காற்றின் மொழி – விமர்சனம்

வழக்கம்போல வெள்ளிக்கிழமை அன்று ஆதரவற்ற முதியோர் காப்பகத்திற்குள் நுழைந்தார்கள் கவி, ஷாலு, பப்பி மூவரும்.. அங்கிருந்த பார்க்கில் உலாவிகொண்டிருந்த முதியவர்கள் அனைவரும் இவர்களை நோக்கி ஓடிவந்தனர். இவர்கள் வீட்டிலிருந்து கொண்டுவரும் சுவையான பட்சணங்களை ருசி பார்ப்பது ஒருபுறம் என்றால், வெள்ளிக்கிழமை ரிலீஸாகும் படங்களை முதல் நாளே பார்த்துவிடுகிறார்கள் என்பதால் அவர்கள் பார்த்த நல்ல படங்களை கதையாக கேட்டு ரசிக்கலாம் என்பது இன்னொரு காரணம்.

இந்தவாரம் ஜோதிகா நடித்த காற்றின் மொழி ரிலீஸாகி இருக்கிறது அல்லவா..? அதனால் ரொம்பவே ஆவலுடன் இந்த மூவரின் முன்னால் புல்தரையில் அமர்ந்துகொண்டு தின்பண்டங்களை ருசிபார்க்க ஆரம்பித்தார்கள். சீதா மாமி தான் முதலில் ஆரம்பித்தார்.

சீதா மாமி : ஏண்டிம்மா கவி.. ஜோதிகா படம் எப்படி இருக்கு..? மொழி படத்தை என் வீட்டுக்கராரோட சேர்ந்து பார்த்தேன்.. அவர் போனதுக்கு அப்புறமா தான் இங்க கொண்டுவந்து விட்டுட்டாங்களே.. அது அருமையான படம்..இன்னும் மனசுலேயே நிக்குது.. இதுல என்னடிம்மா கதை..?

கவி : மாமி, வேலைக்கு போகாம குடும்பத்தை மட்டுமா ஓடி ஓடி கவனிச்சுட்டு இருக்கிற பெண்கள் மனசுல தனக்கு புடிச்ச வேளைக்கு போகணும்னு ஒரு ஏக்கம் இருக்கும் இல்லையா..? உங்கள்ள யாருக்காச்சும் அப்படி இருந்திருக்கும் தானே..?

என கவி கேட்க பல பேர் வேகமாக கையை தூக்கினார்கள்.

கவி : அட.. இத்தனை பேரா…? சரிதான்.. படத்துல சொல்றது உண்மைதான். உங்களுக்கு சின்ன வயசுல இருந்த ஆசை மாதிரி தான் கணவர் விதார்த், பத்து வயது மகன்னு அழகான குடும்பத்தை நிர்வகிக்கிற ஜோதிகாவுக்கும் ஏதாவது வேலைக்கு போகணும், சொந்தமா பிசினஸ் பண்ணனும்னு ஆசை. ஆனா அவங்க பிளஸ் டூ வரைக்கும் படிச்சவங்கன்னு சொல்லி அவங்க அப்பாவும், பேங்க்ல வேலை பார்க்கிற ஜோதிகாவோட டிவின்ஸ் அக்காக்களுமே அவரை மட்டம் தட்டி பேசுறாங்க..

ராஜம்மா பாட்டி : அடப்பாவிகளா பெத்தவங்களும் கூடப்பிறந்தவங்களுமே இப்படி பேசுனா, அப்ப விதார்த் இன்னும் மட்டம் தட்டுவாரே..?

பப்பி ; அதான் இல்ல.. அவரு பெரிசா சப்போர்ட்டும் பண்ணலை.. அதை சமயம் அதை எதிர்க்கவும் இல்ல. ஜாலியான ஆளுதான். இந்த சமயத்துல ஒரு எப்.எம்.ரேடியோவுல ஜோதிகாவோட பேச்சு திறமையை பார்த்து ரேடியோ ஜாக்கியா வேலை கிடைக்குது. எப்.எம். சி.ஈ.ஒ லட்சுமி மஞ்சு ஜோதிகாவை நம்பி ‘மதுவோடு பேசுங்கள்’னு ஒரு நிகழ்ச்சியை ஒப்படைக்கிறார்.

