காத்திருப்போர் பட்டியல் ; விமர்சனம்

kathiruppor pattiyal

தந்தை கோடீஸ்வரர் என்றாலும் தன் சம்பாத்தியத்தில் சாப்பிடவேண்டும் என்கிற சுயகெளரவம் கொண்டவர் நந்திதா.. வேலையில்லாமல் வெட்டியாக சுற்றும் இளைஞன் சச்சின் மணியுடன் போனில் பேசிப்பேசி அது காதலாக மாறுகிறது. ஒருகட்டத்தில் அவர் வேலையில்லாதவர் என தெரிந்தும் அவரை மன்னிக்கும் நந்திதா, நல்ல வேலையுடன் தன் தந்தையிடம் வந்து பெண் கேட்க சொல்கிறார்.

ஆனால் டுபாக்கூர் சச்சின் மணியோ, சித்ரா லட்சுமணனிடம் சென்று, வேலைக்கு சேர்கிறார். நந்திதாவின் அப்பாதான் அவர் என தெரியாமல் கோடீஸ்வர வீட்டு பெண்ணை கல்யாணம் செய்யப்போகிறேன் என்று அவரின் உதவியுடன் வேலை பார்ப்பதாக போங்கு ஆட்டம் ஆடுகிறார்.. தனது மகளைத்தான் காதலிக்கிறார் என தெரியாமல் கமிஷனுக்கு ஆசைப்பட்டு உதவுகிறார் நந்திதாவின் தந்தை..

ஒருகட்டத்தில் இது தந்தை மகள் இருவருக்கும் தெரியவர நந்திதாவுக்கு வேறு மாப்பிள்ளை பார்த்து நிச்சயிக்கிறார் அவரது தந்தை. பாண்டிச்சேரியில் நடக்கும் திருமணத்தை தடுத்து நிறுத்துவதற்காக எலெக்ட்ரிக் ட்ரெய்னில் வரும்போது தாம்பரம் ஸ்டேஷனில், கண்டிப்புக்கு பெயர்போன ரயில்வே போலீஸ் அதிகாரியான அருள்தாசிடம் பெட்டி கேஸில் சிக்குகிறார் சச்சின் மணி.

அவரை கோர்ட்டில் ஆஜராக்கி விடுவிப்பதற்குள் அங்கே காதலியின் திருமணம் நடந்துவிடும் இக்கட்டான நிலை. இந்தநிலையில் நாயகனால் என்ன செய்ய முடிந்தது.. காதலன் போலீசில் சிக்கிவிட்டான் என அறிந்த காதலி நந்திதா என்ன முடிவெடுத்தார் என்பது க்ளைமாக்ஸ்.

கதைக்காக ரொம்பவெல்லாம் மெனெக்கெடவில்லை.. ஒரு காதல் கலாட்டா-ரயில்வே ஸ்டேஷன் என இரண்டு ஏரியாக்களில் மாறி மாறி பயணித்து ஓரளவு சுவாரஸ்யம் மூட்ட முயற்சித்திருக்கிறார்கள். இந்தக்கதைக்கு பொருத்தமான கேரக்டர் தான் சச்சின் மணிக்கு.. அதை நிறைவாக செய்திருக்கிறார்.. நாயகனையே ஓவர்டேக் செய்யும் விதமாக அதிக காட்சிகளில் இடம்பிடித்து நடிப்பில் கலகலப்பூட்டுகிறார் நந்திதா ஸ்வேதா.. அதிலும் க்ளைமாக்ஸ் காட்சியில் நந்திதா அடிக்கும் ட்விஸ்ட் செம.

இவர்களை தாண்டி முக்கியமான ஆளாக, இன்னொரு ஹீரோவாக மிரட்டுகிறார் அருள்தாஸ்.. ரயில்வே போலீசுக்கே இருக்கும் நீண்டநாள் ஆதங்கத்தை அழகாக காட்சிக்கு காட்சிக்கு வெளிப்படுத்தியுள்ளார். அவரது கேரக்டர் வடிவமைப்பு சூப்பர்.

மொட்ட ராஜேந்திரன் கொஞ்ச நேரமே வந்தாலும் அவரை வைத்து பின்னப்பட்டுள்ள ட்விஸ்ட் பகீர் சிரிப்பை வரவழைக்கிறது. ஸ்டேஷனில் ஹீரோவுடன் மாட்டிக்கொண்ட குரூப்பில் மயில்சாமி, அப்புக்குட்டி, சென்றாயன், மனோபாலா உள்ளிட்ட சிலர் கதையை கலகலப்பாக நகர்த்த உதவுகிறார்கள். குறிப்பாக சென்றாயன் மீட்டரை மீறாமல் காமெடி செய்திருப்பது பாராட்டுக்குரியது.

ரயில்வே போலீஸ் அதிகாரியின் கதையில் பார்வையை நகர்த்தியுள்ள இயக்குனர் பாலையா டி.ராஜசேகரின் புதிய ஐடியாவுக்கு சபாஷ் சொல்லலாம்.. ஆரம்ப காட்சிகள் வழக்கமான கிளிஷேக்கள் போல இருந்தாலும் க்ளைமாக்சில் ‘அட’ என ஆச்சர்யப்பட வைத்து அனுப்பிவைக்கிறார் இயக்குனர் பாலையா டி.ராஜசேகர்.