கபிலவஸ்து – விமர்சனம்

Kabilavasthu movie review

அன்றாட வாழ்வில் நடைபாதையில் வசிக்கும் எத்தனையோ பேரை கடந்து சென்றிருப்போம். ஆனால் அவர்களின் வாழ்க்கை எப்படி இருக்கும் என்பதைப் பற்றி நினைத்து பார்க்கக் கூட நமக்கு நேரம் இருக்காது. அப்படிப்பட்ட பிளாட்பார வாசிகளின் வாழ்க்கை இந்த கபிலவஸ்து.

பிரைவேட் டாய்லெட் ஒன்றுக்கு பொறுப்பாளியாக இருக்கிறார் முருகன். அதை ஒட்டியுள்ள பிளாட்பாரத்தில் வசிக்கும் குழந்தை வேளாங்கண்ணி, இளம்பெண் டயானா, அவரது தந்தை கோவை செந்தில், குழந்தையின் பாட்டி கோடீஸ்வரி என இவர்கள்தான் முருகனுக்கு உறவினர்கள். குழந்தை வேளாங்கண்ணிக்கு எப்படியாவது தங்களுக்கென தனியாக வாடகைக்கு ஒரு வீடு பார்த்துக்கொண்டு செட்டில் ஆக வேண்டும் என்பது லட்சியம்.

சிறுகச்சிறுக சேர்த்த காசை வைத்துக்கொண்டு வீடு பார்க்க போகுமிடமெல்லாம், இவர்கள் பிளாட்பார வாசிகள் என கூறி விரட்டுகின்றனர். இதில் முருகன் உட்பட இவர்களில் சிலர் அடிக்கடி போலீசாரின் பொய் வழக்குகளில் சிக்கும் அவலமும் நடக்கிறது. இந்த நிலையில் முருகனுக்கு வேண்டிய ஒருவரால் இவர்கள் அனைவருமே குடியேறி வசிப்பதற்கு வீடு ஒன்று தேடி வருகிறது ஆனால்.. இடையில் விதி உள்ளே நுழைகிறது.. அப்புறம் என்ன ஆனது என்பதற்கு மீதி கதை விடை சொல்கிறது..

பிளாட்பார மனிதர்களின் கதை என்பதால் நாயகன் நேசம் முரளி உட்பட படத்தில் நடித்த அனைவரும் கதைக்குப் பொருத்தமான தேர்வுதான். அதிலும் குழந்தை வேளாங்கண்ணி ஆக நடித்த பேபி ஐஸ்வர்யாவின் நடிப்பும் வசனங்களை பேசும் விதமும் கண் கலங்க வைக்கிறது. ஆனால் அதே சமயம் நாயகன் நேசம் முரளி உட்பட மற்றவர்களின் நடிப்பில் செயற்கைத்தனமே மேலோங்கியிருப்பது இந்த கதையில் சொல்ல வந்த நோக்கத்தை அதன் வீரியத்தை குறைக்கவே செய்கிறது.. ஆனால் இடைவேளைக்குப்பின் கதையோட்டத்தில் அந்தக்குறை தெரியவில்லை.

பிளாட்பார மனிதர்களுக்கு என்னென்ன விதமாக எல்லாம் தொந்தரவுகள் கொடுக்கப்படுகின்றன என்பதை காட்சிப்படுத்தியது அருமை. என்னதான் டாய்லெட்டை கவனித்துக் கொள்ளும் நபர் என்றாலும் காதலியுடன் பாத்ரூமில் சரசமாடுவது என்பதையெல்லாம் ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை. நாயகியாக வரும் நந்தினி சில காட்சிகளில் தனது நடிப்பால் பளிச்சிடுகிறார்.

குழந்தை வேளாங்கண்ணி தன் வயதிற்கு ஒரு வாடகை வீடு பார்க்க அவ்வளவு பாடு படும்போது, சம்பாதிக்கும் முருகன், டயானா மற்றும் அருகில் உள்ளவர்கள் எல்லாம் இணைந்து ஒன்றாக சேர்ந்து வாடகைக்கு வீடு பிடிப்பது என்ன அவ்வளவு கஷ்டமான காரியமா..? அனைவரும் ஒன்றாக கைகோர்த்து இருந்தால் இது எளிதான காரியமே.. அதுமட்டுமல்ல இன்றைய பிளாட்பார வாசிகள் யோசிக்க மறுக்கும் விஷயமும் இந்த ஒற்றுமையான கூட்டுக்குடும்ப வாழ்க்கையை தான்.. அதனால் தான் அவர்கள் இன்னும் பிளாட்பாரவாசிகள் ஆகவே இருக்கிறார்கள் என்பதை இந்தக் கதை நமக்கு மறைமுகமாக இல்லையில்லை, நேரடியாகவே உணர்த்தத் தவறவில்லை