கதாநாயகன் – விமர்சனம்

கருத்தெல்லாம் சொல்லி உங்களை கலங்கடிக்க மாட்டோம்.. சும்மா கலகலன்னு சிரிக்க வைச்சுத்தான் வெளியே அனுப்புவோம் என கங்கணம் கட்டிக்கொண்டு வெளியாகியுள்ள படம் தான் ‘கதாநாயகன்’..

நாயகன் விஷ்ணு வடசென்னை பகுதியில் ரெவின்யூ இன்ஸ்பெக்டர்.. சின்னவயதில் பிரிந்துபோன தனது நண்பன் சூரியை அந்த ஆபீஸில் பியூனாக சந்திக்கிறார் விஷ்ணு. தனது பக்கத்து வீட்டில் உள்ள கேத்ரின் தெரசா மீது விஷ்ணு காதலாக, அதற்கு சூரி, சில மொக்கை ஐடியாக்களை கொடுக்க, அதற்கெல்லாம் வேலை வைக்காமல் வான்டட் ஆக வந்து லவ் சொல்கிறார் கேத்ரின் தெரசா.

விஷ்ணுவின் அம்மா சரண்யா மகனுக்கு பெண் கேட்டுப்போக, அநியாயங்களை கண்டால் தட்டிக்கேட்காமல் ஓடி ஒளியும் விஷ்ணுவின் போக்கு பிடிக்காத கேத்ரினின் அப்பா நட்ராஜ் தனது மகளை தர மறுக்கிறார். இந்தநிலையில் போதையில் பாரில் இருந்த ரவுடி அருள்தாஸை அடித்து உதைக்கிறார் விஷ்ணு..

அந்த கைகலப்பில் ஏற்பட்ட சிறிய காயத்திற்காக மருத்துவமனையில் சேரும் விஷ்ணுவுக்கு, விரைவிலேயே சாகக்கூடிய அளவுக்கு நோய் இருப்பதாக மருத்துவமனை ஒரு குண்டை தூக்கி போடுகிறது. இந்த நேரத்தில் விஷ்ணுவின் அக்காவுக்கு திருமணம் நிச்சயமாக, கல்யாணத்திற்கு தேவைப்படும் தொகைக்காக தனது கிட்னியை ஒரு புரோக்கர் மூலமாக அரபு ஷேக்கான ஆனந்தராஜுக்கு விற்கிறார் விஷ்ணு..

கிட்னியை கொடுப்பதற்கு முன்பே முழுப்பணமும் கைக்கு வந்துவிட்ட நிலையில் திடீரென மருத்துவமனையில் இருந்து, அந்த வியாதி உங்களுக்கு இல்லை.. ஆள் மாறிவிட்டது.. ஸாரி என சொல்லி விஷ்ணுவுக்கு தகவல் வருகிறது. இதனால் கிட்னி தரும் எண்ணத்தை மாற்றிக்கொள்கிறார் விஷ்ணு. கோபமாகும் ஷேக், விஷ்ணுவை தூக்கிவர ஆட்களை அனுப்புகிறார். ஆனால் அவர்களின் கையில் சூரி சிக்குகிறார்.. இன்னொரு பக்கம் திருமண தினத்தன்று ரவுடி அருள்தாஸ் அன் கோ மண்டபத்தில் வந்து விஷ்ணுவிடம் வம்பிழுக்கின்றனர்.

ஆனந்த்ராஜிடம் இருந்தும், அருள்தாஸிடம் இருந்தும் விஷ்ணு தப்பினாரா..? ஆனந்த்ராஜிடம் சிக்கிய சூரியின் கதி என்ன..? விஷ்ணு-கேத்ரின் தெரசா திருமணம் என்ன ஆனது என்பதற்கெல்லாம் க்ளைமாக்ஸ் விடைசொல்கிறது.