விசாலம் மாமி : மதுவோடு பேசுங்கன்னு சொன்னா இது என்ன பேரே ஒரு மாதிரி இருக்கே..

ஷாலு : ஐயோ மாமி, இந்த நிகழ்ச்சியை நடத்துற ஜோதிகாவுக்கு மது’ன்னு ஒரு புனைப்பெயர் வச்சு அந்தப்பேர்ல நிகழ்ச்சி நடத்துறாங்க.. ஆனா நிகழ்ச்சி நடக்குறது தினம் நைட் 1௦ மணிக்கு மேல.. வீடு திரும்புறதுக்கு லேட் நைட் ஆகியிரும்.

ராஜம்மா : அப்படின்னா விதார்த் ஒத்துக்க மாட்டாரே..?

கவி : அவரும் சந்தோஷமாத்தான் அனுப்பி வைக்கிறாரு.. ஆனா இந்த நிகழ்ச்சியே ஆண்கள் தங்களோட சில மன பிரச்சனைகளை சொல்றதும், அவங்களுகேத்த மாதிரி ஒரு நல்ல தீர்வை ஜோதிகா சொல்றதும் தான். ஆனா ஆண்கள் கிட்ட இருந்து சங்கடப்படுற மாதிரியான கேள்விகளா வருது.. வீட்டுல இருந்து இதை கேட்குற விதார்த் நம்ம மனைவிகிட்ட யார் யாரோ என்ன என்ன கண்றாவி கேள்விகளா கேட்குறாங்களேன்னு ஷாக் ஆகியிடுறாரு.

கஸ்தூரி பாட்டி : மறுநாளே வேலையை விட சோலி இருப்பாரே..

பப்பி : அப்படில்லாம் சொல்லல.. அதேசமயம் ஜோதிகா இப்படி லேட் நைட்ல வேலைக்கு போயிட்டு வர்றது ஒரு பக்கமும் அவர் மத்த ஆண்களோட பேசுறது ஒரு பக்கமும்னு நாளுக்கு நாள் இவங்க குடும்பத்துல ஒரு புது சிக்கலை உண்டாக்குது.. இதனால் நிகழ்ச்சி ஆரம்பிச்ச ஒரு மாசத்துல சூப்பர் ஹிட்டா ஆனாலும் ஜோதிகா அந்த வேலையை விடவேண்டிய நிர்ப்பந்தம் தானா உருவாகிறது.

சீதா மாமி : ஜோதிகா வேலையை விட்டுட்டாரா.. இல்ல அவரோட பிடிவாதத்தால் குடும்ப வாழ்க்கை குலைஞ்சு போச்சா அப்படிங்கிறது தானே மீதிக்கதை..

ஷாலு : சரியா சொன்னீங்க மாமி..

சீதா மாமி : அதெல்லாம் நாங்க தியேட்டர்ல பாத்துக்குறோம்.. என்ன அப்படி பாக்குற..? வர்ற திங்கள் கிழமை எங்க எல்லோரையும் ‘காற்றின் மொழி’ படத்துக்கு கூட்டிட்டு போறதுக்கு ஏற்கனவே சூர்யா ரசிகர் நற்பணி மன்றம் மூலமா ஏற்பாடு செஞ்சிட்டாங்க. என்ன சஸ்பென்சா இருக்கா சரி படத்துல நடிச்சவங்க பத்தி சொல்லுங்கப்பா.

