கடுகு – விமர்சனம்

kadugu movie review

கோலி சோடாவில் ஆச்சர்யப்படுத்தி, ‘பத்து எண்றதுக்குள்ள’ நம்மை அதிர்ச்ச்சியாக்கிய விஜய் மில்டன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் இந்த கடுகு ரசிகனுக்கு என்ன விதமான தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்பதையும்.. படத்தை சூர்யா வாங்கி வெளியிட்டிருக்கிறார் என்பதால் எழுந்துள்ள அந்த எதிர்பார்ப்பை இந்தப்படம் நிறைவேற்றியுள்ளதா என்பதையும் இதோ பார்க்கலாம்.

கடுகு என்கிற டைட்டிலும் அதில் கதாநாயகனாக ராஜகுமாரன் நடித்திருப்பதுமே படத்தின் கதை இப்படித்தான் பயணிக்கும் என்பதை உணர்த்தி விடுகின்றன.. ஆம். கடுகு சிறுத்தாலும் காரம் குறையாது என்பதைத்தான் இந்தப்படத்தின் மூலம் சொல்ல வந்திருக்கிறார் இயக்குனர் விஜய் மில்டன்..

போலீஸ் அதிகாரியான ஏ.வெங்கடேஷுக்கு உதவி ஆளாக இருப்பவர் ராஜகுமாரன்.. இவரது அடிப்படை தொழில் புலிவேஷம் கட்டி ஆடுவது. இந்த நேரத்தில் வெங்கடேஷுக்கு வேறு ஊருக்கு மாற்றல் ஆக, அந்த ஊருக்கும் அவருடனேயே சென்று தங்குகிறார் ராஜகுமாரன். அந்த ஊரில் பள்ளி ஆசிரியையாக இருக்கும் ராதிகா பிரசித்தா மற்றும் போலீஸ்காரர் பரத் சீனி ஆகியோருடன் நட்பு ஏற்படுகிறது..

அதே ஊரில் முக்கியஸ்தராக இருக்கும், அரசியலில் உயர்ந்த நிலைக்கு வர ஆசைப்படும் பரத் தனது கட்சி மந்திரி ஒருவரை தனது ஊருக்கு அழைத்து மரியாதை செய்ய நினைக்கிறார்.. வந்த இடத்தில் மந்திரியின் காமக்கண்கள் ஒரு பள்ளிச்சிறுமியின் மீது பாய, அந்த புள்ளிமான் அந்த வேட்டை நாய்க்கு இரையாகி, தற்கொலை செய்து உயிரையும் விடுகிறது.

தனது அரசியல் வளர்ச்சிக்காக பரத் இதை கண்டும் காணாமல் இருக்க, இந்த கேஸில் மூக்கை நுழைத்த காரணத்தால் இன்னொரு ஊருக்கு தூக்கியடிக்கப்படுகிறார் வெங்கடேஷ்.. ஆனால் அப்பாவியான ராஜகுமாரன் ஆசிரியையான ராதிகா பிரசித்தா மற்றும் பரத்சீனி இருவரின் உதவியுடன் சிறுமியின் சாவுக்கு நீதி தேட முயற்சிக்கிறார்.. புலிவேஷம் மட்டுமே போடும் அவரால் தப்பு செய்தவர்களுக்கு எதிராக புலிப்பாய்ச்சல் நிகழ்த்த முடிந்ததா என்பது தான் மீதிப்படம்.

நாயகனாக வரும் ராஜகுமாரன் புலிப்பாண்டியாக மாறுவதற்கு ரொம்பவே மெனக்கெட்டு இருப்பது தெரிகிறது.. ஒரு சில காட்சிகளிலும் புலி வேஷம் கட்டி ஆடும்போதும் கதைட்டல் வாங்கவும் செய்கிறார்.. ஆனால் வசன உச்சரிப்பிலும் சில இடங்களில் செயற்கையான நடிப்பிலும் தடுமாறவும் செய்திருக்கிறார்.

வில்லன் என அறுதியிட்டு சொல்லமுடியாத அதேசமயம் நெகடிவான கேரக்டரில் பரத் நடித்துள்ளார். அவரது நடிப்பு மற்றும் இந்த கேரக்டரை ஏற்ற துணிச்சலுக்கு பாராட்டுக்கள்.. நாயகியாக ராதிகா பிரசித்தா அளந்தெடுத்த நடிப்பு.. கான்ஸ்டபிளாக வரும் பரத் சீனி அவ்வப்போது கலகலப்பூட்டி தனது புதுவரவை ரசிகர்களின் மனதில் நிலைநிறுத்தியுள்ளார்.

ஏ.வெங்கடேஷ் உட்பட மற்ற கதாபாத்திர தேர்வும் குறைசொல்ல முடியாதவை.. விஜய் மில்டனே ஒளிப்பதிவு என்பதால் காட்சிகளை உறுத்தல் இல்லாமல் செதுகியுள்ளார். அருணகிரியின் இசையும் காட்சிகளுக்கு கனம் சேர்க்கிறது.. கெட்டவங்களை விட மோசமானவங்க தப்பு நடக்கும்போது தட்டிக்கேட்காத நல்லவங்கதான் என்கிற அழகான ஒன்லைனை வைத்து சமூகப்பொறுப்புடன் இந்தப்படத்தை இயக்கியதற்காகவே விஜய் மில்டனை பாராட்டலாம்.