முதலில் தனக்கு பொருத்தாமான கேரக்டர்களையும் கதைகளையும் மட்டுமே தேர்ந்தெடுத்து நடிக்கும் விஷ்ணுவுக்கு ஒரு சபாஷ் சொல்லிவிடலாம். வளர்ந்து ஒரு நிலையான இடத்திற்கு படிப்படியாக முன்னேறும் விதமாக சரியான ரூட்டில் பயணிக்கிறார். அதிலும் காமெடி அவருக்கு இயல்பாகவே வருகிறது.. இந்தப்படத்திலும் அது ஒர்க் அவுட் ஆகியிருக்கிறது. அதிலும் ஷேக் ஆனந்தராஜ், கிட்னி கிடைத்த பரவசத்தில் ‘யாருடா நீ.. இவ்வளவு நாளா எங்க இருந்த..? என கேட்கும்போது, எந்த உணர்ச்சியையும் காட்டாமல் ‘எண்ணூர்ல’ என விஷ்ணு சொல்லும் பதிலில் தியேட்டர் அதிர்கிறது.

இன்னொரு ஹீரோ ரேஞ்சுக்கு சூரி.. அதிலும் விஷ்ணுவுடன் இவர் கூட்டணி சேர்ந்தால் கலாட்டாவுக்கு நூறு சதவீதம் கியாரண்டி என்பதை மீண்டும் நிரூபித்துள்ளார் சூரி.. போன படமாகட்டும், இந்தப்படமாகட்டும் பந்தா காட்டும் சூரியும் அவரை அவ்வப்போது சிக்கலில் மாட்டிவிடும் விஷ்ணுவும், இதே பாலிசியை தொடர்ந்து கடைபிடித்தால் காமெடியில் சத்யராஜ்-கவுண்டமணி போல இரட்டையர்களாகவும் கலக்கலாம்.

கெஸ்ட் ரோல் தான் என்றாலும், அந்த கொஞ்ச நேரத்திலும் கூட தனது தேர்வை தனது ‘செம.. செம.. செமயான’ நடிப்பால் நியாயப்படுத்துகிறார் விஜய்சேதுபதி.. காமெடி கதையில் நாயகிக்கு என்ன வேலையோ அதை கொஞ்சம் கூட உறுத்தாமல் செய்துவிட்டு போகிறார் கேத்ரின் தெரசா.

அரை மணி நேரம் வந்தாலும் அந்த அரபு ஷேக் கேரக்டரில் ‘மெர்சல்’ காட்டுகிறார் ஆனந்தராஜ். தான் வரும் காட்சிகளில் எல்லாம் குறைந்தபட்சம் ரசிகர்களை சிரிக்கவைக்காமல் அவர் விடுவதில்லை.. இதிலும் அப்படியே.. கிட்னி கிடைக்கவில்லையே என்கிற கோபத்தில் டான்ஸ் ஆடும் பெண் மீது சவுக்கால் ஒரு போடு போடுகிறார் பாருங்கள்.. செம லந்து..

மகனின் காதலுக்கு வக்காலத்து வாங்கும் டிபிகல் அம்மாவாக சரண்யா. க்ளைமாக்ஸில் காதலுக்கு மரியாதை பாணியில் பெண் கேட்பது ஓவர் குசும்பு.. மீடியமான வில்லனாக அருள்தாஸ் டெரர் அன்ட் காமெடி என கலந்துகட்டுகிறார்.. க்ளைமாக்ஸிற்கு பத்து நிமிடத்திற்கு முன் என்ட்ரி கொடுக்கும் நான் கடவுள் ராஜேந்திரன் தனது காந்த குரலால் நடத்தும் இன்னிசை கச்சேரி இன்னொரு காமெடி ஜுகல்பந்தி.

ஷான் ரோல்டனின் இசையில் இரண்டு பாடல்கள் அடடே சொல்லவைக்கிறது. லட்சுமனின் ஒளிப்பதிவு காமெடி காட்சிகளில் கூட விதவிதமாக வித்தியாசமான டோன் காட்டுகிறது. அறிமுக இயக்குனர் முருகானந்தம் தானும் ஒரு காமெடி நடிகர் என்பதாலோ என்னவோ, கதையில் காமெடியின் கனம் குறைந்துவிடக்கூடாது என மெனக்கெட்டிருப்பது தெரிகிறது.. ஆனந்தராஜ் போர்ஷனில் கொஞ்சம் மரகதநாணயம் வாடை அடிக்கவே செய்கிறது.. ஆனாலும் என்ட் டைட்டில் போடும் வரை சிரிப்புக்கு உத்தரவாதம் தந்து நம்மை வெளியே அனுப்பி வைக்கிறார்கள்..

அதனால் போடுங்கள் டிக்கெட்டை.. கதாநாயகன் படத்திற்கு.. மொத்த குடும்பத்துக்கும்…