காடு – விமர்சனம்

 

காட்டில் விறகு வெட்டி அதை சைக்கிளில் கட்டிச்சென்று ஊருக்குள் விற்று பிழைப்பு நடத்துபவர் விதார்த்.. அவரது நண்பரான முத்துகுமாருக்கோ பாரஸ்ட் ஆபிசராக வேண்டும் என்பது லட்சியம்.. அதற்கு லஞ்சம் கொடுக்க வேண்டும் என்பதால் ஒருகட்டத்தில் அந்தப்பணத்தை சம்பாதிக்க மரம் கடத்தலுக்கு துணைபோகும் முத்துக்குமார் வன அதிகாரிகளிடம் மாட்டிக்கொள்கிறார்.

அவர்களின் ஆலோசனைப்படி தனக்கு பதிலாக விதார்த்தை குற்றத்தை ஒப்புக்கொள்ள வைத்து, அவரை ஜெயிலுக்கு அனுப்புவதோடு உயர் அதிகாரிகளை காக்கா பிடித்து பாரஸ்ட் அதிகாரியாகவும் மாறுகிறார் முத்துக்குமார்.. ஆனால் தனக்கு உதவிய நண்பனுக்கும் தனது மக்களுக்கும் துரோகம் செய்து காட்டின் வளங்களை கொள்ளையடிக்க ஆரம்பிக்கிறார்..

சமூகப்போராளியாக ஜெயிலில் அறிமுகமாகும் சமுத்திரக்கனியின் வழி காட்டுதலின்படி  விடுதலையாகி வெளியே வரும் விதார்த் முத்துக்குமாரின் மரத்திருட்டை தடுக்கிறார். ஆனால் காடுகளை பாதுகாக்கிறேன் என்கிற பெயரில், தனக்கு இடைஞ்சலாக இருக்கும் ஊர்மக்களை வெளியேற்றிவிட்டு, விதார்த்தையும் அதிகாரத்தை பயன்படுத்தி கொல்ல திட்டம் போடுகிறார் முத்துக்குமார்..  ஆனால் இயற்கை என்ன முடிவு செய்தது என்பதுதான் க்ளைமாக்ஸ்.

இயற்கையுடன் இணைந்து வாழ்பவர்களைவிட இயற்கையை பாதுகாப்பவர்கள் வேறு யார் இருக்க முடியும் என அதிகார வர்க்கத்திற்கு  கேள்வி எழுப்பியுள்ளது இந்த ‘காடு’. விறகுவெட்டியாக வரும் விதார்த், நண்பன் தனக்கு துரோகம் செய்து அதிகாரியாக மாறி தனக்கு எதிராக மட்டுமல்ல, இயற்கைக்கே எதிராக திரும்புவது வெகுண்டு எழுந்து போராடுவது, ஜெயிலில் சமுத்திரக்கனியின் உபதேசங்கள் கேட்டு போர்க்குணம் கொள்வது என புது பரிமாணத்தில் பயணிக்கிறார். மரங்களுக்கும் உயிர் உண்டு என காட்டை பாதுகாக்கும் தனது லட்சியத்தை ஒவ்வொரு காட்சியிலும் அழுத்தமாக பதிவு செய்திருக்கிறார்.

சமூகப்போராளி வேடமா.. அதற்கு சமுத்திரக்கனியை விட்டால் யார் இருக்கிறார் என்று சொல்லுமளவுக்கு ஒரு வழிகாட்டும் தலைவனின் நேர்த்தி சமுத்திரக்கனியின் நடிப்பில்.. அவரது முடிவு தான் ஏற்றுக்கொள்ளவே கஷ்டமாக இருக்கிறது.

நல்லவனாக இருந்து சூழ்நிலையால் துரோகியாக மாறும் மாறுபட்ட பாத்திரப்படைப்பில் முத்துக்குமார் ‘பளிச்’சென்று கவனம் ஈர்க்கிறார்.. காட்டை பாதுக்காக, காடுகளை நன்கு அறிந்த தன்னைப்போன்ற ஒருவன் தான் அதிகாரியாக வரவேண்டும் என்கிற அவரது கனவு, அவரது வேலைக்கு கேட்கப்படும் லஞ்சப்பணத்தால் சிதையும்போது அங்கே நேர்மை பிறழ்ந்து, துரோகம் உருவெடுப்பதை சரியாக பிரதிபலிக்கிறார். இயற்கையே அவரது முடிவை தீர்மானிக்கும் இறுதிக்காட்சி, மரங்களை, இயற்கையை அழிப்போருக்கு இயற்கை விடும் எச்சரிகையாகத்தான் தெரிகிறது.

கதாநாயகி சம்ஸ்கிருதி கிராமத்து அழகுடன், தந்தைக்கு உதவியாக ஹோட்டலை கவனித்துக்கொண்டு பேப்பர் போடும் பெண்ணாக சுட்டித்தனமான நடிப்பால் கவர்ந்தாலும் பள்ளி மாணவியான அவர் காதல் வயப்படுவதுபோல காட்டியிருப்பதை தவிர்த்திருக்கலாம்.. அதிலும் விதார்த் அவரிடம் உள்ளாடை பற்றி பேசும் காட்சி சென்சாரின் கத்திரிக்கு எப்படி தப்பியதோ தெரியவில்லை.

வழக்கமாக சிட்டி கமிஷனாராக வரும் ஆடுகளம் நரேன்.. இதில் பாரஸ்ட் அதிகாரி.. போச்ட்டிங்க்கில் தான் வித்தியாசமே தவிர நடிப்பில் அதே மிடுக்கு. தம்பி ராமையா – சிங்கம்புலியின் காமெடியும் நன்றாகவே எடுபடுகிறது.  காடுகளையும் காடு சார்ந்த அழகையும் நேர்த்தியாக படமாக்கியுள்ளது மகேந்திரன் ஜெயராஜுவின் ஒளிப்பதிவு.

நல்லவனாக இருக்கும் ஒருவன் மன நிலை எப்போது தடுமாற்றம் அடைகிறது, எதனால் அடைகிறது, அதற்கு இந்த அரசு எப்படி காரணமாகிறது என்பதையும், எங்கோ ஒரு கல்லூரியில் படித்து தேர்வு எழுதிவிட்டு அதிகாரியாக வருகிறவனை விட, காடுகளை நேசிப்பவர்களை, இயற்கையை சுவாசிப்பவர்களையே அதன் பாதுகாவலர்களாக நியமிக்கவேண்டும் என்கிற வலுவான கோரிக்கையையும் வைத்து சமூக ஆக்கரையிலான படத்தை தந்ததில் கவனம் ஈர்த்திர்க்கிறார் இயக்குனர் ஸ்டாலின் ராமலிங்கம்..