காதலை தவிர வேறொன்றுமில்லை – விமர்சனம்

யுவனுக்கு காதல் என்றாலே பிடிக்காது.. அதனால் வீட்டிற்கு தெரியாமல் காதலிக்கும் காதலர்களை படமெடுத்து டிவி சேனல்களுக்கு அனுப்பி அவர்களை மாட்டிவிடுகிறார். அவரை பழிவாங்க, வேண்டுமென்றே ஒரு பள்ளி மாணவி தனக்கு லவ் மெசேஜ் அனுப்பியதாக யுவனை போலீசில் மாட்டிவிடுகிறார்.

அப்போதுதான் பல வருடங்களுக்கு முன் அவரது அக்காவின் காதல் பிரச்சனையால் யுவன் குடும்பம் மொத்தமும் தற்கொலை செய்துகொண்டது தெரியவருகிறது. அப்படிப்பட்ட யுவனுக்கு பிளேஸ்கூல் டீச்சரான சரண்யா மோகன் மீது காதல் வருகிறது. காதலுக்கு எதிரியல்லாத சரண்யாவோ இவரது காதலை ஏற்க மறுக்கிறார். அதற்கு காரணம் என்கிற வலுவான பிளாஸ்பேக்குடன்(!) யுவனின் காதலை சரண்யா மோகன் ஏற்றாரா என்பதுதான் க்ளைமாக்ஸ்..

ஆசிரியர்களையும் மாணவர்களையும் ஒழுக்கசீலர்களாக காட்டி மற்றவர்களும் இப்படி நடந்துகொள்ளவேண்டும் என படம் எடுப்பது ஒரு வகை.. அவர்கள் இருதரப்பினர்களையும் கேவலமானவர்களாக காட்டி இப்படியெல்லாம் நடந்துகொள்ள கூடாது என படம் காட்டுவது இன்னொரு வகை. இதல் இரண்டாவது வகையை தேர்ந்தெடுத்ததில் தான் கோட்டைவிட்டிருக்கிறார் இயக்குனர் செல்வபாரதி..

இதற்கு முன் வந்த படங்களில் மாணவர்களையும் ஆசிரியர்களையும் இந்த அளவுக்கு மோசமாக சித்தரித்து ஒரு படம் வந்திருக்குமா என்பது சந்தேகம் தான்.. காட்சி சித்தரிப்புகள் அவ்வளவு மோசம்.. டியூசன் வாத்தியாரை மக்கு சாம்பிராணியாக காட்டுவது, டியூசன் மாணவர்கள் அனைவரையும் பிஞ்சிலேயே பழுத்தவர்களாக காட்டுவது என அனைத்து கோமாளித்தனங்களும் இதில் உண்டு..

படத்தில் வரும் எல்லா பையன்களுமே சின்ன வயசிலேயே பெண்களை சைட் அடிக்கிறார்கள்.. காதலிக்கிறார்கள்.. வயதுக்கு மீறிய காதல் வசனங்கள் பேசுகிறார்கள்… அதில் ஒரு பையன் கேட்கிறான்.. ஏன் டீச்சர் நீங்கள் உயிரோடு இருப்பவர்களை காதலிக்கவே மாட்டீர்களா என்று..

எட்டாம் வகுப்பு படிக்கும் மாணவிகள் கூட படிப்பைத்தவிர மொபைல்போனில் தங்களுக்கு பிடித்த பையன்களுடன் கடலை போடுகிறார்கள்.. அட.. இன்றைய காலகட்டத்தில் நடைமுறையில் அப்படி இருந்தாலும் அதை அப்படியே அப்பட்டமாகவா காட்டுவது..? அதிலும் ஆசிரியர் தினத்தன்று இந்தப்படம் வெளியாகி இருப்பதுதான் ஆச்சர்யமான விஷயம்..

விஜய்யை வைத்து மூன்று படங்களை எடுத்த இயக்குனரா இந்தபடத்தை இயக்கியுள்ளார் என்கிற அதிர்ச்சி படம் முடிந்தபின்பும் விலக மறுக்கிறது. படத்தில் காதலும் இல்லை… காதலையும் பள்ளி மாணவர்களையும் ஆசிரியர்களையும் மிக மோசமாக சித்தரித்திருப்பதை தவிர வேறொன்றுமில்லை.