காதல் மட்டும் வேணா – விமர்சனம்

சினிமாவில் இயக்குனராகும் ஆசையில் படித்துவிட்டு வேலைக்கு போகாமல் சுற்றுகிறார் சாம் கான். இந்த நிலையில் எலிசபெத்துடன் அவருக்கு காதல் ஏற்படுகிறது ஒரு நாள் இருவரும் இரவு நேரத்தில் ஹாயாக வாக்கிங் சென்று கொண்டிருக்கும்போது திடீரென மர்மமான முறையில் மாயமாகிறார் எலிசபெத். போலீஸ் ஸ்டேஷனுக்கு சென்று புகார் அளிக்கிறார் சாம் கான்.. அவர் காட்டும் எலிசபெத்தின் புகைப்படத்தை பார்த்த போலீஸ் அதிகாரிகளுக்கு மிகப்பெரிய அதிர்ச்சி ஏற்படுகிறது.

காரணம் சில வருடங்களுக்கு முன்பு நடந்த பேருந்தில் நடந்த இளம்பெண் பலாத்கார கொலையில் இறந்துபோன பெண்ணின் புகைப்படத்தை காட்டித்தான் இவரை காணவில்லை என புகார் அளிக்கிறார் சாம் கான். அப்படியானால் இவரை காதலித்த பெண் யார்..? அவர் எப்படி மாயமானார்..? ஏற்கனவே இறந்த பெண் என்றால் இவரை காதலிப்பது எப்படி..? இதன்பின் கதை எப்படி நகர்கிறது பல புதிர்களுக்கு விடை சொல்கிறது மீதிக்கதை.

இன்றைய ஆர்வக்கோளாறு இளைஞர்கள் பலர தாங்கள் வித்தியாசமாக ஒரு கதை உருவாக்கி வைத்து இருப்பதாக நினைத்துக்கொண்டு யாருடைய ஆலோசனையும் இன்றி தன்னிச்சையாக படம் இயக்க கிளம்பி விடுகிறார்கள். அந்த ரகத்தைச் சேர்ந்த படம்தான் இந்த காதல் மட்டும் வேணா’.

முதல் பாதி முழுக்க ஓரளவுக்கு த்ரில்லாகவே படத்தை நகர்த்தி சென்றிருக்கும் சாம் கான், இடைவேளைக்கு பின்பு அந்த திரில்லை தக்க வைக்க முயற்சி செய்யாமல் டேக் டைவர்சன் எடுத்து வேறு ரூட்டில் கவனத்தை சிதற விட்டுள்ளார். அது எதனால் என்று அவருக்கே வெளிச்சம் கதையின் நாயகனும் அவரே என்பதால் நடிப்பிலும் கவனம் செலுத்த முயற்சித்திருக்கிறார் கண்களை மூடிக்கொண்டு அவர் பேசுவதை கேட்கும்போது சிம்பு பேசுவது போலவே இருக்கிறது.

இயக்குனர் மாரிமுத்து, ஈ.ராம்தாஸ் ஆகியோரை பார்க்கும்போதுதான் தமிழ் படம் பார்த்த உணர்வே நமக்கு வருகிறது இது போன்றவர்கள் இன்னும் திரைக்கதையில் கொஞ்சம் கூடுதலாக மெனக்கெட்டிருந்தால் இந்த படத்தை வெகு சுவாரசியமாக ரசிகர்களுக்கு கொடுத்திருக்கலாம்.