கவி : இதுக்கு முன்னாடி ’36 வயதினிலே, மகளிர் மட்டும், செக்க சிவந்த வானம்’ னு ஜோதிகா ரீ என்ட்ரி ஆகியிருந்தாலும், நாம தொண்ணூறுகள்ல பார்த்து ரசிச்ச அந்த துறுதுறு ஜோதிகாவை இந்தப்படத்துல தான் மீண்டும் முழுசா பார்க்க முடியுது. வேலைக்கு போகணும்கிற அவங்களோட ஏக்கத்தை அந்த கண்கள்லேயே என்ன அழகா வெளிப்படுத்துறாங்க தெரியுமா..?

பப்பி : அத விடுங்க.. அந்த நிகழ்ச்சியை அவங்க நடத்துற விதம் இருக்கே.. சான்சே இல்ல.. கூடவே வசனகர்த்தா சப்போர்ட்டும் இருக்கிறதால சும்மா பிரிச்சி மேஞ்சிருக்காங்க..

ஷாலு : ஆனா கடைசி இருபது நிமிஷம் உங்கள அப்படியே கண் கலங்க வச்சிருவாங்க… எங்க பக்கத்து சீட்டுல உக்கார்ந்திருந்த ரெண்டு மூணு ஆண்களே அப்பப்ப கண்களை துடைசிக்கிட்டாங்க.. எனக்கே ஆச்சர்யமா போச்சு.

ராஜம்மா : ஜோதிகாவை பூஸ்ட் அப் பண்றதுக்காக விதார்த்தை டம்மி ஆக்கிருப்பாங்களே..

கவி : வழக்கமா ஹீரோயின் சம்பந்தப்பட சில படங்கள்ல அப்படித்தான் பண்ணுனுவங்கா.. ஆனா இதுல ஜோதிகா அளவுக்கு விதார்த்துக்கும் நல்ல முக்கியத்துவம் கொடுத்திருக்காங்க.. அவரும் அதுக்கேத்த மாதிரி தன்னோட கோபம் ஆசை, ரொமான்ஸ், விரக்தின்னு கலந்துகட்டி வெளிப்படுத்தியிருக்கார். குறிப்பா வேலைக்கு போயிட்டு வந்ததும் தனக்கு மனைவியோட கிடைக்கிற அந்த அன்பான நேரம் மிஸ்ஸாகிறதை அவர் வெளிப்படுத்துவார் பாருங்க.. அது ஒவ்வொரு சராசரி கணவனோட உணர்வாத்தான் நமக்கு தெரியுது. அப்புறம் சிம்பு கூட ஒரு சீன்ல கெஸ்ட் ரோல்ல வந்துட்டு போறாரு.. அஞ்சு நிமிஷம்னாலும் அதுலயும் அவரோட டச்சிங்கை காட்டிட்டு போறாரு மனுஷன்.

விசாலம் மாமி : ராதாமோகன் படம்னாலே அவரோட ரெகுலர் ஆட்களும் இருப்பாங்களே..?

ஷாலு : அவங்க இல்லாமலா.. ஆனா ஒவ்வொருத்தருக்கும் சும்மா ‘நச்’சுன்னு கேரக்டரும் அதுக்கேத்த மாதிரி காட்சிகளையும் கொடுத்திருக்கார். எந்நேரமும் கடுகடுன்னு வர்ற எம்.எஸ்.பாஸ்கர் ஒருகட்டத்துல நம்மை அப்படியே உருகி அழ வச்சிடுறாரு. என்ன மாதிரி நடிகன்யா அவரு..?

பப்பி : அதேமாதிரி டிபார்ட்மென்ட் ஸ்டோர் ஓனரா வர்ற மயில்சாமியும் அவரோட துடைப்பக்கட்ட காமெடியும் சிரிச்சு சிரிச்சு வயித்துவலியே வந்துரும். ஆனா மனோபாலா காமெடி சிரிக்க வசாலும், அவரு வர வர இன்னொரு வெண்ணிற ஆடை மூர்த்தியா மாறிக்கிட்டே வர்றாரு.. பாத்து செய்யுங்கப்பா..

