிதாக நுழைபவர்கள் லோகேஷ் கனகராஜ் போன்றவர்களை பார்த்து ரசிகர்களை முழுநேரம் என்டர்டெய்ன் செய்யும் படத்தை எப்படி கொடுக்க வேண்டும் என்பதை கற்றுக்கொள்ள வேண்டும்.

மொத்தத்தில் இந்த கைதி பாஸ்மார்க் மட்டுமல்ல, ரசிகர்காளின் மனதில் ஃபர்ஸ்ட் மார்க்கே வாங்குகிறான்..