காவல் – விமர்சனம்

 

சென்னைக்குள் கூலிப்படையினரின் அட்டகாசம் அதிகரிக்க, அவர்களை என்கவுண்டர் மூலம் ஒழிப்பதற்காக சீக்ரெட் ஆபரேஷனில் களம் இறங்குகிறார் போலீஸ் அதிகாரி சமுத்திரகனி.. ஊருக்குள் போலீஸ்காரர் மகன்கள் என வெட்டியாக சுற்றும் விமல் & கோவினர் இருக்கும் சீரியஸ்நெஸ் தெரியாமல் கூலிப்படை தலைவன் தேவாவுடன் நட்பாகின்றனர்.

என்கவுண்டர் ஆபரேஷனை செயல்படுத்தும் தருணத்தில் விமல் கொடுக்கும் செய்தியால் தேவா தப்பிக்க, எதிரிகளின் கையில் சிக்கி சமுத்திரக்கனியின் நண்பர் பலியாகிறார். தேவா தப்பிக்க விமல் தான் காரணம் என்பது தெரியவர, அவரை வைத்தே தேவாவை சிக்க வைக்கும் சமுத்திரக்கனியின் முயற்சியில் தேவாவின் தம்பி பலியாகிறான்.

தனது தம்பி சாவுக்கு விமல் & கோ தான் காரணம் என தேவா ஆத்திரமாக அவர்களுக்கு வலைவீச, போலீசார் கண்ணில் மண்ணை தூவிவிட்டு எஸ்கேப் ஆகும் விமல் & கோவை சமுத்திரக்கனியும் தேடுகிறார். கேரளாவுக்கு தப்பிச்சென்று பதுங்கும் விமல் குரூப்பை மோப்பம் பிடித்து அங்கேயும் வருகிறான் தேவா. இறுதியில் யார் முடிவு யார் கையில் என்பது க்ளைமாக்ஸ்.

சிட்டியை கொலைக்களமாக மாற்றும் ரவுடி, அவனை அழித்தொழிக்க நடக்கும் என்கவுண்டர் பிளான் இதுதான் மொத்தப்படம்.. இதை ஓரளவு விறுவிறுப்பாகவே இயக்கியுள்ளார் அறிமுக இயக்குனர் நாகேந்திரன். இளங்கன்று பயமறியாது என்பது போல கதாநாயகன் விமல் கூலிப்படை தலைவனுடன் நெருக்கமாகும் காட்சிகள் இன்றைய பல இளைஞர்கள், தங்களை அறியாமல் எப்படி வழி தவறிப்போகிறார்கள் என்பதற்கு உதாரணம்.

லஞ்சம் ஊழல், ரவுடியிசம் இவற்றுக்கெல்லாம் எதிராக குரல் கொடுத்த விஜயகாந்தின் இடத்தை, சமுத்திரக்கனி அவரை அறியாமலே பிடித்துக்கொண்டுள்ளார் என்பதுபோல என்கவுண்டர் ஸ்பெஷலிஸ்ட்டாக மிடுக்கும் கம்பீரமும் கலந்த நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். இனி மக்களை திருத்தவேண்டிய பிரச்சாரத்தை சமுத்திரக்கனி செய்தால் தான் எடுபடும் போல தெரிகிறது.

கதாநாயகியான கீதாவுக்கு, விமலின் பில்டப்பால் கவரப்பட்டு அவரை காதலித்து, கடைசியில் காதலுக்காக ஆபத்தில் மாட்டிக் கொள்ளும் வேடம்..  ஒகே.. அவர் அளவுக்கு சரியாகத்தான் செய்திருக்கிறார். ஈவென்ட் மேனேஜ்மென்ட் நடத்தும் கீதா, சாவு வீட்டில் விமலிடம் மாட்டிக்கொள்வது நல்ல கலாட்டா.

கூலிப்படை தலைவனாக தேவா கனகச்சிதம். மாமூல் வாங்குவதையே தொழிலாக கொண்ட போலீசாரான எம்.எஸ்.பாஸ்கர், இமான் அண்ணாச்சி, சிங்கமுத்து கதாபாத்திரங்கள் காவல்துறையில் இன்று நடமாடும் சில மனித ஜந்துக்களை அப்படியே பிரதிபலிக்கின்றன.

ரவுடிகளை அழிக்கவேண்டியதன் அவசியத்தை, என்கவுண்டரின் நியாயத்தை அழுத்தமாக பதிவு செய்ய முயன்றிருக்கிறார் இயக்குனர் நாகேந்திரன்.. அதற்கேற்றவாறு ஜி.வி.பிரகாஷின் பின்னணி இசையும், ஏகாம்பரத்தின் ஒளிப்பதிவும் காட்சிகளுக்கு கனம் சேர்க்கின்றன.

என்கவுண்டருக்காக சமுத்திரக்கனி நடத்தும் ஆபரேஷன் ஒகே தான். ஆனால் தலைமறைவாக இருக்கும் தேவா, தனது தம்பியின் மரணத்துக்காக வெளிப்பட்டு சுதந்திரமாக நடமாடும்போது போலீஸ் எதுவும் செய்யாமல் இருப்பது ஏன்..? தேவாவை என்கவுண்டர் பண்ணும் முயற்சியின்போது சந்தடிசாக்கில் தப்பிக்கும் விமல் & கோவை சமுத்திரக்கனி கவனிக்காமல் தப்பவிடுவது ஏன்..? மொபைல் நம்பரை வைத்து ஆளை ட்ரேஸ் செய்யும் சமுத்திரக்கனி, தலைமறைவாக இருக்கும் விமலுடன் செல்போனில் பேசிய கீதா, சென்னையில் இருந்து கிளம்பி ஊட்டிக்கு செல்லும் வரை காணாமல் போவது ஏன்..?

இப்படி இன்னும் சில ‘ஏன்’கள் இருந்தாலும் நம்பி படம் பார்க்கவரும் ரசிகனை ‘காவல்’ ஏமாற்றாது என்று தாராளமாக சொல்லலாம்.