கவி : அப்புறமா நம்ம குமரவேலு.. எப்.எம்ல முக்கியமான போஸ்டிங்ல உக்கார்ந்துட்டு அதுல தன்னோட வேலையை ரொம்ப அழகா செஞ்சிருக்கார். ‘டாடி டவுட்டு’ சரவணன் ரெண்டு சீன்ல வந்தாலும் ஸ்கோர் பண்ணிடுறார்.

ராஜம்மா : அந்த ட்ரெய்லரை டிவில போட்டப்ப பார்த்தேன்.. ஸ்ருதிஹாசன் இந்தப்படத்துல நடிச்சிருக்கா என்ன..?

ஷாலு : அய்யோ பாட்டி.. அது ஸ்ருதிஹாசன் இல்ல.. தெலுங்குல நடிகர் மோகன்பாபு இருக்கார்ல அவரோட மகள் லட்சுமி மஞ்சு தான்.. அசப்புல ஸ்ருதிஹாசன் மாதிரியே இருக்கிற இவரு எப்.எம். சி.ஈ.ஒவா வர்றாரு.. அந்த கேரக்டர்ல அவரை தவிர வேற யாரையும் நினைச்சு பார்க்க முடியல.. கதாநாயகியா மாத்துறேன்னு இனி வர்றவங்க அவரை வீனடிச்சிடாம, நல்ல கெத்தான கேரக்டர்களா கொடுத்தா தமிழ் சினிமாவுல ஒரு ரவுண்டு வருவாரு.

பப்பி : அப்புறம் ஜோதிகாவோட அக்காக்களா வர்ற அந்த இரட்டை சகோதரிகள் பத்தி சொல்லியே ஆகணும். செம க்யூட்டா இருக்காங்க ரெண்டு பேருமே. ஆனா அவங்க ரெண்டு பேரும் மட்டுமல்லாம, அவங்க அப்பா மோகன்ராமும் கூடவே சேர்ந்துக்கிட்டு ஜோதிகாவ மட்டம் தட்டுறது கொஞ்சம் ஓவர்னாலும், பல வீடுகள்ல இது நடக்கத்தான் செய்யுது.

கவி ; ராதாமோகன் படம்னா குடும்பத்தோட பார்க்கலாம்கிற உத்தரவாதம் எப்பவுமே இருக்கும். இந்தப்படத்துல மட்டும் அதை மீறிடுவாரா என்ன..?

பப்பி : அதேமாதிரி மியூசிக் டைரக்டர் ஏ.ஹெச்.காஷிப் புதியவர்னாலும் பின்னணி இசையில அழகா படத்தை நகர்த்தி இருக்கார். மனிதர்களுக்கு என்னனென்ன மாதிரியெல்லாம் உளவியல் பிரச்சனை இருக்கு அப்படிங்கிறத ஜோதிகா நடத்துற அந்த எப் எம் நிகழ்ச்சில நாம கேட்குறப்ப இப்படில்லாம் கூட பிரச்சனைகள் இருக்கான்னு ஆச்சர்யம் தான் வருது. அதேசமயம் ஜோதிகா அதுக்க அவ்வளவு அழகா தெளிவா தீர்வு சொல்ற விதமும் செம.

கவி : கணவன் மனைவி வேலைக்கு போகிறதால கணவனுக்கு, குழந்தைகளுக்கு ஏற்படுற சிக்கல்களையும் நியாயமா அலசியிருக்கார் இயக்குனர் ராதாமோகன். அதேசமயம் மாத்தி யோசிச்சா நல்ல தீர்வும் கிடைக்கும் பெண்கள் தங்களோட கனவுகளையும் விட்டுக்கொடுக்க தேவையில்லைங்கிறதையும் அழுத்தமா சொல்லியிருக்கார் ராதாமோகன்.

ஷாலு : மொத்தத்துல சொல்லப்போனா ராதாமோகனோட இந்த காற்றின் மொழி பல நாட்களுக்கு நம்மோட மனசுக்குள்ள ஒலிச்சுக்கிட்டே இருக்கும்.