காற்று வெளியிடை – விமர்சனம்

kaatru_veliyidai review

மணிரத்னம் இயக்கத்தில் கார்த்தி.. கேட்கவே புதிதாக இருக்கும் இந்த கூட்டணி ‘காற்று வெளியிடை’யில் என்ன ஜாலம் காட்டியுள்ளார்கள்..?

ஸ்ரீநகர் ராணுவ கேம்ப்பில் பைட்டர் பைலட் என்கிற, போர் விமானத்தின் பைலட் கார்த்தி.. மன்மதன் பணியில் பார்க்கும் பெண்களுக்கெல்லாம் அம்பு விட்டாலும், இவர் மனதை தைப்பது என்னவோ ஸ்ரீநகர் மருத்துவமனைக்கு டாக்டராக வரும் அதிதி தான். கூடவே இறந்துபோன தனது நண்பனின் தங்கை தான் அதிதி என்பதும் தெரியவர இருவருக்கும் ஈர்ப்பு அதிகமாகிறது…

இருவரும் ஒருகட்டத்தில் காதலையும் சொல்லிக்கொள்கிறார்கள். ஆனால் கார்த்தியின் முரட்டுத்தனமான, பிடிவாதமான,. பல நேரங்களில் பெண்ணை பெண் என்று மதிக்காத குணம் அதிதியின் தன்மானத்துடன் அடிக்கடி உரசி அவர் மனதை காயப்படுத்துகிறது.. ஆனால் அந்த சமயங்களில் தனது ரொமான்ஸால் அதிதியை கூல் பண்ணுகிறார் கார்த்தி..

ஒருகட்டத்தில் இது பெரிதாக கார்த்தியை விட்டு விலகி ஸ்ரீநகரை விட்டே வெளியேறுகிறார் அதிதி… இந்தசமயத்தில் கார்கில் போர் வரவே, போரில் ஈடுபடும் கார்த்தியின் விமானம் விபத்துக்குள்ளாகிறது.. துரதிர்ஷ்டவசமாக, கார்த்தி பாகிஸ்தான் நாட்டுக்குள் விழ, அந்நாட்டு சிறையில் அடைக்கப்படுகிறார்.. சிறையில் உள்ள இரு நண்பர்களுடன் தப்பிக்க முயற்சி செய்கிறார் கார்த்தி.

அவரால் தப்பிக்க முடிந்ததா..? மீண்டும் காதலியை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்ததா..? பிரிந்து சென்ற அதிதி என்ன ஆனார்..? என்கிற கேள்விகளுக்கு கடைசி அரைமணி நேரத்தில் விடை சொல்கிறார்கள்..

பைட்டர் பைலட்டாக கார்த்தியின் உருமாற்றம் நம்மை வசீகரிக்கிறது.. அதிதியை தனது காதல் வலையில் விழவைக்கும் காட்சிகள் இளசுகளுக்கு உற்சாக டானிக்காக இருக்கும்.. ஆனால் கிட்டத்தட்ட ஒரு சாடிஸ்ட் பாணியில் அதிதியின் தன்மானத்துடன் அவர் மோதும்போது என்ன தான் அவரது சுபாவம் என்றாலும் கூட, ஒரு கட்டத்திற்கு மேல் நமக்கே கோபத்தை வரவைக்கிறார் கார்த்தி.. ஒரு வேளை இது கூட அவரது கேரக்டருக்கு கிடைத்த வெற்றியாக இருக்கலாம்..

கதைக்கு ஏற்ற பொருத்தமான ஹீரோயினாக அதிதி ராவ் ஹைதரி.. கண்களிலேயே ஆயிரம் கதை பேசுகிறார்.. காதல், கோபம், சிணுங்கல், சீறல், தன்மானம் என எல்லா ரசங்களையும் காட்சிக்கு ஏற்றாற்போல் பிழிந்து கொடுக்கிறார்.. ஆனால் ஒருகட்டத்தில் அதுவுமே திகட்டத்தான் செய்கிறது..

அதிதியின் நண்பர்களாக வரும் ஆர்ஜே பாலாஜி, ருக்மணி ஆகியோருக்கு படம் நெடுக வாய்ப்பு கொடுக்கப்பட்டுள்ளது.. டெல்லி கணேஷ் உட்பட படத்தின் மற்ற துணை பாத்திரங்கள் அளவோடு பயன்படுத்தப்பட்டு இருப்பது சிறப்பு.

ஏ.ஆர்.ரகுமான் இசையில் பாடல்கள் சூப்பர் என்று ஏற்றுக்கொள்பவர்களுக்கு சூப்பர் தான்.. ஆனால் பழைய ரஹ்மானை இனி பார்க்க முடியாதா என்பதே பல ரசிகர்களின் குரலாக கேட்க முடிகிறது.. படத்தின் டபுள் ப்ளஸ் என்றால் அது ஒளிப்பதிவு தான் ஸ்ரீநகரின் கலவரமூட்டாத இயற்கை அழகை மட்டுமே அள்ளி எடுத்து வந்துள்ளது ரவிவர்மனின் கேமரா..

இது மணிரத்னத்தின் படம் என்பதற்கான கட்டிய கூறுதல் ஒவ்வொரு காட்சியிலும் நன்றாகவே வெளிப்பட்டுள்ளது.. இன்றைய இளைஞர்கள், அதிலும் நல்ல பொறுப்பான பதவிகளில் இருக்கும் ஆணும் பெண்ணும் கூட காதலை எந்தவித கண்ணோட்டத்தில் அணுகுகிறார்கள் என்பதை தனது பாணியிலேயே சொல்லி இருக்கிறார் மணிரத்னம்..

காதலோ, காதலியோ நமக்கு கிடைக்க மாட்டாளா என ஏங்கித்திரியும் ஆண்மகன் கூட காதல் கை கூடிய பின் அவளை அடிமை மாதிரி நடத்த முற்படும் யதார்த்தத்தை கார்த்தியின் கேரக்டர் வாயிலாக படம் நெடுக சொல்லி கொண்டே வருகிறார் மணிரத்னம்.. கார்த்தியின் அந்த குண நலன்களுக்கு அவரது குடும்பத்தின் பின்னணியையும் கோடிட்டு காட்டியிருக்கிறார்.. இருந்தாலும் பல கேள்விகள் நமக்குள் எழவே செய்கின்றன.. பாகிஸ்தான் சிறையிலிருந்து தப்பி வரும்போது அந்த ராணுவ வீரர்களின் சேசிங் செம போங்கு ஆட்டம்.. இன்னும் கொஞ்சம் மாத்தி யோசித்திருக்கலாம்..

இருந்தாலும் இளசுகள் படித்துக்கொள்ள பல நூறு பாடங்கள் இந்தப்படத்தில் இருக்கின்றன என்பது மறுக்க முடியாத உண்மை.