காதல் கசக்குதய்யா – விமர்சனம்

சின்ன பட்ஜெட் படங்களில் சற்றே கவனம் ஈர்க்கும் விதமாக வெளியாகியுள்ள படம் ‘காதல் கசக்குதய்யா’ இந்தப்படம் ரசிகர்களுக்கு உற்சாகம் தரக்கூடிய படம் என்பதற்கு முக்கியமாக சில காரணங்களை சொல்லலாம்.

நீண்டநாட்கள் கழித்து நாயகியின் பார்வையில் காதலையும் கதையையும் நகர்த்தியதும், காதலை தக்கவைக்க நாயகி போராடுவதும் என்கிற விஷயம் நம்மை படத்திற்குள் சுலபமாக ஈர்க்கிறது. அடுத்ததாக நாயகன், நாயகியின் வயது பிரச்சனையும், உயரப்பிரச்சனையும் படத்தின் முக்கிய அம்சங்களாக பேசப்பட்டு, அதைவைத்து காட்சிகள் நகைச்சுவையாகவும் ரொமாண்டிக்காகவும் நகர்வது படத்துடன் நம்மை லயிக்க வைக்கிறது.

அடுத்து மிக முக்கியமான காரணம் நாயகன் துருவாவும் நாயகி வெண்பாவும்.. கொஞ்சம் கூட நம்மை உறுத்தாத அற்புதமான அழகான புதுமுகங்கள்.. அதனால் தான் திரைக்கதை ஆங்காங்கே நொண்டியடித்தாலும் கூட முழுப்படத்தையும் அலுப்பில்லாமல் பார்க்க முடிகிறது என்பது உண்மை..

கை நிறைய சம்பளத்துடன் வேலைபார்க்கும் இளைஞன் துருவா மீது பிளஸ் டூ மாணவியான வெண்பாவுக்கு காதலோ காதலோ.. ஒரு கட்டத்தில் துருவாவும் அவரது காதலை ஒப்புக்கொண்டாலும் போகப்போக ஒருபக்கம் வயது வித்தியாசம், இன்னொரு பக்கம் உயர வித்தியாசம் என இரண்டு சங்கடங்கள் துருவாவை மனரீதியாக டார்ச்சர் செய்கின்றன..

இந்த நேரத்தில் வெண்பாவின் அப்பா சார்லிக்கு இந்த காதல் விவகாரம் தெரிந்து பிரச்சனையாகிவிட, இதுபோதாதென்று கோமாவில் இருக்கும் அம்மா கல்பனாவின் நிலையும் சேர்ந்து, துருவாவை இந்த காதலை விட்டு ஒதுங்க வைக்கின்றன.. ஆனால் தனது காதல் வெறும் இனக்கவர்ச்சியால் மட்டுமே வந்தது அல்ல என்பதை நிரூபிக்க போராடுகிறார் வெண்பா.. முடிவில் காதலர்கள் ஒன்று சேர்ந்தார்களா என்பது க்ளைமாக்ஸ்..

சில நேரங்களில் பளீர் புன்னகையும், பல நேரங்கில் உயரம் குறைவான பெண்ணை லவ் பண்ணியது தப்போ என்கிற டென்சனுமாக படம் முழுதும் நம்மை கவர்கிறார் நாயகன் துருவா.. பெரிய இயக்குனர்களின் கையில் இவர் சிக்கினால் மிகப்பெரிய ஆளாக வருவதற்கான வாய்ப்பு இவருக்கு நிறையவே இருக்கிறது..

பாதிப்படத்திற்கு ஸ்கூல் யூனிபார்மிலேயே வரும் வெண்பா இந்த கதையின் நாயகியாக, கதைக்குள் இருக்கும் பிரச்சனையை படம் முழுதும் தனது அற்புதமான நடிப்பால் தூக்கி சுமந்திருக்கிறார். பள்ளிப்பருவத்திலேயே காதலிக்க துவங்குவது தவறு என்றாலும், இவர் பக்குவத்துடன் காதலை அணுகும் விதம் அழகோ அழகு..

கல்பனாவின் போர்ஷன் இந்தக்கதைக்கு சற்றும் சம்பந்தமில்லாமல் திணிக்கப்பட்டது போன்றே தெரிகிறது. இருந்தாலும் மறைந்த நடிகை கல்பனாவை மீண்டும் திரையில் பார்க்கும்போது ஒரு நல்ல நடிகை நம்மிடம் இல்லையே என நெகிழ்ச்சி ஏற்படவே செய்கிறது. நடுத்தர வர்க்க தந்தையாக சார்லியின் நடிப்பு சிறப்பு..

நண்பர்களாக வரும் லிங்கா மற்றும் ஜெயகணேஷ் இருவரும் கூட இருந்தே காதலுக்கு நல்லது கெட்டது என இரண்டையும் செய்யும் கேரக்டர்களை நன்றாகவே பிரதிபலித்திருக்கிறார்கள். கதை உருவாக்கத்திலும், திரைக்கதை அமைப்பிலும் ஆங்காங்கே குறைகள் பல தென்பட்டாலும் இளைஞர்களை கவர்ந்திழுக்க கூடிய ஒரு அ]ழகான ரொமாண்டிக் படமாக இதை கொடுத்துள்ளார் இயக்குனர் துவாரக் ராஜா.