சூப்பர்ஸ்டார் ரஜினி நடிப்பில் பா.ரஞ்சித் இயக்கியுள்ள ‘காலா’ படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று மாலை சென்னையில் நடந்தது.
இந்த விழாவில் ரஜினி பேசும்போது, “ரோபோ படத்திற்கு பிறகு உடல்நிலை சரியில்லாமல் போனது. மருத்துவ உதவியாலும் ரசிகர்களின் பிரார்த்தனையாலும் மீண்டும் வந்தேன். மக்களும், கடவுளும் என்னை தொடர்ந்து ஓட வைத்துக் கொண்டிருக்கிறார்கள்.
தென்னிந்திய நதிகள் இணைப்பு என் வாழ்நாள் கனவு. அது நிறைவேறி நான் கண்மூடினால் கூட கவலையில்லை. தண்ணீர் பிரச்னை என்றால் என்னை அறியாமலும் ஆர்வம் வந்துவிடுகிறது. கங்கை நதியை பார்ப்பதற்காகவே நான் இமயமலை செல்கிறேன்
ரசிகர்களை மனதை வைத்து தான் படத்தின் கதையை கேட்கிறேன். கபாலி படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. காலா படம் நிச்சயம் வித்தியாசமாக இருக்கும். காலா அரசியல் படம் அல்ல, ஆனால் அரசியல் இருக்கிறது. ரஞ்சித் இயக்குநராக மட்டுமல்லாது, நிச்சயம் பெரிய ஆளாக வருவார். தன்னை சுற்றி இருப்பவர்களும் நன்றாக வர வேண்டும் என எண்ணுபவர். நிச்சயம் ரஞ்சித்திற்கு ஒரு பெரிய இடம் காத்திருக்கிறது. ரஞ்சித் திட்டமிட்டு படத்தை முடிப்பவர், தயாரிப்பாளர்களின் இயக்குநர்.
நான் நடித்த இத்தனை ஆண்டுகளில் இவ்வளவு படத்தில் இரண்டு வில்லன்கள் தான் என்னை கவர்ந்தவர்கள் ஒன்று பாட்ஷா ஆண்டனி, மற்றொருவர் படையப்பா நீலாம்பரி. தற்போது அந்த வரிசையில் காலாவின் நானா படேக்கரும் இணைந்துள்ளார். அவ்வளவு பிரமாதமாக நடித்திருக்கிறார்.
ஆக்கப்பூர்வமாக சிந்தியுங்கள் கடமை இருக்கு, நேரம் பார்த்து வருவேன். நிச்சயம் தமிழ்நாட்டிற்கு நல்ல நேரம் பிறக்கும், என அரசியல் கலக்காமல் சினிமாவை பற்றி மட்டுமே பேசினார் ரஜினி..
இயக்குநர் ரஞ்சித் பேசும்போது, “மீண்டும் இப்படி ஒரு மேடை அமைத்து தந்த ரஜினிக்கு நன்றி. ரஜினியை சூப்பர் ஸ்டாராக அனைவரும் பார்த்திருப்போம். அதையும் தாண்டி அவரின் எளிமை, அவருக்குள் இருக்கும் மிகப்பெரிய பவரை வெளிக்கொண்டு வர வேண்டும் என எண்ணினேன். காலாவில் ரஜினியின் பவரை பார்க்கலாம். காலா ஒரு கமர்ஷியல் படம் தான். அதில் மக்களின் பிரச்னைகளை பேச வேண்டும் என ஆசைப்பட்டேன். ரஜினியின் வழக்கமான படமாக காலா இருக்காது” என கூறினார்.
இந்தப்படத்தின் தயாரிப்பாளரான தனுஷ் பேசும்போது, “ தலைவரை பார்த்து வாழ்க்கையில் பல விஷயங்களை கற்றுக்கொண்டேன்.. வாழ்க்கையில் பிரபலமாவதற்கு இரண்டு வழி இருக்கு. ஒண்ணு கஷ்டப்பட்டு முன்னேறி பெரிய இடத்தை அடைவது மற்றொன்று அந்த இடத்தில் இருக்கும் ஒருவரைத் தாக்கி பேசி பிரபலம் அடைவது. ஆனாலும், பழுத்த மரம்தான் கல்லடி படும் என்று பொறுமை காத்து வருகிறார் தலைவர் இதில் அவரது பொறுமையைக் கற்றுக் கொண்டேன்.
சமீபகாலமாகப் பலரும் மனது வருத்தப்படும்படி பேசிக்கொண்டிருக்கிறார்கள். அவர்களையும் இசை வெளியீட்டு விழாவிற்கு அழைக்கவேண்டுமா என்று கேட்டபோது ‘எல்லாரும் நண்பர்கள்தான் எல்லாரையும் கூப்பிடுங்கள்” என பெருந்தன்மையாக கூறினார். அவரிடமிருந்து பெருந்தன்மையும், மன்னிக்கிற குணத்தையும் கத்துக்கிட்டேன். முதலில் வில்லன், குணசித்திர நடிகர், பிறகு ஹீரோ, ஸ்டார், ஸ்டைல் மன்னன், சூப்பர் ஸ்டார், இன்று தலைவர்.. நாளை..? உங்களைப்போல் நானும் காத்திருக்கிறேன்” என்று கூறி அரங்கை அதிரவைத்தார் தனுஷ்.